உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.
பல்வேறு பாலியல் வழக்குகளுக்குத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழிய பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ரஞ்சன் கோகாய்.
இந்தப் புகாரையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையே இதில் தனக்கு நீதி கிடைக்காது என்று புகார் தெரிவித்த பெண் கூறி, விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறிய நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.