2024ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி லெபனானில் உலகம் இது வரை சந்தித்திராத ஒரு புதிய வகை தாக்குதல் நடந்தது. ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த பலருடைய பேஜர்கள் திடீரென்று வெடித்துச் சிதறின. 4000க்கும் மேல் என்று வெடித்த பேஜர்களின் எண்ணிக்கையை சொல்கிறார்கள். இது நடந்த அடுத்த நாளில் ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. 3500 பேருக்கு தீக்காயங்கள் என்றும் 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் இதுவரை மௌனம் காத்தாலும் அது ஒரு உலகறிந்த ரகசியம். ஏனென்றால் ஹிஸ்புல்லாவின் ஒரே வேலை லெபனான் மண்ணில் இருந்து கொண்டு இஸ்ரேலை எதிர்த்துப் போரிடுவதுதான். அதற்கு அவர்களுக்கு ஈரானின் பொருளாதார ஆசியும் உண்டு. ஈரான் போன்ற நாடுகள் நேரடிப் போரில் ஈடுபடுவதன் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு இப்படியான அமைப்புகளுக்கு உதவி வருகின்றன.
இந்த நேரத்தில் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் போர்களுக்காக உருவானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விமானங்கள், அணுசக்தி, இணையம், உலோகவியல் என்று தொடங்கி சொல்லிக் கொண்டே போகலாம். மனிதனின் மூளையை உத்வேகமூட்டி விரைவாக இயங்கச் செய்ய அவனுக்குக் கொலை வெறியை மூட்ட வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் தனது நேரம், அறிவு, பணம் என்று அத்தனையையும் கொட்டத் தயாராக இருக்கிறான். அந்தக் கண்டுபிடிப்புகளைப் போர்கள் முடிவடைந்த பிறகு ஆக்க செயல்களுக்காக மாற்றி வடிவமைத்துக் கொண்டோம். இது மனிதனின் ஆதார குணம். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்னொரு மனிதனைக் கொல்வதற்கான தொழில்நுட்பத்தில் இருக்கும் நமது நாட்டம் குறையாது என்றுதான் தோன்றுகிறது. அதிலும் இஸ்ரேல் என்ற நாடு இதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்த நிலையில் போர் செய்வது ஒன்றே அந்த நாட்டின் முழு நேரத் தொழிலாக இருக்கிறது. எனவே, இஸ்ரேல் இப்படியான வேலைகளில் ஈடுபடுவது முதல் முறை அல்ல.
இதுவரை உலகில் வலம் வந்த கணினி வைரஸ்களில் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படுவது ஸ்டக்ஸ்நெட். இஸ்ரேல் உளவு நிறுவனம் மொசாட் உருவாக்கிய இது, வைரஸ்கள் என்றால் அது வரை கணினிகளைத் தாக்க மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக கணினிகளைத் தாண்டி ஈரானின் அணு உலைகளைத் தாக்க 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ஸ்டக்ஸ்நெட். இவற்றை உருவாக்கியவர்கள் குறிப்பாக, அணு உலைகளை இயக்கும் சீமென்ஸ் என்ற நிறுவனத்தால் செய்யப்பட்ட மையச்சுழல் கட்டுப்பாட்டுக் கருவிகளை மட்டும் தாக்கும்வகையில் உருவாக்கினார்கள். அந்தக் கருவி இணைக்கப்படாத கணினி என்றால் இது எந்த அட்டகாசமும் செய்யாமல் அமைதியாக இருக்கும். அது உங்கள் வீட்டுக் கணினியாகக் கூட இருக்கும். இதன் காரணமாக, இதைக் கண்டறிந்து நீக்குவதும் கடினமான செயல். இதை மெல்ல உலகமெங்கும் பரப்பும் வேலையில் ஈடுபட்டார்கள்.
இப்படி மாறுவேடமிட்டு வரும் வைரஸ்களை ட்ரோஜன்கள் என்று அழைக்கிறார்கள். தாராளமனதோடு உங்களுக்கு இலவசமாக ஒரு மென்பொருளை அளிப்பார்கள். வெளிப்பார்வைக்கு அது உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு டோரண்டாகவோ, தரவிறக்கங்களை நிர்வகிக்க உதவும் மென்பொருளாகவோ இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாகப் பயன்படுத்துவீர்கள். அதுவும் சமர்த்தாக வேலையைச் செய்யும். உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாத இந்த ட்ரோஜன்கள் பின்னணியில் தனது வேலையைக் காட்டும். உங்கள் அத்தனை கீ போர்டு அழுத்தங்களையும் பதிவுசெய்து யாருக்கோ தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் அல்லது உங்கள் வங்கியின் கடவுச் சொல் உள்ளிடப்படும் வரை காத்திருந்து அதைத் தனது மாஸ்டருக்கு அனுப்பும். ஒரு நாட்டை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை, ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் தாக்கும் வகையில் கூட இந்த ட்ரோஜன்களை ப்ரோக்ராம் செய்ய முடியும். இலவசமாகக் கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டால், இன்னொருபுறம் உள்ளாடை முதற்கொண்டு களவு போய்விடும் என்பது அரசியலில் மட்டுமல்ல; ட்ரோஜன்கள் விஷயத்திலும் பொருந்தும்.
