உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்கும் குழுவிலிருந்து  விலகியுள்ளார் நீதிபதி ரமணா.

நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒரு பாலியல் குற்றச்சாட்டுப் புகார் ஒன்று உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பல்வேறு பாலியல் வழக்குகளுக்குத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்திம் பணிபுரிந்த முன்னாள் ஊழிய பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்று தெரிவித்துள்ளார் ரஞ்சன் கோகாய்.

இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான இந்த வழக்கில் ஆஜராகுவதற்காகத் தனக்கு ரூ.1.5 கோடி பணம் தருவதாக அஜய் என்பவர் தன்னிடம் பேரம் பேசியதாக வழக்கறிஞர் உத்சவ் சிங் தெரிவித்தார். இதுதொடர்பாகப் பிராமணப் பத்திரமும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வை அமைத்து உத்தரவிட்டார் ரஞ்சன் கோகாய். இந்த அமர்வில் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

நெருப்போடு விளையாட வேண்டாம்

வழக்கறிஞர் உத்சவ் சிங்கை நேரில் ஆஜராகக்கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று அவர் நேரில் ஆஜரானார். அவர் வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் உட்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

“பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுபடுத்த பார்க்கிறார்கள். ஆனால், இவை ஒருபோதும் நடக்காது.” என்று கூறிய நீதிபதிகள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

நீதித்துறையை கட்டுப்படுத்த நினைப்பது யார் என்பதை கண்டறிவது அவசியம் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது குறித்து பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

பாலியல் புகாரில் தலைமை நீதிபதியைச் சிக்க வைக்கச் சதி நடந்ததா என்பது குறித்து மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் சிபிஐ, உளவுத்துறை, டெல்லி காவல் துறை ஆகியோர் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இந்நிலையில், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழுவில் இருந்துதான் விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் நீதிபதி ரமணா. அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால், தான் இந்த குழுவிலிருந்து வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழு இந்த வழக்கை நாளை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி ரமணா விலகலால் விசாரணை தொடங்க தாமதம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.