(நரோதாபாட்டியாவை மறந்துபோனவர்கள் இந்தக் கதையைப் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை)

திருவனந்தபுரம் செல்வதற்காக நரோதாபாட்டியா பேருந்துநிறுத்தத்தில் நிற்கிறேன். விரைவுப்பேருந்து கிடைக்குமேயானால் நான்கைந்து மணிநேரத்தில் சென்றுவிடலாம்.

மனிதர்களுக்குப் பதிலாக இடங்கள் பயணித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்றொரு சிந்தனை அந்நேரம் முகிழ்த்தது. வீட்டுமுற்றத்தில் நிற்கும்போது, அதோ கோழிக்கோடு நகரமே நம்மை நோக்கிவருகிறது. நாம் மிட்டாயித் தெருவிலிருந்து கோழிக்கோடன் அல்வா வாங்குகிறோம். ‘உட்டோப்பியன்’ என்ற முகநூல் நண்பர் ‘ஹாய்ப்ரோ’ என்று கூப்பிட்டு கை அசைத்தவாறு கடந்து செல்கிறார். பூமியின் மேற்பரப்பில் இடங்கள் பலவண்ணங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன.

அதோ ‘அலாஸ்கா’ அதன் சில்லிடும் குளிருடன் கோடைவெயில் அனல் கக்கும் பாலக்காட்டிற்கு வருகிறது. நாம் ‘மஸாய்மாரா’வுக்கு செல்கிறோம். ‘பொன்முடி’யின் மான் கூட்டத்தைப் பார்த்த ‘மஸாய்மாரா’வின் சிங்கங்களின் வாயில் எச்சில் உமிழ்கிறது. ஒருநாள் காலையில் பார்த்தால் ‘சிரியா’ திருவனந்தபுரத்திற்கு வருகிறது. திருவனந்தபுரத்துக்காரர்கள் போர் ஒன்றை நேரடியாகப் பார்ப்பது இதுவே முதல்தடவை. அய்யோ என்று திகைத்துப்போகிறார்கள்.

இந்தமாதிரி எண்ணங்கள் மனதிற்குள் தோன்றி மனதிற்குள்ளேயே மறைந்தும்போவதால் ‘கிறுக்கன்’ என்ற அவப்பெயருக்கு இதுவரைஆளாகவில்லை.
இப்படி எண்ணங்கள் ஏற்றம் பெறும் வேளையில் திருவனந்தபுரம் விரைவு பேருந்து ஓன்று நிற்காமல் கடந்துசென்றது.
நரோதாபாட்டியா பேருந்துநிறுத்தம் தேசியநெடுஞ்சாலையின் ஒருவளைவில் அமைந்திருந்த காரணத்தால் பேருந்துக்காக காத்து நிற்பவர்கள் இடையிடையே தலையை வடக்குப்பக்கம் திருப்பிப் பார்க்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலைக்கு இணையாக ஓடுகிற ஆற்றின் குறுக்கே பாலம் ஓன்று கட்டப்பட்டிருந்தது. வடக்குப் பக்கம் கொஞ்சம் தள்ளிப்போனால் இந்திர பிரஸ்தாபார். 555 பேர் ஒருசேர உட்க்கார்ந்து மது அருந்தவும் ‘பெரிய பெரிய விஷயங்கள்’ குறித்து விவாதம் செய்வதற்கும் தோதாக அமைக்கப்பட்ட பார்.

நின்று நின்று இரவானது தெரியவில்லை. வடக்குப் பக்கமிருந்து இரைச்சல் ஒன்று கேட்டது. பேருந்தாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரோட்டுக்கு அருகில் சென்றேன். விரைவாகக் கடந்து சென்றது ஒரு நேஷனல் பெர்மிட் லாரி.
காத்து நின்று காலில் வேரிறங்கியது.

அசைவின்மையின் சுவையறிய ஒருமுறையாவது மரமாக வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கியதும் மின்னும் ஒளியும் அலறல் சத்தமுமாக ஒருசேர வேகமாக வந்து என் முன்னால் சடன் பிரேக்போட்டு நின்றது ஒரு ஆம்புலன்ஸ். அதனுள் இருந்து ஒருவன் தலையை வெளியே நீட்டிக்கேட்டான்,

“திருவனந்தபுரத்திற்கு எப்படிப் போகணும்?”

