புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பத்திரிக்கையாளர் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) அறிவித்திருந்தார். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரியங்கா காந்தி சிரித்ததுபோன்று வீடியோ ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ காட்சியை பார்த்த பலரும் பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.

 

 

வீடியோவின் உண்மை தன்மை

பிப்ரவரி 14ஆம் தேதி இரவு உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது, ராணுவ வீரர்களின் இறங்கல் செய்தியை கேட்டு பிரியங்கா, சிரித்ததாக 11 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று ட்விட்டரில் @iAnkurSingh என்ற பெயரிலுள்ள கணக்கில் பதியப்பட்டிருந்தது.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை பிபிசி ஆய்வு செய்தபோது, பிரியங்கா காந்தி முன்னெப்போது பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை மெதுவாக ஓடச் செய்து, அவர் சிரிப்பது போன்ற பகுதியை மட்டும் 11 நொடிகளுக்கு கட் செய்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்தது.

ஜம்மு-காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தி குறித்து அறிந்த பிரியங்கா, தனது முதல் பேட்டியை ரத்து செய்து, இரங்கல் தெரிவித்தார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரியங்கா காந்தி தனது பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக பல ஊடகங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டியிருந்தது.

 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசியல் குறித்து உரையாடுவதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள வேளையில் அரசியல் குறித்து இந்நேரத்தில் பேசுவது பொருத்தமற்றதாக என்றும் பிரியங்கா காந்தி கூறியிருந்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒற்றுமையுடன் துணை நிற்கிறோம் என்று தெரிவித்த பிரியங்கா காந்தி, இது மாதிரியான சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.