நினைவஞ்சலி 

நடேஷுடன் தொன்னூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரம் ஆண்டுகளின் மத்தியிலும் பழகிய நாட்கள் பசுமையான நினைவுகள். மிகக் குறைவான காலம்தான், ஒரு சில ஆண்டுகள்தான் அவருடன் தொடர்ந்து பழகியுள்ளேன். நானும், மோனிகாவும் சின்மயா நகரில் குடியேறிய பிறகு,  அவரை அடிக்கடி சந்திக்கும் தருணங்கள் வாய்த்தன. மாலை நேரங்களில் வீட்டிற்கு வருவார். சில சமயம் நண்பர்கள் கூடும்போது அவரை தொலைபேசியில் அழைப்பேன். நள்ளிரவு கடந்தும் நீளும் உரையாடல்கள். சில சமயம் பாடல்கள், நடனம் என பல்வேறு தளங்களில் பகிர்தல்கள் நடக்கும். வித்தியாசமான நடன அசைவுகளை விளையாட்டாக உருவாக்குவார் நடேஷ். அவரது அடவுகள், பாவங்களைப் பார்க்கும்போது வாழும் தருணத்தையே கலாபூர்வமாக மாற்றுவதாகத் தோன்றும். சிந்தித்துப் பார்த்தால் நான் சந்தித்தவர்களில் அபூர்வமான, தீவிரமான படைப்பாற்றல் கொண்டவர்களில் முக்கியமானவர் நடேஷ் என்று தோன்றுகிறது.

நடேஷ் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர். ஓவியர். கோட்டோவியங்கள், நிர்மாணக் கலை (installation art) ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். அரங்கமைப்பு. ஒளியமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக பங்காற்றியவர். ஆங்கிலத்தில் சிறப்பாக கவித்துவமாக எழுதக்கூடியவர். அவரது ஆற்றல்கள் படைப்புகளாக பொதுவெளியில் போதுமான அளவு வெளிப்படவில்லையோ, அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் அல்லது வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. அவருக்கு அப்படியெல்லாம் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடனான உரையாடல்களில் அவர் அப்படியெல்லாம் வருத்தங்கள் எதையும் வெளிப்படுத்தியதில்லை. விட்டேத்தியான மன நிலை கொண்டவராகவே எனக்குத் தோன்றும். ஆனால் எதாவது படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடவேண்டும், சிந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற இன்றியமையாத முனைப்பினை அவரிடம் காண முடியும். ஓய்வறியாது அலைவுறும் கலைமனம் கொண்டவராகவே அவரைக் குறித்து சிந்திக்கும்போது தோன்றும். ஆங்கிலத்தில் restless என்று சொல்வார்கள்.

ஆங்கிலத்தில் பிராக்மடிசம் (pragmatism) என்று ஒரு வார்த்தை உண்டு. அது ஒரு தத்துவார்த்த அணுகுமுறை. அதை நடைமுறைவாதம் அல்லது செயல்வாதம் என்று கூறலாம். துரதர்ஷ்டிவசமாக பிராக்டிகலா இருக்கணும் என்றும் பேச்சுமொழியில் சொல்வதைப் போன்று அதை பலரும் புரிந்துகொள்வது உண்டு. கிட்டத்தட்ட பிழைப்புவாதமாகவே அதனை மாற்றிவிடுவார்கள். அமெரிக்காவில் அதை பிழைப்புவாதமாகவே, அதாவது சமரசம் செய்துகொள்வதற்கான அடிப்படையாகக் கருதுபவர்களும் உண்டு. இலட்சியவாதத்திற்கு எதிராக, இதுதான் யதார்த்தம், இதனுள் இப்படித்தான் இயங்க வேண்டும் என்றெல்லாம் சுய நியாயப்படுத்தலாக் கூறிவிடுவதை பிராக்மாடிக்காக இருப்பது என்று கூறத்தொடங்கியதால் அதற்கு ஒரு அவப்பெயரே ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த பிராக்மடிஸ சிந்தனைக்கு துவக்கப்புள்ளியாக இருந்த நான் பின்பற்றும் “என்னுடைய” தத்துவ வாதியான சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ் (Charles Sanders Peirce, 1839-1914) இதை செயல்பாடுகளின் இன்றியமையாமை குறித்து விளக்கவே பயன்படுத்தினார். பிறர் இந்த கருத்தாக்கத்தை பயன்படுத்தும் விதத்தில் அதிருப்தி அடைந்த பர்ஸ், தன்னுடைய சிந்தனையை பிராக்மாடிஸிசம் (pragmaticism) என்று மாற்றியழைக்க முடிவு செய்தார். எதற்காக இதைக் கூறுகிறேன் என்றால் “பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக” இருக்க முடியாத ஆற்றல் மிக்க கலைஞர்கள், செயல்பாட்டினையே புறக்கணிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளத்தான்.

உண்மையில் பர்ஸே பிழைக்கத் தெரியாதவராகத்தான் வாழ்ந்தார். அப்படிப்பட்டவர்கள் விரக்தியிலோ, வெறுப்பிலோ மூழ்குவதில்லை. மாறாக மற்ற வழமைகளில் மூழ்கிய யதார்த்தவாதிகளைவிட வாழ்வின் மீதும், பொது நன்மைக்காக செயல்படுவதின் மீதும் பற்றுடனேயே வாழ்கிறார்கள். நான் குறுகிய காலம் பழகியறிந்த நடேஷ் அப்படியானவர்தான். அவருடனான அனுபவங்களில் மூன்று சந்தர்ப்பங்களை மட்டும் என் மங்கலான நினைவுகளிலிருந்து அவருக்கான நினைவஞ்சலியாக துலக்கப் படுத்தி எழுத நினைக்கிறேன். அவருடன் பழகுவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பிற்கு மரியாதை செய்யவே இதனை எழுதுகிறேன்.

ஃபிரேம்கள் இல்லாத ஓவியக் கித்தான்கள்

ஒரு முறை நடேஷின் ஓவியக் கண்காட்சி ஒன்று சென்னை அலியான்ஸ் ஃபிரான்சைசில் (ப்ஃரெஞ்சு தூதரகத்தின் கலாசார அமைப்பு) நிகழ்வதாக தகவல் வந்தது. துவக்க நாளன்று சென்றேன். மிகப்பெரிய துணுக்குறலாக, அதிச்சியாகக் கூட இருந்தது. காரணம் நடேஷ் அவருடைய கான்வாஸ் எனப்படும் ஓவியக் கித்தான்களை ஃபிரேம் போடாமல், துணி உலர்த்துவது போல தரையில் விரித்திருந்தார். அவற்றிற்கு ஃபிரேம் போட்டால்தானே சுவற்றில் ஆணியில் மாட்ட முடியும்? அதனால் அவற்றை சுவற்றோரமாக தரையில் விரித்திருந்தார். ஓவியங்கள் வழக்கம்போல் என்னை கவர்ந்தன. ஆனால் அவற்றை அப்படி ஃபிரேம் எல்லாமல் பார்ப்பது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. நடேஷிடம் என்ன இப்படி என்பது போல கேட்டேன். அவ்வளவுதான், ஓவியம்தானே பார்க்க வேண்டும், எதற்கு ஃபிரேம் என்று விட்டுவிட்டேன் என்பது போலச் சொன்னார். எனக்கு அவர் என்னவெல்லாம் சொன்னார், உண்மையில் ஏன் அப்படி செய்தார் என்பதெல்லாம் சரியாக முழுமையாக நினைவில் இல்லை. அவர் என்ன கூறியிருந்தாலும் அதுதான் காரணமா என்பதும் கூட பிரச்சினையில்லை. அவரால் துணிச்சலாக அப்படி ஒரு கண்காட்சியை நிகழ்த்த முடிந்த து என்பதுதான் வியப்பிற்குரிய செய்தியாக இன்றும் என் மனதில் பதிந்துள்ளது.

பின்னாளில் தெரிதாவின் சப்ளிமண்ட் எனப்படும் ‘கூடுதலாக சேர்க்கப்படுவது’ குறித்த எழுத்தினை படித்தபோது நடேஷின் கண்காட்சி ஒரு படிமமாக என் மனதில் நினைவுக்கு வந்தது. ஓவியம் தன்னளவில் நிறைவானது என்றால் அதற்கு ஏன் சட்டகம் அதாவது ஃபிரேம் தேவைப்படுகிறது? ஃபிரேம் ஓவியத்தின் பகுதியல்ல என்னும்போது அது ஏன் அதனை நிறைவு செய்வதாகத் தோன்றுகிறது? அப்படி படைப்பு நிறைவற்றதாக இருந்தால் அதனை ஃபிரேமால் நிறைவு செய்ய முடியுமா? இம்மானுவேல் காண்ட் எர்கான்-பரேர்கான் என்று உள்ளிருப்பதையும் அல்லது உண்மையையும், அதற்கு புறத்திலிருந்து வடிவம் கொடுப்பதாகத் தோன்றும் சட்டகத்தையும் வரையறுப்பதை தெரிதா நிர்நிர்மாணம் (deconstruct) செய்து வாசிக்கிறார்.

ஆங்கிலத்தில் ட்ரூத் எனப்படுவதை தமிழில் உண்மை என்று கூறுவதே மிகுந்த முக்கியத்துவம் உடையாதாகப் படுகிறது. உள்ளுவது, அதாவது புலனுலகின் உள்ளே இருப்பது உண்மை என்றால் அதற்கு புறத்தே என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழும். ஓவியங்களுக்கு ஃபிரேம் போடாமல் காட்சிப்படுத்துவதை வைத்து இவ்வளவு பிரச்சினையா என்று நினைப்பவர்கள் தெரிதாவின் Truth in Painting என்ற நூலை வாசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம் நான் இங்கே எழுதக் காரணம் நடேஷால் எப்படி அப்படியொரு கண்காட்சியை நிகழ்த்த முடிந்தது என்பதை வியக்கத்தான். நடேஷ் தெரிதாவை வாசித்திருந்தாரா, அல்லது அவரது நெருங்கிய நண்பரும் தமிழின் முன்னணி சிந்தனையாளரும், படைப்பாளுமையான எம்.டி.முத்துக்குமாரசாமி கூறக் கேட்டிருந்தாரா என்று எனக்குத் தெரியாது.

அதன் உடனடிக் காரணங்கள் எதுவாக இருந்தாலும், நடேஷின் சட்டகங்களுக்குள் அகப்படாத மன நிலையை அது உணர்த்துவதாகவே அதனை நான் கருதுகிறேன். தன் ஓவியங்களை அப்படி காட்சிப்படுத்த ஒரு அலாதியான மனநிலை வேண்டும்.

பொம்மை போட்டு வைத்தவர்

நடேஷ் ஓவியம் வரைவதை பொம்மை போடுவதாகக் குறிப்பிடுவார். சக ஓவியர்களை பார்க்கும்போது “பொம்மை போட்டியா?” என்று கேட்பார். அப்படித்தான் ஒரு நாள் மாலை என்னிடம், தான் பொம்மை போட்டு வைத்திருப்பதாகச் சொல்லி, வீட்டுக்கு வந்து பார்க்கிறீர்களா என்று கேட்டார். நான் எந்த குறிப்பிட்ட எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். சென்னையில் ஓவியர்கள் எப்படியெல்லாம் வரைவார்கள் என்பதில் கொஞ்சம் பரிச்சயம் இருந்தது.

ஆனால் நடேஷ் அவருடைய அறைக்கு கூட்டிச்சென்று காட்டிய அவரது கோட்டோவியங்களின் தொகுப்பு என்னை பெரும் பிரமிப்பில் ஆழ்த்தியது. விலங்குகள், மனிதர்கள், விலங்கு மனிதர்கள், ஆண், பெண் உடல்கள், விலங்குகளின் உடல்கள் எல்லாம் தனியாகவும், கலந்தும் கோட்டோவியங்களாக பலவித அதீத காட்சிகளாக அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் எதோ எதிர்பாராமல் பெரும் புதையலை கண்டது போல உணர வைத்தன. நான் ஓவிய விமர்சகன் இல்லை. இன்றுள்ள அளவுகூட அன்றைக்கு கலை வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பயிற்சி இருக்கவில்லை. அதனால் எப்படி நடேஷின் படைப்புகளை மதிப்பிடுவது என்று மலைப்பாக இருந்தாலும், அவை மிக அபூர்வமானவை, மிகச் சிறந்த படைப்புகள் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை.

அவரிடம் அந்த ஓவியங்களை அவர் ஏன் அச்சிடவில்லை என்று கேட்டேன். எனக்கு உடனே அவற்றை எடுத்துக்கொண்டு போய் யாரிடமாவது கொடுத்து அச்சாக்கம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. பின்னர் அவற்றை ஸ்கேன் செய்து இணையத்தில் தரவேற்றலாமா என்று கேட்டேன். கோ.ராஜாராமும் நண்பர்களும் நட த்தி வந்த திண்ணை போன்ற இதழ்களில் தரவேற்றலாம் என்று தோன்றியது. நடேஷ் என்னுடைய ஆலோசனைகளுக்கு என்ன எதிர்வினை புரிந்தார் என்று நினைவிலில்லை. நான் பார்த்து வியந்ததில் அந்த சந்திப்பு அவரைப் பொறுத்தவரை முற்றுப் பெற்றுவிட்டது போலவும் தோன்றியது. பின்னர், பல காலச்சுவடு உள்ளிட்ட பல சிறுபத்திரிகைகளில் அவரது கோட்டோவியங்கள் புனைவுகளுடன் சேர்ந்து இடம்பெற்றன.

வெகுகாலம் கழித்து 2021-ஆம் ஆண்டு Before Becoming Blind என்ற தலைப்பில் அவரது கோட்டுச் சித்திரங்கள் நூலாக வெளியாகியுள்ளன. எம்.டி.முத்துகுமாரசாமி அந்த நிகழ்வில் பேசிய உரை இணையத்தில் கிடைக்கிறது. உலகில் வேறெங்கு வாழ்ந்திருந்தாலும் நடேஷ் பெரும் மேதையென கொண்டாடப்பட்டிருப்பார் என்று அவர் கூறியதுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். முத்துக்குமாரசாமி சஹாபீடியா என்ற தளத்திலும் நடேஷின் ஓவியங்கள் குறித்து சிறப்பாக எழுதியுள்ளார். சிறந்த படைப்பாளுமையும், ஓவிய விமர்சகருமான சி.மோகனும் நடேஷின் கோட்டோவியங்கள் குறித்து இந்து தமிழ் திசையில் சிறப்பாக எழுதியுள்ளார். நடேஷின் பொம்மைகள் வெகுகாலம் உலகில் உயிர்ப்புடன் உலவும் என்று நம்புகிறேன்.

சூழலியலும் நிர்மாணக் கலையும்

மற்றொரு சந்தர்ப்பத்தில் நடேஷ் மூங்கில்களை பயன்படுத்தி ஒரு நிர்மாணக் கலை வடிவை அலியான்ஸ் ஃபிரான்சைசில் வைத்திருந்தார். அவர் உருவாக்கியிருந்த வடிவம் என்னை மிகவும் கவர்ந்த து என்பது மட்டுமன்றி, அதில் அவர் ஆங்கிலத்தில் எழுதி காட்சிப்படித்தியிருந்த சிறு சிறு எழுத்தாக்கங்களும் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின. அவை பலவும் சூழலியல் பாதிப்புகளைக் குறித்து பேசுபவையாக இருந்தன. சூழலியல் குறித்த சொல்லாடல் இன்றளவு கூட தமிழ்நாட்டில் பரவலாகாத சமயத்தில் அவருடைய தீவிரமான வெளிப்பாடுகள் என்னை மிகவும் ஈர்த்தன. அந்த நிர்மாணக் கலை காட்சியைப் பற்றி ஊடகங்களில் பேசப்பட வேண்டும் என மிகவும் விரும்பினேன். ஊடகங்களில் பணியாற்றுவோர் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒரு சில முயற்சிகளையும் மேற்கொண்டேன். அவை பலனளிக்கவில்லை.

