மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில், புதுப்புதுச் சின்னங்களை வழங்கி, தேர்தல் ஆணையம் காலத்திற்கேற்ப மாறி தேர்தலை கலைக்கட்ட தொடங்கியுள்ளது.
எந்தத் துறையில் வளர்ச்சியடைந்ததோ இல்லையோ, சுதந்திரம் பெற்றப்பின் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியா. நடைப்பெறும் ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது கட்சிகள் களமிறங்குவது வாடிக்கையாகிவிட்டது. கட்சிகள் பெருகப்பெருக அவர்களுக்கான கட்சிச் சின்னங்களும் பெருகிக்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லமல் ஒவ்வொரு தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு, காலத்துக்கேற்ப இந்திய தேர்தல் ஆணையமும் புதிய சின்னங்களை அனுமத்தித்து வருகின்றது. அதன்படி தற்போது 190 சின்னங்கள் தேர்தல் ஆணையத்தின்வசம் உள்ளன.
சிசிடிவி கேமரா, மொபைல் சார்ஜர், பென் டிரைவ், டிவி ரிமோட், கம்ப்யூட்டர் மவுஸ் போன்றவை தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சின்னங்களாக அறிமுகமாகியுள்ளன. இவற்றில் மொபைல் சார்ஜர், டிவி ரிமோட் போன்றவை குக்கிராமங்களில்கூட அறிமுகமாகியுள்ள நிலையில் பென் டிரைவ், சிசிடிவி கேமரா போன்றவற்றை கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவது கடினமாக உள்ளதாக கருதுகின்றனர்.
2019 நாடாளுமன்றத்தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் தொகுதியில் 170 விவசாயிகள் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளனர். கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 185 வேட்பாளர்கள் அங்கே போட்டியிடுகிறார்கள். எனவே, அந்த தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படவுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் பட்டியலிலுள்ள அனைத்து சின்னங்களும் அந்தத் தொகுதி வாக்காளர்கள்முன் அறிமுகப்படுத்தப்படும் எப்பது குறிப்பிடத்தக்கது.