சடகோபன் கண்கள் மூடிப் படுத்திருந்தார். சிறிதளவு திறந்திருந்த வாயிலிருந்து இரண்டு குழாய்கள் வெளியே வந்து கட்டிலுக்குப் பின்புறம் எங்கோ சென்றிருந்தன. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளமாக இதயத்துடிப்பை அளக்கும் கருவி ஏதோ ஒன்று சீரான இடைவெளியில் சத்தமிட்டுக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் கருவிகள் மூலம் மட்டுமே நாம் உயிரோடிருப்பதை உலகுக்கு உணர்த்த முடிகிறது.
வேணுகோபால் கடந்த நான்கு மணி நேரமாக ஒரே இடத்தில் ஆணியடித்தது போல அமர்ந்திருந்தான். தன் அப்பாவின் முகத்திலிருந்து ஏதும் படித்துவிட முடியுமா என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் பிரசாத் நர்சிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனிடம் வந்தார்.
“வேணு.. கம் ஆன். நீ இப்படிப் பக்கத்துல உட்கார்ந்திருக்கறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர் சுய நினைவுல இல்லை.”
வேணுகோபாலுக்கு முப்பத்தைந்து வயது. மும்பையிலிருந்து அன்று காலைதான் வந்து இறங்கியிருந்தான். பயணத்தில் கடுமையான முதுகு வலி. தூக்கமே இல்லை. அப்பா திடீரென்று கீழே விழுந்து விட்டாரென்று தகவல் கிடைத்ததும் போட்டது போட்டபடி ஓடி வந்திருந்தான். அப்படியெல்லாம் தரையில் விழும் ரகமல்ல சடகோபன்.
அவன் அப்பா சடகோபனுக்குத் தலையில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அதற்காக அடர்த்தியான அவருடைய முடியை வழித்திருந்தார்கள். ஏற்கனவே எடை குறைவான அவர் தோற்றம் இன்னும் மெலிந்தது போலத் தோன்றியது. ஆபத்தான கட்டத்தைத் தாண்ட உடனே ஒரு சர்ஜரி செய்ய வேண்டும் என்று கேட்டபோது அங்கிருந்தே ஒப்புதல் கொடுத்துவிட்டான். டாக்டர் பிரசாத் அவர்களுடைய குடும்ப நண்பர்தான்.
எப்போதும் எதையாவது பேசிக்கொண்டு இருக்கும் அவன் அப்பா இப்போது சலனமில்லாமல் இருந்தார். ‘கொஞ்ச நேரமாவது தொணதொணக்காம இரேம்ப்பா’ என்று அவன் அவ்வப்போது மனதுக்குள் சபித்தது நினைவுக்கு வந்தது. ஒரு நாள் அவரது அமைதி அவனை இத்தனை பதற்றத்துக்குள்ளாக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
இறுதியாக அவரை நேரில் பார்த்தது எப்போது என்று யோசித்தவாறே அவர் முகத்தைப் பார்த்தான். ஏழு அல்லது எட்டு வருடங்கள் இருக்குமா? இல்லை, நான்கு வருடங்கள். இடையில் அவன் திருமணத்தின்போது வேண்டாவெறுப்பாக வந்து நின்றுவிட்டுப் போயிருந்தார். அப்போதைக்கு இப்போது இன்னும் ஒரு மாதிரி சுருங்கிப் போயிருந்தார்.
ஒரே ஒரு முறை தன்னை வந்து பார்த்துப் போகும்படி அவர் கேட்டிருந்தால் ஓடி வந்திருப்பான். வைராக்கியம் பிடித்தவர். அப்படியேதான் அவனுக்கும். பல விஷயங்களில் அப்படியே அவரைக் கொண்டிருந்தான் வேணு. ஒரு விஷயத்தைத் தவிர. அவருடைய இசை.
அவன் மூதாதையர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் புல்லாங்குழல் இசைக் கலைஞர்களாக இருந்தவர்கள். பரணில் இன்னும் பட்டயங்கள் இருந்தன. அவன் கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து கச்சேரி செய்கிறார்கள். அவன் தாத்தாவும் அப்பாவும் இந்திய அளவில் புகழ்பெற்ற வித்வான்கள்.
புல்லாங்குழல் என்றால் அவன் குடும்பத்தின் பெயர் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் வந்து நிற்கும். அவன் அப்பா சடகோபன் சமகாலத்தில் அந்தக் கலையின் உச்சம் தொட்டவராக அறியப்பட்டார். அவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருந்தார்கள். பல்வேறு பெரிய மேற்கத்திய இசைக் கலைஞர்கள் அவரோடு இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். பத்மபூஷன் விருது வாங்கியவர். அவர் மருத்துவமனையில் இருப்பதுகூட செய்தித்தாள்களில் ஒரு மூலையில் இடம் பிடித்திருந்தது.
அவனும் எட்டு ஆண்டுகள் முன்பு வரை அப்பாவின் ஆஸ்தான சிஷ்யனாக இருந்தான். புல்லாங்குழல் வாசிப்பில் தனது வாரிசாக அவனை உருவாக்கிக் கொண்டிருந்தார் சடகோபன். காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் மூச்சுப் பயிற்சி. பிறகு ஒரு நாளில் ஆறு ஏழு மணி நேரமாவது புல்லாங்குழல் வாசித்துப் பயிற்சி செய்ய வேண்டும். கடும் உணவுக் கட்டுப்பாடு உண்டு. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராவது போலத் தன்னை உணர்ந்தான் வேணு.