சீமென்ஸின் குறிப்பிட்ட மாடல் கருவி இணைக்கப்பட்டால் ஸ்டக்ஸ்நெட் உடனே உயிர்பெற்றுவிடும். இதற்காக, அது கணினிகளில் ஆண்டுக்கணக்கில்கூட காத்திருக்கும். அதன்பிறகு அந்த அணு உலைக் கருவிகளின் வேகத்தைக் கூட்டி இயங்கும்படி செய்யும். ஆனால் அவற்றை இயக்குவோரின் கணினியில் எல்லாம் சரியாக இருப்பது போலவே காட்டிக் கொண்டிருக்கும். இது அவற்றை சூடேற்றி செயலிழக்கச் செய்யும். இதனால் ஈரானின் 20% அணு உலைகள் பாதிக்கப்பட்டன. சேதாரம் என்ன என்பது குறித்து வெளிப்படையான தகவல் இல்லை. ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் உலகையே அழிப்பதற்கு வெகு அருகில் சென்ற நிகழ்வு இது. பாரபட்சமின்றி உலகெங்கும் பரப்பப்பட்டதால் அதே சீமென்ஸ் கருவிகளைப் பயன்படுத்திய இந்திய அணு உலைகளும் பாதிக்கப்பட்டன என்கிறது சிமான்டெக் என்ற வைரஸ் எதிர்ப்பு நிறுவனம். இப்படி ஒன்று இருக்கிறது என்பதை உலகம் கண்டுபிடிக்கவே ஐந்து ஆண்டுகள் ஆகின. 2010ஆம் ஆண்டுதான் இவற்றைக் கணினிகளிலிருந்து நீக்கும் நிரல்கள் எழுதப்பட்டன. இவை அனைத்தும் சாஃப்டேவேர் எனப்படும் மென்பொருட்கள்தான். ஆனால் இப்போது முதல் முறையாக ஹார்ட்வேர் எனப்படும் வன்பொருட்களின் உள்ளே ட்ரோஜன்களை வைத்து அனுப்பி உலகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது மொசாட்.
இந்தப் பின்னணியில் இப்போது இஸ்ரேலின் ஹிஸ்புல்லா தாக்குதலைப் பார்க்கலாம். இது இப்படித்தான் நடந்தது என்ற உறுதியான சான்றுகள் இதுவரை கிடைக்காததால் இப்போதைக்கு இது ஒரு கருதுகோள் மட்டுமே. ஏற்கனவே மொபைல் போன்களை வேவு பார்ப்பதில் இஸ்ரேலின் மொசார்ட் நிபுணத்துவம் பெற்றது என்பதால் ஹிஸ்புல்லா தனது படையினரையும் தளபதிகளையும் பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தும்படி ஆணையிட்டிருந்தது. இதையும் இஸ்ரேலிய உளவு அமைப்பு ஒரு வாய்ப்பாகப் பார்த்திருக்கிறது. கிட்டத்தட்ட அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது போலவே ஹிஸ்புல்லா செயல்பட்டிருக்கிறது. கோல்டு அப்பல்லோ என்ற தைவான் நிறுவனத்தின் பேஜர்களை ஆயிரக்கணக்கில் வாங்கியிருக்கிறது. இவை அனைத்தையும் பிஏசி கன்சல்டிங் என்ற ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு இடைத்தரகர் மூலமாக வாங்கியிருக்கிறது. இதற்காக ஓரிரு மில்லியன் டாலர்களையும் செலவழித்துள்ளது. இது தவிர ஐகாம் என்ற ஜப்பானிய நிறுவனத்தின் வயர்லெஸ் ரேடியோக்களையும் வாங்கியிருக்கிறது. இவையும் பிஏசி மூலமாக வாங்கப்பட்டவையா என்ற தகவல் இல்லை.
