மகாராஷ்டிரா கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தில், கடந்த வருடம் ஏப்ரல் 22ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவு தினத்தை இந்த வாரம் முழுவதும் நக்சலைட்டுகள் அனுசரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது இன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜாமுர்கேடா அருகிலுள்ள குர்கேடா பகுதி வழியாகப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நக்சலைட்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த பகுதியில் அவர்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். பயங்கர சத்தத்துடன் வாகனமும் வெடித்துச் சிதறியது. இதில் வீரர்கள் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். 20க்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். குர்கேடா பகுதியில் நேற்று சாலை பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 27 வாகனங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதில், வாகனங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ”நக்சலைட்டு தாக்குதலில் மரணமடைந்த துணிச்சலான பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்; நம் வீரர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது .” என்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.