கூடவே அவன் நன்கு படித்திருந்தான். ஒரு வங்கியில் வேலை. வேணுவுக்கு வேலை வந்தபோதே சடகோபனுக்கு அதில் விருப்பமில்லை. புல்லாங்குழல் பயிற்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்று கெஞ்சித்தான் சேர்ந்திருந்தான். இரண்டிலும் காலை விட்டுக்கொண்டு அவனுக்கு மூச்சு விடக்கூட நேரம் இருக்காது. ஆனால் கஷ்டமாக இருக்கிறது என்று சடகோபனிடம் முனகினால் கூட வங்கி வேலையைத்தான் விடும்படி சொல்வார். ஆனால் இந்த அதீத உழைப்பும் அழுத்தமும் அவனைச் சிறிது சிறிதாக உளைச்சலுக்குள்ளாக்கியிருந்தன. அவன் அப்பாவுக்கு இதுதான் உலகம். ஆனால் வங்கியும் வெளி உலகமும் அதன் வரவு செலவுக் கணக்குகளும் புல்லாங்குழல் இசைக்காக மட்டும் வாழ்க்கையை அர்ப்பணிப்பது பொருளற்றது என்று அவனுக்கு உணர்த்தத் தொடங்கின.
அவனுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு காத்திருந்தது. இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கும். ஆனால் அதற்காக மும்பைக்கு இட மாற்றம் செய்ய வேண்டும். புல்லாங்குழல் பயிற்சியைக் கைவிட வேண்டி வரும். தயங்கித் தயங்கி அப்பாவிடம் சொன்னபோது அவர் முகம் சிவந்தது.
“உனக்கு இசைதான் முதல் வேலை. எல்லாத்தையும் கத்துக்கிட்டு எனக்கும் காரியம் பண்ணிட்டு பிற்பாடு எங்க போவணுமோ போ.”
ஏற்கனவே அவருக்கு தனிக் கச்சேரிகள் குறைய ஆரம்பித்து விட்டன. சடகோபனின் கையிருப்பும் கரைவது அவனுக்குத் தெரியும். இந்த வேலை ஒரு வசதியான வாழ்க்கைக்கு அவசியம் என்று தெரியாதவரல்ல அவர். ஆனாலும் பிடிவாதம் பிடித்தார். சினிமாவில் பின்னணியோ அல்லது பாடல்களின் இடையிலோ புல்லாங்குழல் வாசிக்கக் கூப்பிட்டார்கள். அதற்கும் சடகோபன் மறுத்துவிட்டார்.
“ஏம்ப்பா. நல்லா பணம் தரேன்னு சொல்றாங்களே.”
“இது வெறும் இசைன்னு நினைச்சியா?. என்னோட மூச்சு. நாப்பது வருசமா உருக்கி வார்த்து தட்டித் தேய்ச்சு உருவாக்குன என் தனிப்பட்ட குரல். அதை எவ்வளவு காசுக்கும் இன்னொருத்தனுக்கு இரவல் கொடுக்க மாட்டேன்.”
“ஏம்ப்பா பிடிவாதம் பிடிக்கறீங்க? நீங்க இல்லைன்னா அங்கே இன்னொருத்தன் வாசிக்கப் போறான்.”
சடகோபன் இளக்காரமாகச் சிரித்தார்.
“வாசிப்பான். ஆனா அது எப்பவும் என்னோட இசையா இருக்காது. என்னோட பேஸ் ஃப்ளூட் மாதிரி சத்தத்தை இன்னொருத்தன் அப்படியே கொண்டு வந்துட்டான்னா வாசிக்கற இந்த விரல்களை நான் அப்பவே வெட்டிக்கறேன்.”
அகங்காரம்தான். ஆனால் அது உண்மையும்கூட. சடகோபனின் பேஸ் ஃப்ளூட் இசை உலகப் புகழ் பெற்றது. அதற்கென்ற தனித்த சத்தம் ஒன்று உண்டு. அதை அவரே வடிவமைத்திருந்தார். அவர் மேற்கொண்ட பல விதமான சோதனை முயற்சிகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. துளைகள் ஒரே வரிசையில் நேராக இருக்காது. விரல்களின் நீளத்துக்கு ஏற்ப ஒரு வளைகோடு வடிவில் இருக்கும். அதில் ஆண்டுக்கணக்கில் அவர் பயிற்சி செய்திருக்கிறார். அதன் தனிப்பட்ட வடிவமைப்புக்கு ஏற்ப தனது விரல்களை சிறிய சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டுள்ளார். இவற்றால்தான் உலகத்தின் சிறந்த புல்லாங்குழல் மேதையாக அவர் அறியப்படுகிறார்.
அன்று என்ன தோன்றியதோ “நான் சாதிச்சுக் காட்டறேன்” என்று சவால் விட்டு விட்டான் வேணு. அப்பா தன்மீது கோபப்படுவார் என்று நினைத்தான். ஆனால் அப்படி வாடா என் சிங்கக் குட்டி என்பது போல அவர் முகத்தில் சிறு புன்னகை கூடத் தோன்றியது. அவன் புல்லாங்குழல் வாசிப்பை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவர் கவலையாக இருந்தது. இந்த சவால் நல்லதொரு வாய்ப்பு என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவனை சீண்டத் தொடங்கினார். ஆனால் அதுவே அவர்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
தன் புல்லாங்குழல் போலவே இன்னொன்று அவனுக்கும் செய்து கொடுத்திருந்தார். அவனும் நன்றாகவே வாசித்தான். ஆனாலும் சடகோபனின் வாசிப்புக்கு அருகேகூடச் செல்ல முடியவில்லை. அவர் புல்லாங்குழலில் இருந்து வரும் இசைக்கென்று தனிப்பட்ட ஓசையும் உணர்வும் இருந்தது. அதை எவ்வளவு முயன்றும் அவனால் அடைய முடியவில்லை. அவர் ஒரு நமட்டுச் சிரிப்புடன் வெற்றிலை போட்டபடி மணிக்கணக்கில் இவன் போராடுவதை ரசித்தபடி அமர்ந்திருப்பார். ஒவ்வொரு முறை தோல்வி அடையும்போது அவனுக்கு எரிச்சலாக வரும்.
