இன்று சமூக வலைத்தளங்களின் ட்ரெண்ட் பாஜகவின் தேர்தல் அறிக்கை தான். நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்கள் அனைத்தையும் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவரும் கேலி செய்துகொண்டிருக்கும் வேளையில் உண்மையாகவே அனைவரையும் அதிர வைக்கும் வகையில் அவர்கள் தேர்தல் அறிக்கையில் “பெண்களுக்கெதிரான குற்றங்களை ஆதரிப்போம்” என்றிருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், கடந்த திங்களன்று வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு இருப்பதைக் கண்டு விமர்சித்தன.
“பெண்கள் அதிகாரம்” என்ற பிரிவின் கீழ், பா.ஜ.க அறிக்கை இவ்வாறு உள்ளது. நாங்கள் உள்துறை அமைச்சகத்தில் மகளிர் பாதுகாப்புப் பிரிவை அமைத்துள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வதற்காக சட்டங்களை மாற்றுவதற்குக் கடுமையான விதிகளை வகுத்துள்ளோம், குறிப்பாக பாலியல் குற்றங்களை விரைவாக விசாரித்து நீதி வழங்குவோம்.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி, அதிலுள்ள தவற்றை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்கள். “பாஜகவின் அறிக்கையில் குறைந்தபட்சம் ஒரு விஷயமாவது அவர்களின் உண்மையான நோக்கத்தைச் சொல்வதாக இருக்கிறது” இத்தோடு அவர்கள் பாஜகவின் அறிக்கையிலிருந்த “பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வதற்காக” வாக்கியத்தை அடிக்கோடிட்டு இது ஒரு ஜூம்லா தேர்தல் அறிக்கை என்றார்கள்.
ஆளும் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 75 இலக்குகளை அடைய விரும்புகிறது அது இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிடும் வகையில் உள்ளது. மேலும் அதில் ஜம்மு காஷ்மீர், பயங்கரவாதம், பாதுகாப்பு, விவசாயிகளின் வருமானம் மற்றும் குடிமக்களின் தேசியப் பதிவு ஆகியவற்றின் மீது இது கவனம் செலுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸின் சமூக ஊடக தேசிய அமைப்பாளர் ஹசிபா அமினும் இதைக் கேலி செய்து “அன்பே பாஜக, தவறுதலாக உண்மையைச் சொல்லிவிட்டாயா” என்று ட்வீட் செய்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி, பாஜகவின் இந்த தவற்றை “அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிப்பதைச் சபதமாக மேற்கொள்கிறார்கள். “நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் உங்களின் வேஷம் வெளித்ததிற்கு வந்தே தீரும்” என்று அந்த கட்சி ட்வீட் செய்துள்ளது.
ஒரு தேர்தல் அறிக்கை என்பது அந்த கட்சியின் சத்தியங்களை உள்ளடக்கியது. பல நிபுணர்கள் கொண்டு பல காலம் ஆராய்ந்துதான் அதை உருவாக்குவார்கள். அதுவே அவர்களின் ஆட்சிக்கு வழிகாட்டும் வெளிச்சம். மக்கள் மனதில் அவர்கள் மீது நம்பிக்கை வரவைக்கும் சாதனம். அப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் இது போன்ற மிகப் பெரிய தவறுகள் என்பது அவர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது. அல்லது மற்ற கட்சிகள் சொல்வதைப்போல இது தான் அவர்களின் உண்மையான நோக்கமா?