2014-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ராணுவத்தின் பிடியில் இருந்து வரும் தாய்லாந்தில் முதன்முறையாக நேற்று பொதுத்தேர்தல் நடைப்பெற்றது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் அதன் முடிவுகளை முழுமையாக வெளியிடாமல் இருப்பதால் அங்கு குழப்பம் நிலவுவருகிறது.
2001-லிருந்து தாய்லாந்தில் நடைப்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் ப்யு தாய் கட்சியைச் சேர்ந்த பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களே வெற்றி பெற்று வந்தார்கள். இதனையடுத்து 2014ல் அவரின் ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து தாய்லாந்தில் ராணுவ ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் கடந்த ஞாயிறு(மார்ச்,24) அன்று முதன்முறையாக பொதுத்தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் 90% வாக்குப்பதிவு முடிந்தபிறகு தாய்லாந்தை உள்ள பாலங் பிரச்சா ரத் கட்சி 7.6 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. முழு தேர்தல் முடிவுகளையும் காரணமே ஏதும்கூறாமல் வெளியிடப்படாமல் தாமதமாகி வருகின்றது.
இதனையடுத்து ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி தேர்தல் முடிவுகளில் முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் முதலில் கூறியது. இதனால் பல்வேறு உள்ளூர் ஊடகங்களும் தேர்தல் ஆணையம் கூறிய இந்த எண்ணிக்கைகளை மேற்கோள்காட்டி ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வென்றிருக்கின்றன என்று வெவ்வேறு எண்ணிக்கைகளை கூறிவருகின்றன. இந்த எண்ணிகைகளின்படி தற்போதைய பிரதமர் ஜெனரல் ப்ரயுத் சான்-ஒகாவின் தலைமையில் அரசு அமைக்கப்படவேண்டும். ஆனால் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தரவுகள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று(மார்ச்,25) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் முதல்கட்ட முடிவுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம், “தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது, மேற்கொண்டு தகவல்களை இன்று வெளியிடுகிறோம். ஆனால் அதிகாரப்பூர்வமாக முழுமையான முடிவுகள் மே 9 வரை வெளியிடப்படாது” என தெரிவித்தது.
குழப்பத்திற்கான காரணம்
ராணுவ ஆதரவு கட்சி மூன்றாமிடம் பிடிக்கும் என பலரும் கணித்திருந்த நிலையில் எப்படி பெருவாரியான மக்களின் வாக்குகளை பெற்றது என தாய்லாந்தில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் செயற்பாட்டளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? ஏன் பல ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டது? ஏன் நியூசிலாந்தில் போடப்பட்ட 1500 ஓட்டுகள் எண்ணப்படவில்லை என பல்வேறு கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுப்பபட்டன.
தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவிவருகின்ற நிலையில் கடந்த ஞாயிறு அன்று தேர்தல் ஆணைய தலைவர், ”என்னிடம் கால்குலேட்டர் இல்லை, அதனால் தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும்” எனக்கூறியிருந்தார். இதனையடுத்து, தாய்லாந்தைச் சேர்ந்த செயற்பாட்டளரான சோம்பட் பூங்கமாஓங், தேர்தல் ஆணைய தலைவருக்கு ஒரு மிகப்பெரிய கால்குலேட்டரை பரிசளித்தார்.
50 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இருப்பினும் 2014-க்கு பிறகு முதல்முறையாக நடந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாக 64% வாக்குப்பதிவுதான் பதிவானது குறிப்பிடத்தக்கது.