ஏதோ ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பு இந்தக் கருவிகளைப் பிரித்து அவற்றின் பேட்டரிகளை சிறிய வெடிப்பொருட்களை இணைத்து உறங்கும் வெடிகுண்டுகளாக மாற்றியுள்ளது. இந்த பேஜர்களும், ரேடியோ கருவிகளும் எப்போதும் போலவே வேலை செய்யும். எனவே இவற்றின் உள்ளே மறைந்திருக்கும் சிறு வெடிகுண்டுகள் குறித்து யாருக்கும் சந்தேகம் எழாது. சொல்லப் போனால் இடைப்பட்ட காலத்தில் இவற்றைப் பிரித்து பழுது நீக்கும் வேலைகளைக் கூட லெபனானில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் செய்திருப்பார்கள். அப்போது கூட பேட்டரிகளோடு இருக்கும் வெடிகுண்டுகள் தெரியாத அளவு துல்லியமாக இவற்றை வடிவமைத்திருக்க வேண்டும்.
சம்பவம் நடந்த நாளில் அனைத்து பேஜர்களுக்கும் ஒரே செய்தி குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பப்பட்டிருக்கிறது. இது ஹிஸ்புல்லா தலைமையிடம் இருந்து வருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தி அந்த பேஜர்களின் பேட்டரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் விசை. சந்தைக் கடைகள், பேருந்துகள், மருத்துவமனைகள் என்று எங்கெல்லாம் இந்த அமைப்பினர் பரவி இருந்தார்களோ அங்கெல்லாம் பேஜர்கள் வெடித்துச் சிதற லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கிய பிறகே ஹிஸ்புல்லா இது விபத்து அல்ல, திட்டமிட்ட தாக்குதல் என்று உணர்ந்து கொண்டது. கிட்டத்தட்ட நாற்பது பேர் இறந்து போயிருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இதில் பொதுமக்களும் குழந்தைகளும் அடக்கம் என்பதுதான் வேதனை. சில செய்திகள் இஸ்ரேல் ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருந்ததாகவும் ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இந்தக் கருவிகள் குறித்து தெரிந்து விடும் அபாயத்தை உணர்ந்ததால் முன் கூட்டியே அவற்றை வெடிக்க வைத்து விட்டதாகவும் கூறுகின்றன.
இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்குள் அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்தும் வாக்கி-டாக்கி ரேடியோக்கள் வெடித்துச் சிதறியுள்ளன. அதிலும் அவர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். இவை பேஜர்களை விடப் பெரிய பேட்டரிகள் என்பதால் வெடிப்பும் பெரிய அளவில். சேதமும் பெரிய அளவில். மேலும் ஆயிரக்கணக்கில் காயம். சில வீடியோக்களில் லெபனானின் தலைநகரம் பெய்ரூட்டை உயரத்தில் இருந்து படம் எடுத்திருக்கிறார்கள். நகரத்தின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெடிப்பு நிகழ்ந்து புகை கிளம்புவதைப் பார்க்க முடிகிறது. இது போன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்பது லெபனானில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஒரு பேரதிர்ச்சியையும் ஒரு புதிய வகை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று இஸ்ரேல் செய்ததை நாளை வேறு பயங்கரவாத அமைப்புகளும் செய்ய முற்படலாம்.
இதற்கிடையே இரு குறித்த விசாரணையை லெபனானும் சர்வதேச அமைப்புகளும் முடுக்கி விட்டுள்ளன. கோல்டு அப்பல்லோ என்ற அந்த பேஜர் நிறுவனத்திடம் விசாரித்தபோது அந்தக் கருவிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அதன் சிஈஓ கைவிரித்து விட்டார். அது ஒரு சிறிய நிறுவனம். சில ஆண்டுகளுக்கு முன்பு பிஏசி கன்சல்டிங் நிறுவனத்துக்கு தங்கள் பிராண்டைப் பயன்படுத்திக் கொண்டு கருவிகளைத் தயாரித்துக் கொள்ளும் உரிமத்தை வழங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். வாக்கி டாக்கிகளை உருவாக்கும் ஐகாம் என்ற ஜப்பானிய நிறுவனம் பெரியது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட மாடல்களைத் தயாரிப்பதை 2014ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டதாக சொல்லி விட்டார்கள். தவிர வெடித்த கருவிகளின் புகைப்படங்களில் தங்கள் ஹோலோகிராம் இல்லை என்பதை சுட்டிக் காட்டி அந்தக் கருவிகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கரங்கள் பிஏசி கன்சல்டிங் என்ற இடைத்தரகரை நோக்கியே நீள்கின்றன.
