கருத்துகளை உருவாக்குபவர்களுக்கு அதை அடுத்த தலைமுறைக்கு எளிமையாக பதிய வைப்பதற்குப் பள்ளிக் கல்வியை விடப் பொருத்தமான களம் கிடைக்குமா?. கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளி பாடநூல்கள் தீவிரமான பொது விவாதங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வரலாறு பாட நூல். இது அரசியல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை எழுப்பின. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருக்கும்போது வரலாறு பாடநூல்களில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் அவர்களின் கருத்தியல் சதியா? என்று ஆராயவேண்டியிருக்கிறது.
மக்கள் பதட்டப்படும் வகையில் தனது அமைச்சர்கள் மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங்கம் ஒப்புதல் அளித்த கல்வியாளர்களைக் கொண்டு புராணங்கள், கற்பனைகள், பாஜக அரசின் பிரசாரங்கள், மற்றும் மாற்றுத் தேசியவாதம் ஆகியவற்றை வரலாறு எனும் போர்வையில் பாஜக அரசு பாட நூல்களில் புகுத்தின.
தாங்கள் நினைத்த பாடங்களைப் புகுத்துவது மட்டுமல்லாமல் அதை விட ஆபத்தான செயலான வரலாற்றில் உண்மையாக நடந்த நிகழ்வுகளைப் பாடநூல்களிலிருந்து நீக்குவது போன்றவற்றிலும் பாஜகவினர் ஈடுபட்டார்கள். உதாரணமாகத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் NCERT, CBSE யுடன் இணைந்து தயாரித்த 9 ஆம் வகுப்பு வரலாறு பாடநூலிலிருந்து மூன்று அத்தியாயங்களை நீக்கினார்கள். இந்த புதிய பாடத்திட்டம் வருகிற மே மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
நம் குழந்தைகளுக்கு இனம், வர்க்கம், சாதி மற்றும் பாகுபாடு போன்றவற்றைப்பற்றிய அறிவை மறுப்பது அவர்களுக்குச் செய்யும் கடும் துரோகமாகும்.
அளவுக்கு அதிகமான பாடத்திட்டங்கள்
“அளவுக்கு அதிகமான பாடத்திட்டங்கள்.” எனும் இந்த சங்கதி கல்வியாளர்கள், பாடநூல் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கல்வி கொள்கை தயாரிப்பாளர்கள் ஆகியோரிடையே பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்னர் அமர்த்தியா சென், ஆரம்ப பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாடச்சுமை, வீட்டுப்பாடம், மற்றும் தனியார் டியூஷன் ஆகியவற்றின் தொடர்புகளைக் குறிப்பிட்டார். இந்தியாவின் முக்கிய கல்வியாளர் கண்டி பாஜ்பாய் 2006 இல் டூன் பள்ளி முதல்வராக இருக்கும்போது அதிகாரிக்கும் பாடத்திட்டங்கள் மாணவர்கள் மீது சுமத்தப்படும் மனிதத் தன்மையற்ற சுமை என்றார்.
பாடச் சுமைகளைக் குறைப்போம் என்பது பாஜகவின் 2015 தேர்தல் அறிக்கைகளில் முக்கியமானது. “நாங்கள் கல்வியின் தரத்தில் சமரசம் செய்யாமல் பிள்ளைகளின் புத்தக சுமையைக் குறைப்போம்” என்ற கொள்கையில் உறுதியாக இருப்போம் என்றார்கள்.
கடந்த வருடம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “நிறையத் தகவல்கள் அடங்கிய பெரும் சுமையுள்ள புத்தகங்கள் இன்றுள்ளன. அதனால் நாங்கள் அதைப் பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் முதலில் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளட்டும் அறிவை அவர்கள் பிறகு கற்றுக்கொள்ளலாம்.” என்றார்.
