நான் கொடுத்த வாக்குறுதியில் ஒருபோதும் தவறியதில்லை என்று ராகுல் காந்தியின் சொற்களை முதல் பக்கத்தில் கொண்டுள்ள தேர்தல் அறிக்கை 6 தலைப்புகளின் கீழ் 53 பக்கங்கள் நீள்கின்றன. நாடெங்கிலும் 60 இடங்களில் ‘121 பொது ஆலோசனைகள்’, ‘விவசாயிகள், பொருளாதார வல்லுநர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழில்முனைவோர் மற்றும் வழக்கறிஞர்களோடு 51 அமர்வுகளில் நடத்தப்பட்ட விவாதங்கள்’, 12 நாடுகளில் வாழும் NRI – வெளிநாடுவாழ் இந்தியர்கள் என பலரிடமும் ஆலோசிக்கப்பட்டு ஆட்சியமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழு செயல்திட்டமாக இத்தேர்தல் அறிக்கை இருக்கிறது.
முன்னுரையில் இது எங்கள் பொறுப்பு, நாங்கள் உறுதியளிக்கிறோம்; நாங்கள் செயல்படுத்துவோம்! என்று காங். தலைவர் ராகுல் காந்தி கையொப்பத்தோடு தொடங்குகிறது தேர்தல் அறிக்கை.
Kaam, Daam, Shaan, Sushashan, Swabhimaan, Samman
காம் – வேலைவாய்ப்பு,
தாம் – பொருளாதாரம்,
ஷான் – வல்லமையில் பெருமிதம்,
சூஷாசன் – நல்லாட்சி,
சுவபிமான் – சுயமதிப்பீடு,
சம்மான் – கண்ணியமான வாழ்வு.
இப்படி ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல்வேறு திட்டங்களையும் செயல்வடிவங்களையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முன்வைக்கிறது.
காம் – வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்:
முதலாவதாக வேலைவாய்பு,
வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பட்டக் கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் உறுதியளிக்கிறது.
அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாகவும் தற்போதுள்ள வேலை வாய்ப்புகளை தக்கவைப்பதாகவும் உறுதியளிக்கிறது காங்கிரஸ். மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழிற்துறை மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சிக்கும் புதிய அமைச்சகமாக “தொழிற்சாலை, சேவை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்” உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அங்கண்வாடிப் பணியாளர்கள், சமூக சுகாதார பணியாளர்கள், கிராப்புற பணியாளர் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, அந்த பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்.
“சுற்றுலா மேம்பாட்டு வங்கி” நிறுவப்பட்டு, சுற்றுலாத்துறையின் வளர்ச்சி சார் பணிகளுக்கு நிதி வழங்கப்படும் எனவும் சுற்றுலா சார்ந்த தொழில்களைச் செய்வோருக்கு வரிகளில் சலுகைகளும் வழங்கப்படும்.
தொழில்களில் MSMEயின் பங்கு முக்கியமானது. ஆனால் அதன் வரையறைகள் எல்லாமே முதலீடு சார்ந்ததாகவே உள்ளது. அதாவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் என்ற வரையறைகள் முதலீட்டின் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டன. அவை 10க்கும் குறைவான ஊழியர்கள் கொண்டது குறு நிறுவனம் எனவும், 11ல் இருந்து 100 பேர் வரை கொண்ட நிறுவனம் சிறு நிறுவனம் எனவும் 101 முதல் 500 பேர் வரை பணியாற்றும் நிறுவனம் நடுத்தர நிறுவனம் என மற்றியமைக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.
குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு அவை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாக ஒழுங்குமுறை விதிகளில் சில விலக்குகள் அளிக்கப்படும்; 1 ஏப்ரல் 2019 முதல் மூன்றாண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வரி விதிகளைத் தவிர அனைத்து விதிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய தொழில்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது பொருந்தும்; முன்பே தொடங்கப்பட்டவற்றுக்கு அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து இச்சட்டம் பொருந்தும் என தெரிவிக்கிறது அறிக்கை.
வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களில் “தொழிற்பயிற்சி”யினை கட்டாயமாக்கி தொழிற்பயிற்சி பெற்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வழிசெய்ய தொழில் நிறுவனங்கள் ( பெருநிறுவன சமூக பொறுப்புப் பணிகள்) விதிகள், 2014 திருத்தம் செய்யப்படும். இஃது அவர்களுக்கு ஒரு கூடுதல் பொறுப்பாக இணைக்கப்படும்.
ஊரகப்பகுதிகளில் பல இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் “நீர்நிலைகள் மீட்பு, மறுசீரமைப்பு திட்டம்” மற்றும் “தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்” ஆகியன செயல்படுத்தப்பட்டு,கிராம சபைகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 1 கோடி குறைந்த திறமையுள்ளோருக்கான (Low skilled jobs) வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளிக்கிறது.