இந்த பிஏசி கன்சல்டிங் நிறுவனம் குறித்து ஹங்கேரியில் விசாரித்தபோது இதை நடத்துபவர்கள் யார் என்பது குறித்த எந்த விதமான தகவலும் தெளிவாக இல்லை. ஓரிரு ஷெல் கம்பெனிகள் மூலமாக இஸ்ரேலிய உளவு அமைப்பினர்தான் இதை நடத்தி வருகிறார்கள் என்று ஹிஸ்புல்லா சந்தேகிக்கிறது. ஆனால் இதன் சிஈஓவான கிறிஸ்டியானா பர்சோனி என்ற பெண்மணி இப்போரு ஹங்கேரிய உளவு அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் குறிப்பிட்ட கருவிகளை வாங்கி விற்றதோடு இவர்கள் பணி முடிந்துவிட்டதாகவும் அந்தக் கருவிகள் ஹங்கேரியிலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் ஹங்கேரி அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்த நிறுவனங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் பாதுகாக்க முயற்சிப்பதால் அவை குறித்த பல ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும். உண்மை என்னவென்று அறிவது இனி அத்தனை சுலபமானதல்ல.
ஆனால் இந்தக்கதை இத்துடன் முடிவடையவில்லை. உண்மையில் இந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதல்களின் பின்னணியில் வேறு ஒரு பெரிய திட்டம் இருந்திருக்கிறது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இந்தத் தாக்குதல்கள், தொலைத் தொடர்புக்கான அத்தனை வழிகளையும் அழித்துவிட்டதால் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கிறது. இதைத்தான் மொசாட் எதிர்நோக்கிக் காத்திருந்தது என்கிறார்கள். அடுத்த தினத்தில் ஹிஸ்புல்லா தலைவர்கள் இப்படிக் கூடிப் பேசிய குடியிருப்புக் கட்டிடத்தை ராக்கெட்டுகள் மூலம் தாக்கியது இஸ்ரேலிய ராணுவம். இதில் 45 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவற்றில் 16 பேர் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்கள். குறிப்பாக, இப்ராஹிம் அகில் என்ற கமாண்டர் இந்தத் தாக்குதலில் இறந்து போயிருக்கிறார். இவர்தான் இந்த ஒட்டு மொத்த ஆபரேஷனின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த இப்ராஹிம் ஹிஸ்புல்லாவின் ராட்வான் என்ற போர்ப்படையின் தலைவர். இந்த ராட்வான் போர்ப்படை என்பது ஹிஸ்புல்லா அமைப்பின் எலைட் கமாண்டோ பிரிவு என்று சொல்லலாம். திடீர்த்தாக்குதல்கள் நடத்துவதில் நிபுணர்கள். பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்மீதும் அமெரிக்க ராணுவப்படைமீதும் தாக்குதல் நடத்திய வகையில் இப்ராஹிம் அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியும் கூட. அவர் தலை மீது விலையும் வைத்திருந்தது அமெரிக்கா. இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செல்ல ரவுடிப் பிள்ளை என்பது உலகம் அறிந்த ஒன்று. எனவே இதன் பின்னணியில் அமெரிக்காவின் கையும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இறந்து போனவர்களுக்கான இறுதிச் சடங்கில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களையும் ஹிஸ்புல்லா அமைப்பினர் எழுப்பியுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து தங்கள் தாக்குதல் இன்னும் உத்வேகத்துடன் இருக்கும் என்று அறிவித்த ஹிஸ்புல்லா மேலும் ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேலைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் இன்னும் தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவமும் பதிலுக்குத் தனது தரைப்படையை லெபனான் எல்லையில் குவித்துள்ளது. அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்துள்ளது. அவர்களை மீண்டும் அவர்கள் வீட்டில் குடியமர்த்தும் வரை தங்கள் போர் தொடரும் என்று அறிவித்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்கள் சூழலை மேலும் சிக்கலாக்கும் என்று யுனைடெட் நேஷன்ஸ் அமைப்பு கருதுகிறது. இது ஒரு மத்தியக் கிழக்கின் பன்னாட்டுப் போராக உருவெடுக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ஆனால் கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லா வாங்கிய அடியிலிருந்து அது மீள்வதற்கு சில பல மாதங்கள் ஆகலாம்.