“வெறும் புல்லாங்குழலும் இசை ஞானமும் மட்டும் போறாது. உன் உடம்பு, மூச்சு, மனசுன்னு எல்லாமே ஒரு புள்ளியில் இணையணும். அதுக்கு எனக்கு நாப்பது வருசம் ஆச்சு. உனக்கு எத்தனை வருசம் ஆகுமோ?”
அவரைப் புறக்கணித்து மனதை ஒருமுகப்படுத்தி வாசிக்க முனைந்தான். அவர் அவனை சீண்டுவதை நிறுத்தவில்லை.
“நீ எதுக்கு மும்பை போக ஆசைப்படறேன்னு எனக்கும் தெரியும். அந்த மிலிட்டரிக்காரன் பொண்ணு. அங்கதான இருக்கா?”
“அனாவசியமா இதுல அருணிமாவை இழுக்காதீங்க.”
அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. ஆனால் அந்தக் கோபம் அவர் சொன்னதில் பாதி உண்மை இருந்தது என்பதால்தான். மும்பையில்தான் அவள் இருந்தாள். இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். பேசி மாதங்களாகின்றன. ஆனால் வாசிப்பின் மீதிருந்த அவன் கவனத்தைக் கலைப்பதில் சடகோபன் வெற்றி கண்டிருந்தார்.
இப்போது அவன் மனம் முழுக்க அருணிமா அடைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அருகாமை. சுருள்முடி. முத்தமிடட்டுமா என்று அவன் முதல் முறை கேட்டபோது அவளிடம் அதிசயமாக வெளிப்பட்ட வெட்கம். அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதைக் கூட ஊடுருவிப் பார்த்துவிடும் கூர்மையான விழிகள். வெடுக் வெடுக்கென்ற பேச்சு. அவளை இழந்தது கூட இந்தப் புல்லாங்குழல் இசைக்காகத்தான்.
அவனைப் பற்றியும் அவன் தந்தையைப் பற்றியும் முழுதாக அறிந்த பிறகு அவனுடைய இசைப் பயணத்துக்கு இடையூறாக இருக்கப் பிடிக்கவில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்.
“அருணிமா… அவசரப்படாதே.. ப்ளீஸ்.. நாம ஏதாவது வழி கண்டுபிடிப்போம்.”
“எனக்குப் படிப்பு முடியுது. இனி என்னால சென்னையில் வாழ முடியாது. மும்பைதான் ஃபைனான்ஸ் கேபிட்டல். நீ அங்கே வர முடியாது. என்னை நம்பி அங்கே அப்பா, பாட்டி இருக்காங்க. உனக்கு இனி இதுதான் வாழ்க்கைன்னா நீ இசை தெரிஞ்ச, அதை ரசிக்கற ஒரு பொண்ணைப் பாத்துக்கோடா. இல்ல, அவளும் மியூசிசியனா இருந்தா பெட்டர்.”
அன்று அவளை ஹாஸ்டல் வாசலில் விட்டுவிட்டு வந்தபோது மழை கொட்டிக் கொண்டிருந்தது. அழக்கூடியவள் அல்ல என்றாலும் அன்று அவள் அழுதாளா என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை. உனக்குத் திறமை இருக்கு. நீ நல்லா வருவடா என்று சொல்லிவிட்டு அவன் இரண்டு கைகளையும் பற்றி அவள் பதித்த முத்தம் அந்த ஈரத்திலும் சூடாக இருந்தது. இன்னும்….
திடீரென்று அவனிடமிருந்த புல்லாங்குழல் வெடுக்கென்று பறிக்கப்பட்டது.
“என்ன எழவுடா இது.. துருத்தி ஊதற மாதிரி… சங்கீதத்து மேல நாட்டம் இல்லைன்னா உன் இஷ்டத்துக்கு எங்கேயாவது எவளோடாவது போய்த் தொலை. இப்படிக் கடனுக்கு மாரடிக்காதே”
புல்லாங்குழலைத் தூக்கி அறையின் மூலையில் எறிந்துவிட்டு அவர் வெளியே போய்விட்டார்.
அன்று தன்னுடைய வாசிப்பு படு கேவலமாக இருந்தது என்று அவனுக்கும் தெரிந்திருந்தது. அதைக் கேட்டு சடகோபனைப் போன்ற மேதைக்கு அப்படி ஒரு கோபம் வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.
அவனுக்கு சடகோபனை அப்பாவாக அவ்வளவு பிடிக்கும். ஒரு இசைக் கலைஞனாகவும். அவர் இசையின் வெறித்தனமான ரசிகன் வேணு. அதனாலோ என்னவோ தானும் சடகோபனாக ஆக வேண்டும் என்ற எண்ணமே அவனை அச்சுறுத்தியது.
இந்தப் பரந்த உலகத்தில் வேறு யாருக்காவது மகனாகப் பிறந்திருந்தால் சடகோபனின் குழல் இசையை ரசித்தபடியே எத்தனை சுகமாக காலத்தை ஓட்டியிருக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொள்வான். ஆனால் இத்தனை காலம் பாரம் சுமந்த வேணுவின் வண்டியில் கடைசி மயிலிறகு அது.
மறுநாளே மும்பைக்கு வருவதாக அலுவலகத்தில் ஒப்புதல் சொல்லிவிட்டான். சடகோபனிடம் சொன்னபோது முகத்தில் எதுவும் உணர்ச்சியைக் காட்டாமல் இருந்தார். ஆனால் உள்ளுக்குள் அவர் மொத்தமாக நொறுங்கியிருந்தார்.
