தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று (பிப்ரவரி 22) சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன். அரசியல் பேச வரவில்லை என்று தெரிவித்தார். முன்னதாக விஜயகாந்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.
தேமுதிக கூட்டணி யாருக்கு?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிருப்படைந்துள்ளது. அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளன. இதில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் பிரித்து தொகுதி பங்கீடு செய்து முடித்தது அதிமுக. தொகுதி பங்கீடு முடிவடைந்தநிலையில், தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை மட்டும் இழுபறியில் நீடித்துவருகிறது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது திமுக. மேலும் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளோடு கூட்டணி பங்கீடு குறித்து இன்று ஆலோசனை நடத்திவருகிறது. அதிமுக-பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிகவில் வரும் 24ஆம் தேதி விருப்பமனு விநியோகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுகரசர், நேற்று விஜகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார். தேமுதிகவின் முடிவு என்ன என்பது தேர்தல் களத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
துளிகூட அரசியல் கிடையாது
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கிய சந்திப்பாக அரசியல் களத்தில் கருதப்பட்ட நிலையில், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரிலிருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த். அவரது சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன் . இதில் துளிகூட அரசியல் கிடையாது” என்று தெரிவித்தார்.
நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை
நடிகர் ரஜினிகாந்தை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜயகாந்தை சந்திதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். அவர் கலைஞரின் மீது அன்புமும், மரியாதையும் கொண்டவர். கலைஞர் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் விஜயகாந்த்தால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை. எனினும் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து பேசியிருந்தார் விஜயகாந்த். அவை இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. சிகிச்சை முடிந்து விஜகாந்த் சென்னை வந்தவுடன் கலைஞரின் நினைவிடத்திற்க்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிவருகிறார் அவர். அவரை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தேன். உடல்நலம் தேறி நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பணியாற்ற அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்க்காகதான் இந்த சந்திப்பா? என்று செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பட்டபோது, ”அரசியல் பேசுவதற்காக வரவில்லை. உடல்நலம் குறித்து மனிதாபிமானத்துடன் விசாரிக்க வந்தேன். நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்” என்று தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
தேமுதிக அதிமுகவுடன் இணையுமா? இல்லை திமுகவுடன் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரிடத்தும் எழுந்துள்ளது.