அடுத்ததாக தொழிற்துறை,
16%மாக உள்ள தொழிற்துறையின் GDPபங்களிப்பு 25%மாக உயர்த்துவதற்கான திட்டங்கள், கொள்கைகள் வகுக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தித்துறையில் சிறந்தநாடாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கிறது தேர்தல் அறிக்கை.
புதிய தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்; ஏற்றுமதிக்கு மட்டுமேயான மண்டலங்களில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அழைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டதை மறைமுக வரிகள் எதுவும் இல்லாமல், குறைந்த நிறுவன வரிகளுடன் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவர்.
2004 முதல் 2014ல் செயல்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியால் முடக்கப்பட்ட தொழில்களுக்கு புத்துயிர் பாய்ச்சப்படும். பல இலட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பாரம்பரியமிக்க பொருட்களான கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மூன்றாவதாக உட்கட்டமைப்பு வசதிகள்,
நெடுஞ்சாலைப் பணிகள் முடுக்கிவிடப்படும்; பசுமை ஆற்றலை ஊக்குவித்து சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி பெருக்கப்படும்; மேலும் காலாவதியான ரயில்வே உட்கட்டுமானக்களை அவை உலகத்தரத்தில் அதிநவீனமாக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்குரிமையாகவும் அதற்கு வருமானம் ஈட்டுவதாகவும் வலைக்கு அப்பாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்படுவர். வீடுகளில் LPGக்கு பதிலாக மின் மற்றும் சூரியஒளி ஆற்றலாலான சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க வழிசெய்யப்படும்.
நான்காவதாக நகரமயமாதல் மற்றும் அதுசார் கொள்கைகள்,
நகர்ப்புற ஏழைகளுக்கு “நகர்ப்புற ஏழைகளுக்கான வீடமைப்புத் திட்டம்” கொண்டுவரப்பட்டு இரவுகளில் தெருக்களிலும் சாலைகளிலும் தூங்கும் ஏழைகளுக்காக இரவுநேர தங்கும் முகாம்கள் உருவாக்கப்படும்.
அரசியலமைப்பு 74வது சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தல்.
மேயர்கள் மக்களின்மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்; ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும் தனி நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்படும். பல்துறை வல்லுநர்களை தேர்வு செய்யவும் பல்துறைக் குழுக்கள் அமைக்கவும் அதிகாரம் வழங்கப்படும். நகர்புற போக்குவரத்துக் கொள்கைகள் புதிதாக உருவாக்கப்படும்.
சேரி மேம்படுத்தல் மற்றும் மாற்றுவதற்கான திட்ட்அம் செயல்படுத்தப்படும். முறையான வீடுகள், சாலைவசதி, மின் வசதி, சுகாதாரமான குடிநீர், நல்ல மருத்துவ வசதிகள் செய்துதரப்படும்.
ஐந்தாவதாக ஊரக வளர்ச்சி,
150 நாட்கள் வேலையளிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் – version3.0 செயல்படுத்தப்படும். Right to Homestead Act, வீட்டுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, வீடில்லாத ஏழைகளுக்கும் நிலமிருந்தும் வீடில்லாதோருக்கும் வீடுகள் உருவாக்கித்தரப்படும்.
பஞ்சாயத்துகளிலும் நகராட்சிகளிலும் உட்கட்டமைப்புகளைப் பெருக்கிட கடன்கள் வழங்கிடும் வகையில், கழிவற்ற நிதியாக ஊரக உட்கட்டமைப்பு நிதி நிச்சயம் உருவாக்கப்படும். மேலும் முடக்கப்பட்டிருந்த தேசிய குடிநீர் திட்டம் முடுக்கப்படும்.
ஆறாவதாக முறைசாரா அமைப்புசாரா துறைகள்,
தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்புமற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டம், 2014 செயல்படுத்தப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கபடுவதை உறுதிசெய்வதோடு ILO எனப்படும் உலக தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு தீர்மானங்கள் 87 (சங்கம் அமைக்கும் உரிமை) மற்றும் 98 (ஒருங்கிணைத்துக் கூட்டு பேர ஒப்பந்தம் செய்யும் உரிமை) ஆகியவற்றை அரசு கையொப்பமிட்டு அங்கீகரிக்கும்.
இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க எல்லா பெரு நகரங்களிலும் வாழ்வாதார மையங்கள் நிறுவப்படும். அவர்களுக்கான சட்ட ரீதியான தீர்வுகள், மருத்துவ உதவிகள், குழந்தைகள் கல்வி, திறன்மேம்பாடு மற்றும் பயிற்சி, அரசு சேவைகளைப் பெறுதல் முதலியவற்றை அங்கு பதிவு செய்வதன்மூலம் பெற்றுக்கொள்ள இயலும்.
வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களெனும் தலைப்பில் மட்டும் இவ்வளவு விவாதிக்கப்பட்டுள்ளன. மேலுமுள்ள 5 தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டுள்ளவற்ரை அடுத்தடுத்த கட்டுரைக்ளில் விரிவாகக் காண்போம்.