தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த (ஏப்.18) தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி (தற்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) எம்.எல்.ஏ. ஆனார். எனினும் அதன் பிறகு கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று(ஏப்ரல் 22) தொடங்குகிறது. ஏப்ரல் 29-ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில்
இடைத்தேர்தல் முக்கியமானதாக மாறியிருக்கும் நிலையில், திமுக அதன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்தது. இதேபோல், அதிமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.