பாஜக உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஏன் மூத்த தலைவர்கள்வரை சர்ச்சைக்குறிய கருத்துக்களை சமீபகாலங்களாகப் பேசிவருகின்றனர்.

இந்திய நாட்டில் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு விளம்பரம் கிடைக்குமென பல மூடநம்பிக்கையைகளுடைய விஷயங்களை பாஜகவினர் பேசுவதால், பலவிதங்களில் அது சமூகத்தில் சர்ச்சைக்குள்ளாகிறது. இதனால் சமூக பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

மாடுகளைத் தெய்வமாக வழிபடவும், காக்கவும் நினைக்கும் இந்துத்துவவாதிகள், மனிதர்களை மனித மான்போடு பார்க்கவோ, அணுகவோ மறுக்கிறார்கள். மாடுக்கறி வைத்திருந்ததற்காக மலத்தையும், பன்றி கறியையும் வாயில் திணிக்கும் கொடூர செயல்களையும், அடித்துக்கொலை செய்யும் மனித தன்மையற்ற செயலும் இன்னும் பலசொல்லமுடியாத செயல்களையும் பசுப் பாதுகாவலர் என்ற பெயரில் செய்து வருகின்றனர் பாஜக இந்துத்துவாவாதிகள். மாட்டைவிடவும் கேவளமாக நடத்தப்படுகிறார்கள் தலித், முஸ்லீம், சிறுபான்மையினர் மக்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் சாத்வி பிரக்யா. எப்போதும் காவி உடையில் இருக்கும் இவர், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில்,  மாட்டின் பயனையும், மாடுகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்களைப் பற்றியும் விளக்கியுள்ளார் சாத்வி. அப்போது, இந்தியா முழுவதும் பல இடங்களில் மாடுகள் நடத்தப்படும் வீதம் தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களினால் உடல்சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் தீரும் எனத் தெரிவித்த சாத்வி பிரக்யா, ஒருபடி மேலபோய் “பசு மாட்டின் சிறுநீராலும், பஞ்சகவ்யம் கலவையான ஆயுர்வேத மூலிகைகள்தான் என் மார்பக புற்றுநோயைக் குணமாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.

“பஞ்சகவ்யம் கலவையானது, பாரம்பரிய இந்து சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஐந்து மாட்டு பொருட்கள் கலந்த கலவைகளால் தயாரிக்கப்பட்ட கலவையாகும். மாட்டிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட மூன்று நேரடி கூறுகள் சாணம், சிறுநீர், பால் ஆகியவை. தயாரிக்கப்பட்ட பொருட்கள் தயிர் மற்றும் நெய் ஆகியவை அந்தக் கலவையில் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு, பின்னர் புளிக்கவைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.” என்று கூறினார் சாத்வி பிரக்யா.

இந்த அறிவியல் சிகிச்சை முறையை விளக்கிக் கூறிய சாத்வி, “இதன் செயல்திறனுக்கு நான் வாழ்வதே உதாரணம்” என்று தெரிவித்தார். அத்துடன் இரத்த அழுத்தம் குறையவும் மாடுகள் நல்ல தீர்வாக உள்ளதாக மற்றொறு அறிவியல் சிக்கிசை முறையும் விளக்கினார் சாத்வி.

“மாட்டின் பின்புறத்திலிருந்து அதன்முன்புறம் வரை நாம் கைகளை வைத்துத் தடவிக்கொடுக்கும்போது, நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். மாடுகளும் அந்த மகிழ்ச்சியை உணரும். அதேசமயம் விலங்குகளின் கழுத்திலிருந்து பின்பக்கம் வரை, தேய்த்து கொடுக்கும்போது அது சஞ்சலத்துடன் உணர்கிறது. எனவே மாட்டின் பின்புறத்திலிருந்து கழுத்துவரை தடவி கொடுக்கும்போது, நம் இரத்த அழுத்தம் கட்டக்குள் வருகிறது” எனக் கூறினார் அவர்.

கடந்த 2008 மேலகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டுபட்டு சிறையில் இருந்த இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர், போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராகச் சாத்வி பிரக்யாவை அறிவித்துள்ளது பாஜக.

கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள் நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்த சாத்வி பிரக்யா, “பாபர் மசூதி இடித்த சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணிலிருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார்.

மேலும் “மும்பை தாக்குதலின்போது ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே பலியானர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் என்னைச் சிக்கவைத்து, சிறையில் அடைத்துக் கொடுமைபடுத்தினார் ஹேமந்த் கர்கரே. ஆதலால் நான் அவருக்குச் சாபம் விட்டேன். என் சாபத்தால்தான் ஒரே மாதத்தில் அவர் உயிரிழந்தார்.” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாத்விக்கு, எதிர்கட்சிகளின் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து, ஹேமந்த் கர்கரே தொடர்பான தனது கருத்துக்களைத் திரும்பபெற்ற சாத்வி, மன்னிப்பும் கோரினார்.

தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை சாத்வி பிரக்யா தெரிவித்து வருவதால், இனி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசக் கூடாது என அக்கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.