“நேரா போங்க” என்றேன். அடுத்த கணமே சட்டென சுதாரித்துக்கொண்டவனாய்,

“நானும் வரவா? ரூட் தெரிய உங்களுக்கு உதவியா இருக்கும்” என்றேன். சற்று சந்தேகத்துடன் என்னை உற்றுப் பார்த்தவனின் முன்னால் எனது சல்லியான தேகம் தெளிவாக அவனுக்குத் தெரிகிறமாதிரி அப்பாவியாக நின்றேன். தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு இவனுக்குத் திராணி இல்லை என்று உணர்ந்து கதவை திறந்தான் அந்த தடித்த உடம்புக்காரன். நான் உள்ளே ஏறியதும் வண்டி கிளம்பியது. அந்த தடியனுக்கும் ஓட்டுநருக்கும் இடையே உட்கார்ந்து கொண்டேன்.

“திருவனந்தபுரம் செல்ல எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.

“இங்கிருந்து ஒரு மூன்று நான்கு மணிநேரம் ஆகும்” என்றேன்.
கனத்த குரல் அந்த தடியனுக்கு. ஏழு அடி உயரமும் நூற்றைம்பது கிலோ எடையும் இருக்கும் அவனுக்கு. அந்த ஓட்டுநருக்கும் அதே அளவு உயரமும் எடையும் இருக்கும். சற்று சந்தேகத்துடன் அவர்கள் முகங்களைப் பார்த்தேன். அச்சில் வார்த்து எடுத்தது போன்ற ஒற்றுமைகள் உள்ள இரண்டுபேர்!

“நீங்க இரட்டைகளா?” ஆம்புலன்சுக்குள் இதெல்லாம் அசட்டுத்தனமான கேள்விகளென்று உணராத என்னை இருவரும் முறைத்தனர்.
தடியன்கள் சீராக அவர்கள் மவுனத்தை தொடர்ந்தனர்.

ஆம்புலன்சுக்குள்ளால் ஏறிய ஒருவனுக்கு இயல்பாகவே எழும் சந்தேகம் எனக்கும் வந்தது. மெதுவாக பின்னாடி நோட்டம்விட்டேன். கறுப்புநிறத் திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டிருந்தது. படுத்தநிலையில் மனிதநிழலொன்று அசைவது தெரிந்தது. கூடவே சிறிய முனகலும்.

ஆம்புலன்சிற்கு அப்போது ஐநூறு அல்லது அறுநூறு கிலோமீட்டர் வேகம் இருந்திருக்கும். தடியனின் அக்குளுக்கிடையின் முக்கோணம் வழியாக வெளியே பார்க்க முயன்றேன். இடங்கள் வெகுவிரைவாக பின்னோக்கிப் பாய்கின்றன. பரிச்சயமானதும் அல்லாததுமான இடங்கள். விரைவுப்பயணம் செய்கிற வேளையில் அத்துமீறி நுழைந்த விருந்தாளியைப்போல பயம் எனது மடியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டது.

ஒரு வளைவில் வண்டி திரும்பியதும் வெள்ளைநிற ஆடை உடுத்திய ஒரு பெண் நிற்பதைப் பார்த்தேன். அவள் கைகாட்டியதும் ஆம்புலன்ஸ் சடன் பிரேக்போட்டு நின்றது. தடியன் டோரைத் திறந்துகொடுக்க அவள் ஆம்புலன்சில் ஏறினாள். கண்ணாடி அணிந்த நடுத்தரவயதுப் பெண்மணி. தலையை ஒரு பக்கமாக சாய்த்து மற்றவர்களை இகழ்ச்சியுடன் பார்க்கும் கண்கள். கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப். எங்கேயெல்லாமோ பார்த்துப் பரிச்சயமான முகம்.
ஆம்புலன்ஸ் மீண்டும் வேகமெடுத்தது. டாக்டர் பின்பக்கம் சென்றார். எனது கண்களும் அவரைப் பின் தொடர்ந்தன. அங்கே கட்டிலில் கர்ப்பிணி பெண் ஒருத்தி வலியால் அவதிப்பட்டுத் துடிப்பது தெரிந்தது.

டாக்டர் பையைத் திறந்து ஒரு கத்தியை வெளியே எடுத்தாள். விசித்திரமாகத் தெரிந்த அந்தக் கத்திக்கு திரிசூலம் போன்று மூன்று முனைகள் இருந்தன. அதைப் பார்த்துப் பதறிப்போன அந்த கர்ப்பிணி அலறினாள். ஆம்புலன்ஸின் சைரன் முழக்கத்தால் அது வெளியே கேட்க வாய்ப்பில்லை. தடியன்கள் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். என்னைப் பார்த்து முறைத்துவிட்டு அந்த திரைச்சீலையை சரிசெய்தனர்.

ஆபரேசன் டேபிளில் நடப்பதை ஒலிகளின் வழியே தற்போது உணர்கிறேன். சகிக்கமுடியாத அலறல்கள் மெல்ல மெல்ல முனகல்களாக நீர்த்துப்போகின்றன. பெண்ணாகப் பிறக்காததை நினைத்து மகிழ்ந்த நொடி அது.

