சிறைகளில் போதை பொருள்கள் வழக்கமாகிட்ட ஒன்று. பெரும்பாலான சிறைவாசிகள் போதை பொருள்களுக்கு அடிமையாகித்தான் இருக்கிறார்கள். அவ்வப்போது சிறைக்குள் நடத்தப்படும் ரௌண்ட்ஸ், வெளியிலிருந்து போதை பொருள்கள் உள்ளே வரும் பாதையை அடைப்பது மட்டுமே இந்தப் பரவலான போதை பொருள் பயன்பாட்டை நிறுத்தாதாகையால், சிறைக்குள்ளேயே மறுவாழ்வு மையங்களைத் திறக்க முடிவு செய்திருக்கிறது சிறைத் துறை.
தமிழகத்தின் 14 மத்திய சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 10,000 சிறைவாசிகள் உள்ளனர். 14-இல் 5 பெண்களுக்கான மத்திய சிறைச்சாலைகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமயங்களில், சிறைக்குள் பூசல்கள் ஏற்படும்போது இப்படியான தீவிர பழக்கத்தைக் கொண்டிருக்கும் சிறைவாசிகளை அடக்குவது கடினமாக இருக்கிறதென்றும் சில நேரங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மதுரை சிறைச்சாலையில் ஒரு சிறப்புக் குழு அறிவிப்புகள் எதுவுமின்றி திடீரென்று சிறைச்சாலையில் ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது, இரு சிறைவாசிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில சிறைவாசிகள் இணைந்து சிறைக்குள் ஒரு போராட்டத்தை நடத்தியதாகவும், அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்ததால் சிலர் காயமடைந்ததாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
போதை பொருள்கள் வைத்திருக்கும் சிறைவாசிகளைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்துவிட்டாலும் அவர்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும். போதை பொருள்களுக்கு அடிமையானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு இந்த மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை அளிப்பது தான் செயல்திட்டம். இந்த மறுவாழ்வு மையங்களுக்காக சிறைத் துறையுடன் வேலை பார்க்கும் ஆர்வலர்கள் அடங்கிய குழு சிறைக் காப்பாளர், அதிகாரிகளுக்கு போதை பொருளுக்கு அடைமையானவர்களை எப்படி கையாள வேண்டும் என்று சில அடிப்படை விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. மேலும், அவர்களை அணுகுவது குறித்து கற்றுத்தர தொடர்ச்சியாக சில பயிற்சி நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய இருக்கிறது.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா