இலங்கை கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டைச் செயலிழக்க செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்தது.
நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக நேற்று நடைபெற்ற நிலையில், இலங்கையில் தேவாலாயம், ஹோட்டல் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்வங்களில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 290 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் இலங்கை அதிபர் சிறிசேனா.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களாலும், அவசர நிலைப்பிரகடன அறிவிப்பாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து அச்சத்தில் உள்ளனர். இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீ ஜமா-அத் என்ற இஸ்லாமிய அமைப்புதான் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்திலிருந்து 87 டெடனேட்டர்களை இன்று பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டெடனேட்டர்களுக்கும், நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா எனப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி மன்னார் ஓலை தொடுவாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டும் மீட்கப்படுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு மற்றும் டெடனேட்டர்களை செயலிழக்க செய்யும் பணியில் இன்று மதியம் முதல் ஈடுபட்டிருந்தனர் நிபுணர்கள். இதற்கிடையில் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டைச் செயலிழக்க செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவிற்குள் புகுந்துவிடாமல் தடுக்க இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.