ஆனால் இனிமேல் இப்படித்தான் போர்கள் நடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. போர்கள் என்பவை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டியவை என்பதை மனிதர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உணர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்கவும் செய்தார்கள். குடியிருப்புகளுக்கு வெளியே வெட்டவெளியில் சண்டை நடத்தினார்கள். போர்ச்சங்கு ஊதும் முன்பாகவும் நிறுத்தும் சங்கு ஊதப்பட்ட பிறகும் தாக்கக் கூடாது, மாலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் இரு தரப்பும் அனுமதித்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆயுதம் இல்லாதவர்களைத் தாக்குவது வீரனுக்கு அழகல்ல என்ற நியதியும் தர்மமும் இருந்தது. ஆனால் நாகரிகம் வளர்ந்ததாகக் கருதப்படும் இருபதாம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கத் தொடங்கியது. ஊர்களை அழிக்கும் வெடிகுண்டுகளையும் நகரங்களையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்தோம். வேதியியல், உயிரியல், மின்னணுவியல், இணையம் என்று கையில் எது கிடைத்தாலும் ஆயுதமாக்கம் செய்யத் தொடங்கி விட்டோம். இதன் பிறகு போர் என்பது எந்த வித நீதிக்கும் நியதிக்கும் கட்டுப்படாத வெறும் கொலைத் தொழிலாக மாறிப் போனது.
ஆங்கிலத்தில் weaponization என்று சொல்லப்படும் இந்த ஆயுதமாக்கம் இத்தோடு நிற்கப்போவதில்லை. இப்போது கைவசம் இருக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டே சிறிய தேன்சிட்டு அளவிலான ட்ரோன்கள் மூலம் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து ஃபேசியல் ரெகக்னிஷன் மூலம் அவருடைய முகத்தை அடையாளம் கண்டு உறுதி செய்து அவர் கழுத்தில் சிறிது நேரத்தில் உடலுக்குள் கரைந்து போகும் ஒரு விஷ ஊசியை செலுத்தி விட முடியும். இந்தச் செயலை ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான இடங்களில் ஒருங்கிணைத்து நடத்த முடியும். நேர் உலகிலும் சரி நிகர் உலகிலும் சரி, எதையும் யாரையும் நம்ப முடியாத ஒரு சூழலுக்கு உலகம் இப்போது தள்ளப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது. இனி விமானங்களில் மொபைல் போன்களைத் தவிர எதையுமே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வார்கள். அது கூட அதற்கென சான்று பெற்ற சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமே என்பார்கள். அவற்றையும் கூட ஒன்றுக்கு நான்கு முறை சோதிப்பார்கள். இனிமேல் விமானத்தில் ஏறும் முன்பான பாதுகாப்பு சோதனைகள் விமானப் பயணத்தை விட அதிக நேரம் பிடிப்பவையாக மாறிப் போகும். இது தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து இக்கருவிகளை இறக்குமதி செய்வதிலும் புதிய கட்டுப்பாடுகள், தடைகள் வரலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விடப் பெரிய சக்தி வாய்ந்த ஒன்றைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுடுகளியைக் கண்ட நாய் போல உருட்டிக் கொண்டிருக்கிறோம். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுதான் அது. ஆயுதமாக்கம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகள் இந்த உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை என்கிறார்கள் நிபுணர்கள். அது குறித்து ‘The Language of Deception: Weaponizing Next Generation AI’ என்ற நூலில் இவை மனிதனை ஏமாற்றி நெய்யொழுகப் பேசி காரியம் சாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் நம் வீட்டுக் குழந்தைகளைக் கூட நம்பி அறிமுகம் செய்து வைத்திருப்போம் என்கிறார் அதன் நூலாசிரியர் ஜஸ்டின் ஹட்சென்ஸ். அவை நாம் அறியாமலே நம்மை யாரோ ஒருவரின் கட்டளைக்கு இணங்க செலுத்திக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்தக் கட்டளைகளை இட்டவரை எந்தக் காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் அந்த ஏஐ செயலிகளுக்குத் தெரியும்.
ஒரு நொடி நம்மைச் சுற்றிப் பார்த்தால் எங்கு பார்த்தாலும் எலக்ட்ரானிக் கருவிகள், அவற்றினுள் பேட்டரிகள். இவற்றில் எது வேண்டுமானாலும் ஆயுதமாக மாற்றப்படலாம் என்பது அச்சமூட்டும் ஒரு சிந்தனை. அதைவிட அச்சமூட்டும் சிந்தனை என்ன தெரியுமா, நாமே கூட யாருக்கோவான ஆயுதமாக செயல்பட்டுக் கொண்டிருப்போம் என்பதுதான். சிந்திக்கத் தெரியாத முட்டாள் கருவிகளான பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றையே ஆயுதங்களாக மாற்றிய இஸ்ரேலின் கையில் கட்டளைகளுக்கேற்ப சுயமாகவே முடிவெடுத்து செயல்படும் செயற்கை நுண்ணறிவும் கிடைத்திருக்கிறது. இந்த அச்சத்தின் நடுவேதான் மீதமிருக்கும் 21ஆம் நூற்றாண்டு பயணிக்கப் போகிறது.