ஐந்து வருடங்களுக்கு முன்பு ஈராக்கில் மசூதி ஒன்றில் அமர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் தான்தான் என்று அறிவித்தவர் அபுபக்ர் அல்-பாக்தாதி. மேலும் அப்போது அவர் வெளியிட்ட காணொளியில் இழந்த எங்கள் பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என கூறினார். இந்த அறிவிப்புக்கு பிறகு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, உலகம் முழுக்க பல்வேறு தாக்குதலை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் பல முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன.

இந்த கொலைகளுக்கு காரணமான நிழல் உலக பயங்கரவாதி பாக்தாதி மட்டும் வெளி உலகில் தென்படவில்லை.

மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி மிகச் சொற்பமாகவே பொதுவெளியில் தோன்றுவார். அதுவும் மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றி பேசுவார். மேலும் ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பின் அனைத்து விடியோவிலும் இறுதியில் பாக்தாதியின் படம் இடம்பெற்றிருக்கும்.

இஸ்லாமிய அரசு குழுவின், ஒவ்வொரு தலைவர்களை கடந்து உயர செல்லச் செல்ல, அவர்களுக்கு மிக விசுவாசமான இருப்பவர்களுக்கு மட்டுமே பாக்தாதியின் தரிசனம் கிடைக்கும். எனவே, பாக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

2014ஆம் ஆண்டுக்கு பின்பிலிருந்தே அபுபக்கர் அல்-பாக்தாதியை காணவில்லை. அதாவது சிரியா மற்றும் இராக்கின் சில பிரதேசங்களை கைப்பற்றி கலிபாவை ஏற்படுத்திய பின்பிலிருந்தே அவரை காணவில்லை.

அமெரிக்க அரசாங்கம் பாக்தாதி உயிருக்கு 25 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தது. ஆனால் பாக்தாதி, பலியாகிவிட்டதாக பல தரப்பிலிருந்து வதந்திகள் வேகமாக பரவின. பாக்தாதி உயிரோடு இருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னணியில் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் பல்வேறு நாட்டு உளவு அமைப்புகளுக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி, 5 வருடங்களுக்கு பிறகு வீடியோவில் தோன்றி நேற்று (ஏப்ரல் 29) பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாதி மீண்டும், வீடியோவில் தோன்றி தான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அமெரிக்க மற்றும் அவரை தேடிக்கொண்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் கையில் ரைஃபிளுடன் அமர்ந்து அவர் பேசும் காட்சிகள்  வெளியாகியுள்ளன.

“நமது போர் தற்போது தேய்வு நிலையில் உள்ளது. ஆனால் எதிரிகளை ஒடுக்க, போர் தொடரும். ஜிகாத் என்பது, தீர்ப்பு நாள் வரும் வரை தொடரும்” என்று கூறியுள்ளார் பாக்தாதி.

மேலும் அந்த விடியோவில் பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாக ஈஸ்டர் அன்று இலங்கையை தாக்கினோம் என்று அல்-பாக்தாதி கூறி உள்ளார்.

இந்த காணொளியில் சூடான், அல்ஜீரியாவில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசி உள்ள அவர் சர்வாதிகாரத்தை விழ்த்த ஜிஹாத்தான் சரியான வழி என்று குறிப்பிட்டுள்ளார்.

18 நிமிடங்கள் நீள்கிற இந்த காணொளியின் இறுதி காட்சியில் பாக்தாதியின் புகைப்படம் மெல்ல மறைந்து, இலங்கை தாக்குதல் குறித்து பேசும் ஒலி கேட்கிறது.

தனது ஆதரவாளர்களுடன் பாக்தாதி பேசும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளதுமூலம் பல்வேறு இடங்களில் மோசமான தாக்குதல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தாக்குதல் சவுபேன் சென்டர் என்ற உலகளாவிய பாதுகாப்பு ஆய்வு மையத்தின், மூத்த ஆய்வாளர் கொலின் பி.கிளார்க் கூறுகையில், “பாக்தாதி திடீரென வீடியோவில் தோன்றியிருப்பது, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும். தனிப்பட்ட நபர்கள் அல்லது சிறு குழுக்களுக்கும், தாக்குதலை நடத்தும் ஆவேசத்தை இவரது வீடியோ கொடுத்திருக்கும். இது உலகிற்கு ஆபத்தானது” என்றார்.

இந்த வீடியோ, எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஆனால், இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் உட்பட பல்வேறு சமீபத்திய சம்பவங்கள் குறித்து, அந்த வீடியோவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வாரத்திற்குள்தான் இந்த வீடியோ எடுத்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது, ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எது எப்படியிருந்தாலும் இந்தியாவின் பாதுகாப்புதுறை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரமிது.