பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குதல் என்பது சாதி, மத, இன பாகுபாட்டை அறியாமல் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒருமுறை ஆகும்.
ஆனால், அகமதாபாத்தைச் சேர்ந்த இருபள்ளிகளில் பள்ளி சீருடையில் மத பிரிவினை ஏற்படுத்தும் வகையில் இந்துக் குழந்தைகளுக்கு காவி நிறமும் முஸ்லிம் குழந்தைகளுக்குப் பச்சை நிறமும் அளிக்கப்படுகிறது.
அகமதாபாத் நகராட்சி கழகத்தின் ஷாபுர் பப்ளிக் பள்ளியும் டேனி லிம்டா பப்ளிக் பள்ளியும் ஆங்கிலவழி கல்விமுறையை கொண்டிருக்கின்றன. இப்பள்ளிகளின் வேறுபாடு என்ன வென்றால் ஷாபுர் பள்ளியில் அதிகளவில் இந்து மதத்தைச் சார்ந்த பள்ளிகுழந்தைகள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்குக் காவி நிறச் சீருடையும், டேனி லிம்டா பள்ளியில் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த பள்ளிக்குழந்தைகள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்குப் பச்சை நிறச் சீருடையும் அளிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மற்ற 454 பள்ளிகளில் வெள்ளை மற்றும் நீல நிற சீருடையே பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இதைப் பற்றி அகமதாபாத் பள்ளிவாரிய தலைவர் பவ்சரிடம் கேட்டபோது, “பச்சை நிறம்தான் பள்ளி மாணவர்களுக்கு ஏற்றதாக உள்ளது, மேலும் எங்களிடம் பிங்க் மற்றும் நீல நிற வண்ணங்கள் இருந்தாலும் குழந்தைகளின் மனதை பொருத்து இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோலதான் காவி நிறமும் எந்தப் பாரபட்சமின்றி எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு எந்த அமைப்பு பொறுப்பாகாது. மேலும் வண்ணங்கள் குழந்தைகளின் மனதில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
ஷாபுர் பள்ளியின் சீருடையானது ஷாபுர் சேவா சங்கம் என்ற சமூக அமைப்பின்மூலம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பில் பள்ளி வாரிய தலைவர் பவ்சரும் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பின் தலைவர் பாஜகவை சேர்ந்த ஷாபுர் வார்டு நிறுவனரான அத்துல் பாஸ்ஸர். இந்த அமைப்பானது கல்வி மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருவதாகவும் பல வருடங்களாகப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை அளித்து வருவதாகவும் பவ்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் டேனி லிம்டா பள்ளியானது உள்ளூர் தலைவர்களின் நன்கொடையாலும் தன்னார்வளர்கள் மூலமாகவும் இயங்கிவருகிறது. பள்ளி தொடங்கியபோது எந்த நிற சீருடையுமின்றி இயங்கிவந்தது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டுதான் பச்சை நிறத்தைத் தேர்வு செய்ததாகக் கூறுகிறது.
மேலும் பள்ளி சீருடையானது விருப்பப்பட்டவர்களின் நன்கொடையால் மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுப்போம். சில ஆசிரியர்களே இப்பள்ளிக்குச் சீருடைகளும் வழங்கியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மேலும் அரசாங்கத்தின் முழு நன்கொடையையும் மானியங்களையும் பெற நாங்கள் கல்வி மாவட்ட தகவல் அமைப்பின் குறியீட்டு எண்ணை கண்டிப்பாகப் பெற்றிருக்கவேண்டும். அது எங்களிடம் இல்லை.
மற்ற அரசாங்க பள்ளிகளிலிருந்து வேறுபட்டுத் தெரியவே நாங்கள் இந்தப் பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுத்தோம் என்று ஷா பனோ ஜவத் பதான் (பள்ளி நிறுவனர்) கூறுகிறார்.
ஷாபுர் பப்ளிக் பள்ளி ஜூன் 6, 2013 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் புபண்டேசினி சுதாசமாயால் நிறூவப்பட்டது. அப்போதிருந்தே அப்பள்ளி மாணவர்களுக்குக் காவி நிற சீருடைதான் அளிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. மேலும் பள்ளியின் முதல்வர் ரேகா தேசாய், தற்போது எங்கள் பள்ளியில் 233 மாணவர்கள் படிக்கிறார்கள் அதில் 95 சதவீதம் இந்து குழந்தைகள்தான் 5 சதவீதம் மட்டுமே மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள்’ என்கிறார்.
குழந்தைகளின் மனதில் சிறுவயதிலே இந்த நிறவேறுபாட்டை ஊக்குவித்து நான் முஸ்லீம், நீ இந்து என்று ஆழ பதியவைக்கும் வழிமுறைகளை இப்பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
பாஜகாவின் காவி அரசியல் பள்ளிகளில் மட்டும்தான் நுழையாமல் இருந்தது, இந்த ஐந்துவருடத்தில் அதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.