சொக்கன்தான் அவனிடம் வந்து கெஞ்சினார். அவன் அப்பாவின் உதவியாளர். அவனுடைய தாத்தா காலத்திலிருந்து உதவியாளராக இருக்கிறார். சம்பளமே இல்லை என்று சொன்னால்கூட அங்கேதான் இருப்பார். அவன் அப்பாமீது அவ்வளவு பக்தி. வீட்டின் வாட்ச்மேன், சமையல்காரர், தோட்டக்காரர் என்று எல்லாம் அவர்தான்.
“ரெண்டு பேரும் கோபத்துல இருக்கீங்க. இப்ப பெரிய முடிவு எதுவும் எடுக்க வேண்டாமே தம்பி? தனக்குப் பின்னால் தன்னோட இசை இல்லாம போயிருமோன்னு அய்யா பயப்படறார்.”
“வாழ்க்கையே இல்லாம போயிடுமோன்னு நான் பயப்படறேன். என்னை விட்டுடுங்க மாமா.”
அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியபோது சடகோபன் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அய்யா.. நீங்க ஒரு வார்த்தை போக வேணாம்னு சொல்லுங்க. அதை மீற தம்பியால முடியாது.”
உண்மையாகவே அவன் போகிறான் என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்லவில்லை.
மும்பை சென்று இறங்கியதும் அவனை முதலில் அழைத்தது அருணிமாதான்.
“வேணு… இடியட்… நீ பாட்டுக்கு ஓடி வந்துட்டே. அப்பா தனியா என்னடா பண்ணுவார்? பாவம்டா.”
“அவரா பாவம்? நான் மும்பைக்கு வரதே உன்னாலதான்னு சொல்றார் .”
“நானா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பேன். மொதல்ல அவருக்கு போன் பண்ணிப் பேசு. உடைஞ்சு போயிருவார்டா.”
இப்போது அவனுக்கு அருணிமாமீதும் கோபம் வந்தது. அவனைத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டு இப்போது எந்த உரிமையில் பேசுகிறாள் இவள்?
“இது என் வாழ்க்கை. நீ தலையிடாதே.”
“செருப்பால அடிப்பேன். நீ எங்க இருக்கே? அங்கேயே இரு.”
அன்று அவனுக்காகக் கிளம்பி வந்தவள், இன்றுவரை அவனை விட்டுப் போகவே இல்லை. ஆனால் வேணுகோபால் திரும்பப் போகும் எண்ணத்தோடு வரவில்லை என்பதை மட்டும் அவள் புரிந்துகொண்டாள்.
சடகோபன் திருமணத்துக்கு வர மறுத்தபோது அருணிமாதான் நேரில் சென்று சண்டையிட்டு அழைத்து வந்தாள். அப்பாவும் மகனும் அப்போதும் பேசிக் கொள்ளவில்லை. அருணிமா அடிக்கடி தொலைபேசியில் சடகோபனுடன் பேசுவாள். ஆரம்பத்தில் முறுக்கிக் கொண்டிருந்தவர் பிறகு சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். அவனைவிட சடகோபனைப் பற்றி அவளுக்குத்தான் அதிகம் தெரியும்.
மறுபடி ஒருமுறை மயக்க நிலையில் இருந்த அவரைப் பார்த்தான் வேணு. இந்த எட்டு ஆண்டுகளில் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. அவரோடு ஒரு முறை பேசியிருக்கலாம் அவன். அப்படி என்ன பாழாய்ப்போன வைராக்கியம்.
“கண் முழிக்காமலே போயிடுவாரா டாக்டர்?” அவன் குரல் தழுதழுத்தது.
“வைட்டல்ஸ் நல்லாதான் இருக்கு. ப்ரெயின்ல ஹெமரேஜ். அதெல்லாம் க்ளியர் பண்ணியாச்சு. இனி நம்ம கைல எதுவும் இல்லை. அவர்தான் ஃபைட் பண்ணி வரணும். ப்ரே பண்ணிக்க. எது வேணா நடக்கலாம்.”
டாக்டர் பிரசாத் வேணுவின் கையைப் பிடித்து எழுப்பினார்.
“நீ போய் கொஞ்சம் தூங்கிட்டு நாளைக்கு வா. பிசாசு மாதிரி இருக்கே.”
திரும்பி ஒரு முறை தன் அப்பாவைப் பார்த்தான் வேணு. இப்போதும் அதே அமைதி. பிறகு தளர்வாக எழுந்து வெளியே வந்தான். சூரியன் இருந்தும் இல்லாதது போன்ற ஒரு மாலை நேரம். அவன் அப்பாவைப் போலவே.
டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்து இறங்கினான். மந்தைவெளியில் மிச்சம் இருந்த சில தனித்த பழைய வீடுகளில் ஒன்று. இரண்டு கிரவுண்ட் இடத்தில் கால்வாசி இடத்தில்தான் வீடு. மீதி இடத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பெரும்பாலும் மூங்கில். நடைபாதைகள் தவிர பிற இடங்களில் வளரும் செடிகளையெல்லாம் அப்படியே விட்டுவிடச் சொல்வார் சடகோபன். எப்போதும் நிழலும் ஈரப்பதமுமாக வனம் போன்ற இடம். எத்தனையோ பெரிய பில்டர்களும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளும் அன்பாகவும் பிறகு மிரட்டியும் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். சடகோபன் அந்த வீட்டை விற்பதாக இல்லை. அவன் கொள்ளுத்தாத்தா வாங்கிப் போட்ட இடம். பிரிட்டிஷ் காலத்தில் கட்டிய வீடு. சிறிய ரிப்பேர்கள் தேவை என்றாலும் இன்னும் நல்ல பலத்துடன்தான் இருந்தது.
பாசி பிடித்த காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மூங்கில் கொத்துக் கொத்தாக வளர்ந்து நின்றது. அந்த வீட்டின் அடையாளமே அதுதான். மூங்கில் வனம் என்று அதற்கு அவன் கொள்ளுத்தாத்தா பெயரிட்டிருந்தார். வெளிப்புறக் கதவின் தாழ்ப்பாள் புல்லாங்குழல் வடிவத்தில் இருக்கும்.
சொக்கன் ஓடி வந்து கேட்டைத் திறந்தார். இருட்டிக் கொண்டிருந்தது.
பறவைகள் சத்தம் காது கிழித்தது. அந்தப் பகுதியின் அதீத வளர்ச்சி காரணமாக கட்டிடத்துக்காக வேண்டி சுற்றுப்புறத்தில் உள்ள ஒவ்வொரு மரமாக இடத்தின் சொந்தக்காரர்கள் வெட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படி வீழ்ந்த மரங்களின் வீடிழந்த பறவைகள் தனது வீட்டிலுள்ள மரங்களுக்குக் குடியேறுவதாக சடகோபன் நம்பினார். மாதம் இரண்டு மூட்டைகள் தானியம் பறவைகளுக்காக வந்து இறங்கிவிடும்.
“ஏன் அங்கிள் தனியா இருக்கீங்க. எங்க கூட வந்துடுங்க” என்று அருணிமா ஒரு முறை அவரிடம் சொன்னாள்.
“நான் எங்கேம்மா தனியா இருக்கேன். சொக்கன் இருக்கான். லவ்லி இருக்கு. ஏழெட்டுப் பூனைங்க வந்து போகுது. அப்புறம் இந்த பேர்ட்ஸ். எத்தனைன்னு கணக்கே இல்லை. போட்டது போட்டபடிக்கு வந்துட முடியுமாம்மா?”
ஆனால் அதெல்லாம் காரணமில்லை. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் யார் விட்டுக் கொடுப்பதென்ற பிடிவாதம் என்று அவளுக்கும் தெரியும். கல்லுளிமங்கன் கூட்டம்.
அப்பாவின் வெள்ளை அம்பாசிடர் கார் போர்ட்டிகோவில் நின்றிருந்தது. ஆனால் பளபளவென்று துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை மெல்ல வருடிக் கொடுத்தான் வேணு. அப்பாவையே வருடுவது போலிருந்தது. லவ்லி வாலை ஆட்டியபடி ஓடி வந்தது. அவன் வீட்டை விட்டுப் போன பிறகுதான் சடகோபன் அதை வளர்க்க ஆரம்பித்திருந்தார். அதற்கு எப்படித் தன்னை அடையாளம் தெரிகிறது என்று வேணுவுக்குப் புரியவில்லை.
“அய்யா எப்படி இருக்காரு?” சொக்கன் விசாரித்தார்.
“அப்படியேதான் மாமா இருக்கார். ஆபத்தில்லை. வெயிட் பண்ணலாம்னு டாக்டர் சொல்லியிருக்கார்.”
“அவருக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது தம்பி. கம்பீரமா வீட்டுக்கு வருவார் பாருங்க. இருங்க காபி போட்டுட்டு வரேன்.”
வேண்டாம் என்றாலும் விட மாட்டார். அவனுக்கும் அப்போது காபி ஒரு தேவையாக இருந்தது.
மெல்ல அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பழக்கப்பட்ட புங்கை எண்ணெயின் வாசனை வீட்டில் வீசியது. புல்லாங்குழல்களை பத்திரப்படுத்த பூசி வைக்கும் எண்ணெய் அது.
மெட்ராஸ் டெரஸ் போடப்பட்ட வீடு. நூறு ஆண்டுகளாவது இருக்கும். கூரையைத் தாங்கி நின்ற மரங்கள் எல்லாம் பர்மாவிலிருந்து வந்த தேக்கு மரங்கள். சுவர்களிலும் அலமாரியின்மீதும் புகைப்படங்கள். பெரும்பாலும் அவன் தாத்தாவோ அப்பாவோ ஏதோ ஒரு மேடையில் யாரோ ஒரு பெரிய மனிதரிடம் விருது வாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்ணாடி அலமாரியில் கேடயங்களும் விருதுகளும் அணிவகுத்திருந்தன. அங்கே அவன் படங்களும் இருக்க வேண்டும் என்றுதான் சடகோபன் விரும்பினார்.
அவருக்கு உலகமே புல்லாங்குழல்தான். அதிலிருந்து வெளிவரும் இசைதான் அவருக்கு மூச்சு. அதை வாசிப்பதில் மட்டுமல்ல, அதை எப்படி உருவாக்குவது என்பது குறித்தும் தேடித் தேடி பல நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். தான் வாசிக்கும் புல்லாங்குழல்களைக்கூட தானே உருவாக்கிக் கொள்வார்.
ஒரு புல்லாங்குழலுக்காக இத்தனை மெனக்கெட வேண்டுமா என்று அவரிடம் பலர் கேட்டதுண்டு.
“இசைக் கலைஞன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதோட வாத்தியம். அதை ஒரு வாஞ்சையோட உருவாக்கணும். அந்த அன்பும் நம்ம இசையில் கலந்து வெளியே வரும். முப்பத்தஞ்சாயிரம் வருசத்துக்கு முன்னயே மனுசன் அதை செஞ்சு வாசிச்சிருக்கான். அதாவது பேச்சு மொழிக்குப் பல ஆயிரம் வருசம் முன்னாடி. புல்லாங்குழல் இயற்கையோட இசை. நம்ம பேச்சுல இல்லை மூச்சுல இருந்து வருது. அதை விட ஆன்மாவுக்கு நெருக்கமா இன்னொரு இசை கிடையாது.”
ஒவ்வொரு மூங்கிலுக்கும் ஒரு சத்தம் இருக்கும் என்பார் சடகோபன். அதைத் தேர்ந்தெடுப்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது என்பார். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட காட்டில் கிடைக்கும் மூங்கில்களை மட்டுமே அவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்துகிறார்கள். அங்கிருந்த ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்தான் சொக்கன். பரம்பரையாக புல்லாங்குழல் செய்யும் குடும்பம். அவன் தாத்தா காலத்தில் அப்படி வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார்.
கிட்டத்தட்ட சொக்கனும் சடகோபனும் அந்த வீட்டில் ஒரு ஆய்வுக்கூடமே நடத்தி வந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் பிபிசியில் இருந்து வந்து இது குறித்து ஆவணப்படம் எடுத்துப் போயிருந்தார்கள். அதில் சொக்கனும் புல்லாங்குழல் செய்வதன் நுணுக்கங்கள் குறித்துப் பேசியிருந்தார்.
காபியோடு வந்தார் சொக்கன்.
“பாப்பா எப்படி தம்பி இருக்கு?”
அவருக்குப் பாப்பா என்பது அருணிமா. அவசரத்தில் கிளம்பும்போது அவளை அழைத்து வர முடியவில்லை என்றான்.
“நீங்க நினைக்கற மாதிரி அய்யா இல்லை தம்பி. சமீபமா ரொம்ப பலவீனமாயிட்டார். சாடை மாடையா உங்களைப் பத்திதான் பேசிட்டு இருப்பார் தம்பி. அவருக்கு உங்க மேல கோபம் எதுவும் இல்லை. வருத்தம்தான்.”
அவன் மனதில் ஓடிக் கொண்டிருப்பதைப் படித்தவர் போல அவர் பேசினார்.
“அவரை மாதிரியே நீங்களும் சங்கீதத்துல ஆளாகி வரலைன்னு வருத்தம். அதை விட அவரோட இதெல்லாம் முடிஞ்சு போயிருமோன்னு கவலை. நீங்க நல்லாதான் வாசிச்சுட்டு இருந்தீங்க. ஆனா அதை மனசு விட்டுப் பாராட்டினா நீங்க மேல மேல போகாம தேங்கிடுவீங்கன்னு நினைச்சுட்டார். ஒரு வார்த்தை மனசு விட்டுப் பாராட்டியிருந்தா நீங்க அவர் கூடவே இருந்திருப்பீங்க. அத நெனச்சு அப்பப்ப வருத்தப்பட்டுக்குவார்.”
அவன் பதில் பேசவில்லை.
“சரி. எல்லாம் விதிப்படி நடக்குது. நீங்க தூங்குங்க தம்பி. நானும் எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டுப் படுக்கப் போறேன்.”
சொக்கன் சென்றுவிட்டார். அவனுக்கு உறக்கம் வரவில்லை. அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கலவையான உணர்வுகள் அலை அலையாய் அவன் மீது வந்து மோதிக் கொண்டே இருந்தன. அப்பா மருத்துவமனையில் சென்று படுத்துவிட்டாலும் அவர் இத்தனை நாள் அனுபவித்த தனிமை அங்கேதான் அமர்ந்திருந்தது. அது அவனை உற்று பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் கோபத்தோடுதான் மும்பையிலிருந்து வந்தான். ஆனால் எல்லாம் அவரை மருத்துவமனையில் பார்க்கும் வரைதான். அந்த நொடியிலிருந்து அவன் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தான்.
எழுந்து சென்று அலமாரியைத் திறந்தான். சடகோபனின் புல்லாங்குழல்கள் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியைத் திறந்தான். பொதுவாக புல்லாங்குழலைப் பயன்படுத்தாத காலங்களில் புங்கை எண்ணெய் தடவி வைப்பது வழக்கம். ஆனால் சடகோபனுக்கு அதற்கான அவசியம் பெரும்பாலும் வந்ததில்லை. உடல்நிலை சரியில்லாத நாட்களைத் தவிர அவர் பயிற்சி செய்யப் புல்லாங்குழலை எடுக்காமல் இருந்ததே இல்லை. இனிமேல் அதற்கு புங்கை எண்ணெய் தேவைப்படும் என்று அவனுக்குத் தோன்றியது.
அவருடைய பேஸ் ஃப்ளூட்டை எடுத்து நன்றாகத் துடைத்தான். என்னை யாராவது வாசியுங்களேன் என்று அது கேட்பது போலிருந்தது.
வாசிக்கத் தொடங்கினான். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகான வாசிப்பு. தப்பும் தவறுமாக இருந்தது. இடையில் அழுகை வேறு வந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்த இடத்தில் வைத்து விட்டான். கோமாவில் இருக்கும் அப்பா எழுந்து வந்து மண்டையில் ஒரு போடு போடுவாரோ என்று தோன்றியது
அடுத்தடுத்த நாட்களில் அவன் அப்பாவின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அருணிமா விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். தினமும் கோவிலுக்குப் போவது போல மருத்துவமனை சென்று சடகோபனைப் பார்த்து வந்தார்கள்.
அந்த வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. அக்கம் பக்கத்தில் இருந்து உள்ளே வந்து பேசுபவர்களும் இல்லை. செடி கொடிகள் அடர்ந்திருந்ததால் வண்டி வாகனங்களின் சத்தம்கூடக் கேட்காது. ஒரு காட்டின் நடுவே கட்டப்பட்ட கோட்டை போலத்தான் இருக்கும் அந்த வீடு. புல்லாங்குழல் வாசிப்பதற்காகவே அந்த வீடு அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றும் அவனுக்கு.
