நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக 17ஆவது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 11) காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு நிறைவடைந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக இருப்பதாக வாக்காளர்களும், அரசியல் கட்சிகளும் தெரிவிப்பதாக நாடு முழுவதும் தகவல் பரவிவருகிறது.
முதற்கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், ஜம்மு காஷ்மீர், பீகார், அசாம், மணிப்பூர், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சில குறிப்பிட்ட கட்சிகளின் பொத்தான்கள் காணாமலோ அல்லது வேலை செய்யமாலோ இருந்துள்ளதாக ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இயந்திரத்தின் எந்தப் பொத்தானை அழுத்தினாலும், அது பிஜேபியின் தேர்தல் சின்னத்தின் கீழ் வாக்குப்பதிவாவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அசாம் மாநிலம், தேஜ்பூர் பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கிய வேட்பாளர்களும், மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களும் புகார் கூறியுள்ளனர். அவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் தலைமை தேர்தல் அதிகாரி, இது போலியான செய்தி என்று கூறியுள்ளார்.
அசாமில் உள்ள முக்கிய தொகுதிகளில் தேஜ்பூரும் ஒன்றாகும். இங்கு 76.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 9,574 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அண்மையில் முஸ்லீம் ஒருவர் மீது இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்தியது இந்த மக்களவை தொகுதியில்தான்.
இந்தச் சர்ச்சைக்குரிய விவரம்பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர். இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசினார் அக்கட்சியின் தலைவர் சதீஷ் மிஸ்ரா. “நாங்கள் இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், யானை சின்னத்திற்கு வாக்களித்தால், அது பிஜேபியின் தாமரை சின்னத்தில் வாக்குப்பதிவு ஆகிறது. இதுகுறித்த ஆதாரமும் என்னிடம் உள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுடன், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால், வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாலும் வாக்களிக்கத் தாமதமானது. இதனால் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்து சுமார் 400 வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திராவில் கிட்டத்தட்ட 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாகக் கூறப்படும் நிலையில் வெறும் 43 இயந்திரங்களுக்கே மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
“ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும்.” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையமும் தேர்தல் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் பொதுமக்களும், மற்ற அரசியல் கட்சிகளும் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவு அசாம், ஆந்திரா உள்ளிட்ட சில இடங்களில் சரியாக நடைபெறவில்லையெனக் குற்றம்சாட்டப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், கவுதம் புத்தர் நகரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு நாமோ உணவு என்று எழுதப்பட்டிருந்த பாக்கெட்டுகளிலிருந்து உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவறான தகவல் என்று கவுதம் புத்தர் நகர் காவல் அதிகாரி தெரிவித்தார். மேலும், உணவு பாக்கெட்டுகள் உள்ளூரில் உள்ள நாமோ உணவு கடைகளிலிருந்து வாங்கப்பட்டதாகவும், இதில் அரசியல் கட்சிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.