ஏப்ரல் 24 ஆம் தேதி பாலிவுட் நடிகர் அக்க்ஷை குமார் பிரதமர் மோடியை எடுத்த அரசியலல்லாத பேட்டி ஒளிபரப்பானது. இதற்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரவிஷ் குமார், தன்னுடைய வழக்கமான பிரபலமான நிகழ்ச்சியை ஒரு நாளுக்கு மட்டும் “அரசியலல்லாத” நிகழ்ச்சியாக மாற்றுவதாகச் சொன்னார்.
அக்க்ஷை குமாரின், மோடியின் “அரசியல் அல்லாத” பேட்டியின் முதல் கேள்வியான “நீங்கள் மாம்பழங்கள் சாப்பிடுவீர்களா? அப்படிச் சாப்பிடுவீர்கள் எனில் அதைத் துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவீர்களா அல்லது அப்படியே விதையோடு சாப்பிடுவீர்களா? என்ற கேள்வியை ரவிஷ் குமார் குறிப்பாக எடுத்துக்கொண்டார்.
நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தோம். அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் அரசியலல்லாத பேட்டிகளை தரும்போது நாங்கள் ஏன் அப்படிச் செய்யக்கூடாது? ஆகவே நாம் மாம்பழங்கள் சாப்பிடுவோம் என்று அறிவித்தார்.
ரவிஷ் குமாரின் நிகழ்ச்சியில் 2018 இல் பிரதமர் மோடியை எழுத்தாளர் ப்ரசூன் ஜோஷி எடுத்த பேட்டியின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ப்ரசூன் ஜோஷி தற்போது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவராக உள்ளார். பிரதமரைப் பேட்டியெடுக்கும் அறிய வாய்ப்பு கிடைத்தும் இப்படிப்பட்ட முக்கியமில்லாத கேள்விகளைக் கேட்பதை ரவிஷ் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளாக மோடியின் ஆட்சியில் பல்வேறு சர்ச்சைக்குரிய நிகழ்வுகள், ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும் கொள்கைகள், சிறுபான்மையினரை அச்சத்தில் வைத்திருத்தல், நாட்டின் பொருளாதாரத்தைக் குலைத்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிகள் என கேட்க எவ்வளவோ இருக்க இது போன்ற “அரசியல் அல்லாத” பேட்டிகள் விமர்சனதிற்குள்ளவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.