அருணிமா அவனை வாசிக்கச் சொல்லிக் கேட்பாள்.
“வேணு ப்ளீஸ்டா… நீ வாசிச்சு எனக்குக் கேக்கணும் போல இருக்கு.”
அரை மணி நேரம் அசையாமல் அவன் வாசித்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“என்னடி?”
“ப்ச்.. டிவைன்டா… என்னாலதான் இதை நீ விட்டுட்டேன்னு நினைச்சா கில்ட்டியா இருக்கு.”
“விடவெல்லாம் இல்லை. சுமாரா கச்சேரியெல்லாம் பண்ணியிருக்கேன். ஆனா எங்கப்பாவுக்கு நான் அவரை மாதிரியே வரணும்னு ஆசை. தன்னோட இசையை அவரோட குரல்னு சொல்லுவார். அவரோட குரல் எனக்கு எப்படி வரும்? அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது. எதுக்கு அவருக்கு என்னால ஒரு சங்கடம்னுதான் நானே நிறுத்திட்டேன்.”
“நான் அப்பா வாசிச்சுக் கேட்டிருக்கேன்டா. ஆனா பயிற்சி இருந்தா அவரை மாதிரி நீயும் வாசிச்சிருப்பே.”
“சும்மா சொல்லாதே.”
சொக்கன் காபி கொண்டு வந்தார்.
“நல்லா சொல்லு பாப்பா.. மனசும் மூச்சும் ஒருமிச்சா புல்லாங்குழல் நம்ம உடம்போட ஒரு அங்கமாயிரும். நாம என்ன நினைக்கிறோமோ அதைப் பேசும்”
“அதுதான் ஒருமிக்கலையே. போய் வேலையப் பாருங்க.”
சொல்லிவிட்டு மறுபடி வாசிப்பைத் தொடர்ந்தான் வேணு.
இருவருமே ஒரே நேரத்தில் அலுவலக விடுப்புகளை வீணடிப்பதால் பயனில்லை என்று சொல்லிவிட்டு அருணிமா ஒரு வாரத்தில் திரும்பச் சென்றுவிட்டாள்.
ஒவ்வொரு நாளாகக் கரைந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. அப்பாவின் நிலைமை முன்னேறுவது போலத் தெரியவில்லை. நினைவும் திரும்புவதாகத் தெரியவில்லை. கூடுதலாக நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது. நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே போனார்.
காலை எழுந்து மருத்துவமனை சென்று வருவது. வந்தபின் புல்லாங்குழல் வாசிப்பது. பின் சாப்பிடுவது. மீண்டும் புல்லாங்குழல் வாசிப்பது என்று இதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தான் வேணு. எதையாவது செய்து தன் அப்பாவை எழுப்பி அழைத்து வந்துவிட முடியாதா என்பது போல அவன் செயல்கள் இருந்தன.
எத்தனை முயன்றாலும் அவன் குழலிசையால் சடகோபனின் தனித்த குரலை அவனால் தொட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் தோல்வியில் மனம் வெறுத்துப் போகும். போதும் இனி விட்டுவிடலாம் என்று நினைப்பான். ஆனால் மறுநாள் மருத்துவமனையில் கண் மூடி மெலிந்து கிடக்கும் சடகோபனைப் பார்க்கும்போதெல்லாம் மறுபடி ஒரு வைராக்கியம் கிளம்பி விடும். விட்ட சவாலில் ஜெயிக்க முடியாமல் பாதியில் ஓடியவன்தானே நீ என்று அவர்கேட்பது போலிருக்கும். வீட்டுக்கு வந்தும் வராததுமாக மறுபடி புல்லாங்குழலை எடுத்து வெறித்தனமாகப் பயிற்சி செய்வான். சில நாட்களில் நள்ளிரவு வரையிலும் கூட. வாசிக்காத நேரத்தில் கூட அவன் மனம் புல்லாங்குழல் பயிற்சியில் இருப்பதாகத் தோன்றும்.
அன்று டாக்டர் பிரசாத் அவனிடம் கவலையோடு பேசினார்.
“வேணு… அவர் நிலைமை மோசமாயிட்டேதான் போகுது. மூச்சு விட சிரமப்படறார். வெண்டிலேட்டர்ல வைக்கலாம். ஆனால் ஏற்கனவே கோமால இருக்கறதால பெருசா ரெக்கவரிக்கு வாய்ப்பு இல்லை. செலவுதான்.”
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவனுக்குப் புரிந்தது. ஆவேசமாக இடை மறித்தான்.
“செலவைப் பத்தியெல்லாம் கவலை இல்லை டாக்டர்.”
அவன் குரல் நடுங்கியது. அவனால் எப்படி அப்பாவின் உயிரை அப்படிப் போக விட முடியும்? அவர் போனால் அவரோடு ஒரு வித்தையும் அல்லவா முடிந்து போகிறது? அதற்கு அவனும் அல்லவா காரணம்? அவன் சேமிப்பு மொத்தமும் கரைந்தாலும் பரவாயில்லை. தவிர, அவன் இன்னும் தன் சவாலில் ஜெயிக்கவில்லையே?
அவருக்கு சீரியஸ் என்றவுடன் அருணிமாவும் கிளம்பி வந்துவிட்டாள். டாக்டரிடம் அவளும் பேசினாள். அவளுக்கு நிலைமை தெளிவாகப் புரிந்தது. வேணுவிடம் வந்தாள்.
