ரஃபேல் விவகாரத்தில் புதிய திருப்பமாகப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ல மோண்ட்’ இன்று ஒரு புதிய ஊழலை வெளிப்படுத்தியுள்ளது. அது அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு ரூ.1,124 கோடி(14.37 கோடி யூரோ) வரித்தள்ளுபடி செய்துள்ளதுதான். ஏற்கனவே போர் விமானம் கட்டுவதில் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு 38,000 கோடி காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது அறிந்த செய்திதான். இந்நிலையில் ‘லே மோண்ட்’ இன்று இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.

இதுகுறித்து ல மோன்டே’ நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


அனில் அம்பானி பிரான்சு நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் ஃப்ளாக் பிரான்ஸ்’ என்று ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நாட்டின் வருமான வரி அதிகாரிகளின் சோதனையின்போது அம்பானியின் கம்பெனி 2007-10 காலகட்டத்தில் 60 மில்லியன் யூரோக்கள் (ரூ.469 கோடி ) வரியாகக் கட்டவில்லை என்று கண்டுபிடித்தனர். அம்பானி இதில் 7.6 மில்லியன் யூரோக்களைக் (ரூ.60 கோடி) கட்ட முன்வந்தார். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அவர்கள் மீண்டும் ஆய்வு செய்தபிறகு இன்னும் ஒரு 91 மில்லியன் யூரோ (ரூ.712 கோடி ) கட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அதாவது மொத்தம் 151 மில்லியன் யூரோக்கள்(ரூ.1182 கோடி) கட்ட வேண்டும்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரீஸுக்கு விஜயம் செய்யும் ​​பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2015 இல் இந்திய விமானப் படையின் முக்கிய செயல்பாடுகளுக்காக ரஃபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான பேரம் தொடங்கி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பிரான்சு நாட்டு அதிகாரிகள் 151 மில்லியன் யூரோக்களை (ரூ.1182 கோடி) வரியாகக் கட்ட வேண்டிய அம்பானி 7.3 மில்லியன் யூரோக்கள் ( ரூ.57 கோடி) கட்டினால் போதும் என்று கூறிவிட்டனர். அதாவது, 143.7 மில்லியன் யூரோக்கள் (ரூ.1,124 கோடியை) வரி விலக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கிய ஆறு மாதங்களில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 2016 இல் 7.87 பில்லியன் யூரோவுக்கு (ரூ.61,612 கோடி) மதிப்பிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே கையொப்பமானது. இதன் மூலம் பிரான்ஸ் நிறுவனம் 50 சதவீத செயல்பாட்டை இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரஃபேல் போர் விமானங்களை உற்பத்தி செய்யும் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்க இந்தியாவில் உள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது. ஆனால், பாதுகாப்புத் துறையின் விமானத் தயாரிப்பு, பராமரிப்பு துறையில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் கூட்டு வைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸ்வா கடந்த ஆண்டு ‘ஹோலாந்தே பிரான்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், ” இந்திய அரசு எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு எந்தநிறுவனத்தையும் தேர்வு செய்யக்கோரி வாய்ப்பு தரவில்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘ ல மோண்ட்’ பத்திரிக்கையின் இந்த செய்திகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்களுக்கு எந்த வித வரிச்சலுகைகளும் தரப்படவில்லை. எல்லா வரி பாக்கிகளும் பிரான்ஸ் நாட்டுச் சட்ட விதிகளுக்கு உட்பட்டே முறையாகக் கணக்கு தீர்க்கப்பட்டன. இந்தச் செய்தி முற்றிலும் போலியானது சட்ட விரோதமானது” என்று தெரிவிக்கிறது.

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என யார் மறுத்தாலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆதாரங்கள் யார் இதில் குற்றவாளி என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்கின்றன.