திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உட்பட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை இன்று (மே 2) வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, முடிவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனையும் நடந்து முடிந்து. இன்று 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மொத்தம் 63 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 44 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 4 பேர் திரும்பப்பெற்றனர். தற்போது 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் 16 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வாபஸ் பெற்றதால் அங்கு 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நான்கு தொகுதிகளிலேயே அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.