“வேணு. உன்னோட ஃபீலிங்ஸ் புரியுது. கொஞ்சம் பிராக்டிகலாவும் யோசி. அப்பாவை இப்படியே எத்தனை நாள் வெச்சிருக்கப் போறோம்? ஏற்கனவே ரெண்டு மாசம் ஆச்சு. பெட் சோர் எல்லாம் வந்து அவருக்கும் சிரமம்தான் இல்லையா?”
அவன் குழந்தை போல மூர்க்கமாகத் தலையசைத்தான். பின் அவள் தோளில் முகம் புதைத்து அழுதான்.
“முடியாது அருணிமா. அவரோட இசை இந்த உலகத்துக்குத் தேவை. அவரை மாதிரி வாசிக்க இன்னொரு ஆள் இல்லடா. நானும் அவரைக் கைவிட்டுட்டேன். அவர் பிழைக்க சின்னதா ஒரு சான்ஸ் இருந்தாக் கூட அதை நான் முயற்சி பண்ணிப் பாக்கதான் போறேன். ப்ளீஸ்.”
எப்போதும் உறுதியாக நிற்கும் அருணிமா அன்று எதுவும் சொல்லவில்லை. இந்த நேரத்தில் என்ன சொன்னாலும் அது தவறாக இருக்கும் என்று புரிந்தது போல அமைதியாகிவிட்டாள்.
அதே அமைதியைச் சுமந்து கொண்டுதான் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். எதுவும் பேசாமல் கனத்த மவுனத்துடன் அமர்ந்திருந்தார்கள். இது புரிந்தது போல சொக்கனும் எந்த விசாரிப்பும் செய்யாமல் உணவை எடுத்து வைத்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.
சூழலின் இறுக்கத்தைத் தாங்க மாட்டாமல் வழக்கப்படி அப்பாவின் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு அமர்ந்தான் வேணு. ஒரு மாபெரும் சோகத்தின் நுழைவாயிலில் தான் நிற்பதை அவனால் உணர முடிந்தது.
ஐசியுவில் பார்த்த எலும்புக் கூடு போல மெலிந்த அவன் அப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவர் உடலோடு இணைக்கப்பட்டிருந்த குழாய்கள். காற்று உள்ளே போவதும் வெளியே வருவதுமாக புஸ் புஸ்ஸென்ற சத்தத்துடன் ஒரு இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது. இதுதானா அவர் மூச்சு? இதுதானா அவர் இசை?
“வெண்டிலேட்டர் ட்யூப் போடும்போது த்ரோட்ல கொஞ்சம் காயம் இருக்கும். வயசானவங்களுக்கு சில நேரத்துல பல்லு ஆடிட்டு இருந்தா விழுந்துடும். திரும்ப வந்து பல்லு எங்கேன்னு கேக்காதீங்க.”
ஒரு மருத்துவர் இதை உணர்ச்சியின்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
யோவ்… எப்படியான ஒரு இசை பிறக்கும் இடம் தெரியுமா அது என்று கதற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அந்தக் கதறல் கூட புல்லாங்குழல் இசையாகத்தான் அவனுக்குக் கேட்டது.
அவனுக்கு இந்த இசை மீதெல்லாம் வெறுப்பில்லை. அவன் அப்பாவின்மீதும் வெறுப்பில்லை. ஆனால் தன்னால் அவருடைய எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க முடியுமோ என்ற நடுக்கம் இருந்தது. அப்படி ஒரு மேதைக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று சொல்லிவிடுவார்களோ? தன்னால் அவருக்கு அவமானம் சேருமோ? இவையெல்லாம்தான் அவனை இரவும் பகலும் துரத்தின.
என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. எனக்கு உங்கள்மீது எந்தக் கோபமும் இல்லை. என் மீதுதான். என் அச்சங்களின் மீதுதான். என் அவநம்பிக்கையின் மீதுதான். அதனால்தான் நானாக ஏதேதோ காரணங்களைக் கற்பித்துக் கொண்டு உங்களிடமிருந்து விலகினேன். உங்கள் கனவை நான் சிதைத்து விட்டேன்.
ஒரு முறை என்னோடு பேசி விடுங்கள் அப்பா. என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லிவிடுங்கள். ஒரு முறை. ஒரே ஒரு முறை. என்னோடு பேசுங்கள். எனக்கு உங்கள் குரலைக் கேட்கவேண்டும். அப்பா. அப்பா.
எப்போதும் வெளியே தொடர்ந்து கேட்கும் பறவைகளின் இரைச்சல் கூட அன்று கேட்கவில்லை. சடகோபனின் பேஸ்ஃப்ளூட்டின் இசை மூங்கில் வனத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்ய இயற்கை கூட விரும்பவில்லை. தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருந்த அவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அவன் வாசிப்பதை நிறுத்தவில்லை. அவன் தன் அப்பாவிடம் விடாமல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான்.
வேணுகோபால் ஒரு வழியாக கண்களைத் திறந்தபோது ஆணியடித்தது போல அவனையே பார்த்தபடி அருணிமா சுவருக்கு சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். வலது கையால் வாயைப் பொத்தி பொங்கி வரும் அழுகையை அடக்கியிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர். அவனுக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை.
“வேணு… ப்ரில்லியண்ட். ப்ரில்லியண்ட்.. இதுதான் இத்தனை நாள் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தியா? அப்படியே அப்பா உன் மேல இறங்கி வந்து வாசிச்ச மாதிரி.. ”
திக்கித் திணறி அழுகையினூடே அவள் சொல்லி முடிக்க, வேணு நம்பிக்கை இல்லாமல் சொக்கனைப் பார்த்தான். அவர் தரையில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.
தொடுதிரையில் “டாக்டர் பிரசாத்” என்ற பெயரோடு வேணுகோபாலின் மொபைல் அதிரத் தொடங்கியது.