கடந்த ஜனவரியில் ஜவடேகர் இதை மறுபடியும் குறிப்பிட்டார். மேலும் இதை அவர்கள் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்றும் சொன்னார். “நாங்கள் NCERT பாடத்திட்டத்தை 50% குறைக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு, 10-15% குறைப்பு இருக்கும். அடுத்த ஆண்டு அது இன்னும் அதிகமாக இருக்கும். இறுதியாக, 2021 இல் எங்கள் இலக்கை அடைவோம்.” என்றார்.
ஊடகங்களில் மிகுந்த கவனத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் நீக்கிய பகுதிகள் அவர்களின் பாடக்குறைப்புக்கு ஒரு சான்று.
நீக்கப்பட்ட பாடங்கள்
மாணவர்களின் பல்வேறு நலன்களைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அவர்களுக்குத் தேவையான அளவு பாடங்கள் மட்டும் இருக்குமாறு பாடநூல்கள் சுருக்கப்பட்டன. இவை 2004 மற்றும் 2006 இல் எழுதப்பட்டது.
சுருக்கம் என்ற பெயரில் நீக்கப்பட்ட இரண்டு பாடங்கள் 1) “விளையாட்டு வரலாறு: கிரிக்கெட்டின் கதை” மற்றும் 2) “ஆடை: ஒரு சமூக வரலாறு”. இதன் மூலம் அவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள் என நமக்குத் தெரிகிறது. ஒரு சராசரி மாணவர் விளையாட்டிலும் ஆடையிலும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். அவருக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதன் வழியே ஒரு பாடத்தைச் சொல்லித்தருவதே சிறந்த முறை. மேலும் அவர்களுக்கு தாங்கள் வரலாற்றில் எப்படிப்பட்ட சட்டங்கள் சமூக விதிகள் மூலம் நடத்தப்பட்டோம் எனவும் தெரிய வேண்டும். இன்று அவர்கள் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிவதற்கும் விரும்பிய விளையாட்டை விளையாடுவதற்கும் பல ஆண்டுக்கால சமூக மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அந்த மாற்றங்கள் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை அரசு அதிகாரத்தையும், பாரபட்சமான சமூக நடைமுறைகளையும் எதிர்த்தே கிடைத்தன.
NCERT இன் 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாட நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு பாட நூல்களில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன. அவை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் அனைத்தையும் மகிழ்வோடு படிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் நீங்கள் இதில் ஐந்து அத்தியாயங்களைப் படித்தால் மட்டும் போதுமானது.”
பரீட்சைக்கு இந்த குறிப்பிட்ட ஐந்து அத்தியாயங்களிலிருந்து மட்டுமே கேள்வி கேட்குமாறு CBSE க்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படி ஒரு விதி அமைத்தால் தானாகவே ஆசிரியர்களும் மாணவர்களும் அந்த பாடங்களைப் படிக்க மாட்டார்கள் எனும் சதி புரிகிறதா?
கடந்த வருடம் NCERT புத்தகங்களில் இந்த மாற்றம் வரும் என்று முன்பே உணர்ந்து, கிரிக்கெட் மற்றும் ஆடை சம்பந்தமான பாடங்களை CBSE நீக்கியது.
அதிகாரத்திலிருப்பவரும் பாடநூல் எழுத்தாளரும்
அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல், சமூகம் என வரலாற்றின் பல்வேறு பிரிவுகளைப் பற்றி மானவர்களுக்கு அறிமுகப்படுத்துவதின் நோக்கம், இதன் மூலம் அவர்கள் வரலாற்றின் பல்வேறு பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இது அவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிறந்த ஆளுமைகளைப் பற்றி மட்டும் அல்லாமல் சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும் எனப் பாடநூல் எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் நல்ல பாடநூல் எழுத்தாளர்களும் அரசுக் கல்வி நிறுவனங்களும் வெவ்வேறு உலகங்களில் வசிப்பவர்கள். பாஜக அரசு அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமாக உள்ளது. அதனால் நாங்கள் அதைக் குறைக்கிறோம் பாருங்கள் என்று 180 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் சில பல அத்தியாயங்களை நீக்கிவிட்டு “பாருங்கள் இப்போது புத்தகம் வெறும் 40 பக்கம் தான்” என்கிறார்கள். நீக்கிய பாடங்கள் எந்த விதமான சமூக மாற்றங்களை உண்டாக்கும் என்ற அக்கறை துளியும் இவர்களது நடவடிக்கையில் இல்லை.
ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த மாற்றங்களைப் பற்றி கவலைப்படவில்லை. மாணவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றியும் ஆடைகளைப் பற்றியும் கற்பிப்பதற்கான நோக்கங்கள் எதுவும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.
“ஆசிரியர்களுக்கே சமூக வரலாறு பற்றியும் அதை ஏன் கற்றுத்தர வேண்டும் என்கின்ற புரிதலும் இல்லை. அவர்கள் உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பெரும் தலைவர்கள் பற்றியும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதும் என்றிருக்கிறார்கள்” எனத் தில்லி அரசுப் பள்ளியின் ஆசிரியர் குழு தலைவர் கூறுகிறார்.
ஆனால் NCERT இன் இந்த முடிவுகளை எதிர்க்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். மாணவர்களின் அறிவைக் குறைத்துத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற இந்த கல்வி அமைப்பின் விதிகளால் மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சராசரி ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், தான் ஒரு வெற்றிகரமான ஆசிரியர் என்று தான் நினைக்கிறார்.
இன்று பள்ளிகளின் மிகப்பெரிய சிக்கலே “அதிக மதிப்பெண் பெற வேண்டும்” என்பது தான். அவர்களுக்கு தங்கள் பாடத்தில் மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டது பற்றி அக்கறையே இல்லை. ஏனெனில் தேர்வு வைக்கும் முறை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. மாணவர்களுக்கும் முன்பிருந்த அதே பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அப்படிப்பார்க்கும்போது புத்தக சுமை என்பது இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
NCERT-க்குதான் பள்ளிகளில் என்ன கற்பிக்க வேண்டும் என்றும் தேர்வுகள் எப்படி நடத்தப்படவேண்டும் என்றும் அதிகாரமிருக்கிறது. அந்த அமைப்பின் நோக்கமே அதுதான். நாம் இதில் கவலைப்படவேண்டியது என்னவென்றால் NCERT மாணவர்களின் நலனை மட்டும் நோக்கமாக வைத்து அவர்கள் உருவாக்கிய பாடத்திட்டத்தை அவர்களாகவே இன்று அழிக்கிறார்கள் என்பதுதான். எந்த பாடப் புத்தகங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து அறிவை வளர்த்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்தனரோ அதுவே இன்று வெறும் மதிப்பெண் வாங்குவதற்கென்று சுருக்கப்பட்டிருக்கிறது.
பாடங்களைப் புத்தகங்களிலிருந்து நீக்குவது என்பது அறிவை அழிப்பதற்குச் சமம். தேர்வுக்காக என்றில்லாமல் ஆர்வத்தின் காரணமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் நினைக்கும் மாணவர்களுக்குச் செய்யப்படும் அநீதி இது.
ஒரு கட்சியின் விருப்பம் அல்ல இந்த தேசம். நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு வரலாற்றில் நமது முன்னோடிகள் சிந்திய ரத்தம் ஏராளம். அவற்றை நம்மிடமிருந்து மறைப்பதின் மூலம் அவர்களின் தியாகங்களை பாஜக கடுமையாக அவமதிக்கிறது. பாஜக அரசுக் கல்வி அமைப்பை மாணவர்களுக்குச் சாதகமாக மாற்றுகிறேன் என்று நம் வரலாற்றையும் அடையாளத்தையும் மறைக்கிறது. அதற்காகப் பள்ளிகளிலிருந்தே அது தன் சதியை ஆரம்பிக்கிறது. நமது வேர்களை அழிப்பதின் மூலம் அது நமக்கு மன்னிக்க முடியாத கடும் துரோகத்தைச் செய்கிறது.