நடேஷின் அரங்கமைப்பு செயல்பாடுகளும் அவற்றைக் கண்டோரால் மிகவும் பாராட்டப் பட்டவை. தமிழின் முக்கிய படைப்பாளுமையும், கூத்துப்பட்டறை நிறுவனரும், நடேஷின் தந்தையுமான ந.முத்துசாமியின் நற்றுணையப்பன் நாடகத்திற்கான அரங்கமைப்பும், ஒளியமைப்பும் நடேஷ் செய்திருந்ததை பார்த்த ஒரு எழுத்தாளர் என்னிடம் முத்துசாமியின் வார்த்தைகளைவிட நடேஷின் அரங்கமைப்பும், ஒளியமைப்பும் அந்த நிகழ்வில் சிறந்த அனுபவத்தை வழங்கியதாகக் கூறியது நினைவுக்கு வருகிறது. பண்டிட் ரவிசங்கர், அனிதா ரத்தினம் உள்ளிட்ட கலைஞர்களின் நிகழ்வுகளுக்கும் நடேஷ் அரங்கமைப்பு, ஒளியமைப்பு செய்துள்ளார். கூத்துப்பட்டறையின் இயக்கத்தில் நிறையவே பங்களிப்பு செய்துள்ளார்; முத்துசாமி மறைவுக்குப் பின் அதன் அறங்காவலராக விளங்கி தொடர்ந்து இளம் நடிகர்களை ஆற்றுப்படுத்தி வந்தார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதுவதைக் குறித்துக் கூறினேன். சில சமயங்களில் அவர் வீட்டிற்கு வரும்போது அவர் எழுதிய சில பக்கங்களை படித்துக் காட்டுவார். அவை சிறப்பாக இருப்பதாகத் தோன்றுவதால் நான் அவற்றை பிரசுரிக்க வேண்டுமென பரிதவித்துப் போவேன். அவர் அவை நாவலின் பகுதிகள் என்பார்; இன்னும் எழுத வேண்டும் என்பார். ஹார்ட் டிஸ்க் கெட்டுப்போய்விட்டது என்பார். எனக்குத் தெரிந்து அவர் புனைவு எதையும் ஆங்கிலத்தில் இறுதிவரை பிரசுரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அது நிறைவடையாத ஒரு சாத்தியமாகவே எஞ்சியிருக்கிறது. ஒருவேளை அவர் எழுதிய பகுதிகள் எங்கேனும் அவர் அறையில் இருந்தால்கூட முழுமையற்ற நிலையிலேயே கூட அவற்றை பிரசுரிக்கலாம் என்று தோன்றுகிறது. பல ஆற்றல்மிக்க, கவித்துமான வரிகள் அவற்றில் இருந்தன.

ஒருவேளை எழுதியவையெல்லாம் பிரசுரமாக வேண்டியதில்லையோ என்னவோ. வரைவதும், எழுதுவதும், சிந்திப்பதும் வாழ்வை நிகழ்த்துவதாக மட்டுமே எடுத்துக்கொண்டால் அவை அந்த அளவிலேயே “நிறைவு” பெற்றவைதானே. ஃபிரேம் செய்யப்படாத ஓவியங்களைப் போல தன்னிலிருதே தன்னை வேறுபடுத்திக்கொள்ளாத நிறைவாழ்க்கையாகவும் அவற்றை கருதலாம் என்று தோன்றுகிறது. அந்த வகையில் நடேஷின் சில நிகழ்தருணங்களில் பங்கேற்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

———————————————————————————————————————-