சட்டென ‘ஐயோ என் வயிறு, என் வயிறு’ என்ற கத்தல் ஆம்புலன்ஸின் ஒலியையும் மீறி கேட்டது. கூடவே டாக்டரின் சிரிப்பு சத்தமும். உன்மத்தம் சிரிப்பின் வடிவமெடுத்து என் செவிகளை அதிரச் செய்தது. இரண்டு தடியன்களுக்குமிடையில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்த எனது மூக்கை சுடு ரத்தத்தின் வாசனை துளைத்தெடுத்தது.

‘ஐயோ என் பிள்ளை.’

கர்ப்பிணியிடமிருந்து கடைசியாக கேட்ட அலறல் அது. மனிதர்களின் கதறல்கள் பலநேரங்களில் பலபாவங்களில் வெளிப்படுகிறது. உற்றவர்களின் மரணத்தை நேரில் பார்க்கும்போது தீனக்குரலில் எழும் கதறலின் தீவிரம் வேறு எதற்கும் கிடையாது.

தடியன்கள் ஒருவருக்கொருவர் பார்த்தனர். சற்றுநேரத்தில் வண்டி ஒரு வளைவில் நின்றது. டாக்டர் கர்ட்டனை விலக்கி வெளியே வந்தாள்.
சாலையில் எதிரில் வந்து கொண்டிருந்த வண்டியின் வெளிச்சத்தில் டாக்டரின் முகம் மிகத் தெளிவாக தெரிந்தது.

முகம் முழுவதும் தெறித்து விழுந்த ரத்தத் துளிகள். வெள்ளை அங்கியில் திட்டுதிட்டாகப் படிந்திருந்தன ரத்தக் கறைகள். வாயின் ஓரங்களிலிருந்து வழியும் ரத்தத்துடன் தடியன்களைப் பார்த்து சிரித்தாள்.

ரத்தம் உறிஞ்சிக் குடித்துவிட்டு உடல்முழுவதும் குலுங்க சிரிக்கும் ஒரு ராட்சசியின் முகபாவத்துடன் நின்றாள் அந்த டாக்டர். வாய்விட்டுக் கதறணும்போல் தோன்றியது எனக்கு. பயத்தால் உறைந்து போனவனுக்கு முதலில் கைவிட்டுப்போவது தனது குரல்தான் என்பதை அந்தக் கணத்தில் புரிந்துகொண்டேன்.

“கருவைத் துணியில் பொதிந்து வைத்துள்ளேன். இரண்டையும் முதலைப் பொழியில் தூக்கிப் போடு. பீமாப்பள்ளி சந்திப்பிலிருந்து வள்ளக்கடவு பாதைக்குத் திரும்பி ஒரு நிமிடதூரத்தில் வலியத்துறை பாலம் வந்துவிடும்”.

அடுத்த வளைவில் ஆம்புலன்ஸ் நிற்க டாக்டர் இறங்கினார். டாக்டரின் வெள்ளை அங்கி புகைபோல மாறி இருளில் கரைந்தது.

“யாருங்க அவங்க?” என்று கேட்டேன்.

“மாயா… எல்லாமே மாயா…. தெரியலையா? ஹா… ஹா… ஹா… எங்க வேணாலும் எப்ப வேணாலும் மாயா தோன்றலாம்” சொல்லிக்கொண்டே தடியன்கள் சிரித்தனர்.
அடுத்து ஒரு பாய்ச்சல். அந்த மரணவாகனத்திற்கு இப்போ ஒளிவேகம். சுற்றிலும் இடங்கள் பயணிக்கின்றன. சானா, டெல்லி, நரோதாபாட்டியா, டாக்கா, காஸா. இடங்களும் நேரமும் கூடிக்கலந்த குழப்பத்தில் எனது மூளையும் சுழன்றது. ஒளிவேகத்தில் பயணிக்கும்போது நேரம் இல்லாமலாகிவிடுமென்று எங்கோ

படித்திருக்கிறேன்.

வண்டி வள்ளக்கடவு தாண்டி கடலுக்குப் பாதை திறக்கிற வலியதுறைபாலத்தில் நின்றது.

 

“ஏண்டா, நீதானே சொன்னே நரோதாபாட்டியாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு மணிநேரம் ஆகும்ணு” சொல்லிக்கொண்டே என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். முட்டங்காலில் மண்டியிட்டிருந்து பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே,

“இடங்களால் இத்தனை வேகமாகப் பயணிக்க முடியுமென்பது எனக்குத் தெரியாது சார்” என்றேன்.

தமிழில்: சுஜித்அருமனை
ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்