மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போல மருத்துவமனை மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
உடல்நலக் குறைவு காரணமாக சுமார் இரண்டுமாத காலத்திற்கு மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. ஆறுமுகசாமி ஆணையமும் இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்தது அப்போலோ நிர்வாகம்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அப்பலோ மருத்துவர்களை விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க உத்தரவிடவும் வேண்டும் என்றும் அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ண ராமசாமி அமர்வு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 4) இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
90 சதவீத விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் முடித்துவிட்ட நிலையில், தற்போது மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும், அப்பலோ நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.