நடைப்பெறவிருக்கும் மூன்றாம் கட்டத்தேர்தலை முன்னிட்டு 115 தொகுதிகளில் 63 தொகுதிகள் சிவப்பு எச்சரிக்கை தொகுதிகளாக அறிவிக்கப்படுகிறது என ஜனநாயக சீர்தருத்த கூட்டமைப்பு(Association of Democratic Reforms- ஏடிஆர்)நடத்திய ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ளது.

ஏடிஆர் என்பது இந்திய தேர்தல்கள்குறித்து தொடர்ந்து ஆய்வுச்செய்து வரும் ஒரு அமைப்பு. வேட்பாளர்களின் சுயநிர்ணய உரிமை வாக்குமூலங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் ஏடிஆர் இன்று ஒரு புள்ளிவிவர ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,”மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளில் 570 பேர் கிரிமினல் வழக்குகளில சிக்கியிருப்பவர்கள். 90 காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 பேரும், 97 பாஜக வேட்பாளர்களில் 38 பேரும் கிரிமினல் வழக்குகள் முடியாதநிலையில் உள்ளனர். மிகக் குறைந்த அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களுள் 14 வேட்பாளர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் 13 பேர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்ளும் ஆவர். பாலியல் பலாத்காரம், பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாக்குதலில் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுதல், கணவனாகவோ அல்லது கணவனுக்கு உடந்தையாகவோ ஒருபெண்ணை வன்கொடுமை செய்தது போன்ற வகையில் 26 பேர்மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளன. அவதூறு வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபட்டதாக 26 பேர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன” என தெரியவந்துள்ளது.

எச்சரிக்கை தொகுதி: ஒரு தொகுதியில் நிற்கும் மூன்று அல்லது அதற்கும்மேற்பட்ட வேட்பாளர்கள்மீது குற்ற வழக்குகள் இருந்தால் அத்தொகுதி சிவப்பு எச்சரிக்கை தொகுதிஎன அறிவிக்கப்படும். அவ்வகையில் ஏடிஆர் நடத்திய தொகுதிகள் குறித்த ஆய்வில், 115 மக்களவைத் தொகுதிகளில் 63 சிவப்பு எச்சரிக்கை தொகுதிகள் என வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக செல்லவேண்டியவர்கள் குற்றப் பின்னணியோடும் பொய்க்கணக்கு சொத்துமதிப்புகளோடும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதுதானா என்றும் இவ்வறிக்கை கேள்வியெழுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.