ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் புழக்கத்திற்கு வந்த 50 டாலர் பணநோட்டில் சிறிய எழுத்தில் அச்சாகியுள்ள எழுத்துக்களில் பிழை உள்ளதை அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானைச் சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு கடைசியில் இந்தப் புதிய நோட்டுகள் வெளியாகின. கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் வரிகள் இடம்பெற்றுள்ளன.
அதில், “ஒரேயொரு பெண்ணாக இங்கிருப்பது பெரியதொரு பொறுப்பு. பிற பெண்களும் இங்கிருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன்” என்கிற உரையின் பகுதி சிறிய எழுத்துக்களில் பலமுறை இந்த நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், ‘responsibility’ என்ற வார்த்தையில் “i” என்கிற ஆங்கில எழுத்தில்லாமல் “responsibilty” என்றே அச்சாகியுள்ளது. புதிய மஞ்சள் வண்ணத்திலுள்ள மில்லியன் கணக்கான இந்தப் பணநோட்டில் அச்சாகியுள்ள இந்த எழுத்துப்பிழையை எழுத்தின் உருவை பெருக்கி பார்க்கும் கண்ணாடி கொண்டு கண்டறிந்துள்ளனர். இதை கண்டுபிடிக்க ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ளது.
இந்த தவறை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எதிர்காலத்தில் அச்சிடப்படும் ஆஸ்திரேலிய டாலர் பணநோட்டுகளில் இந்த தவறு சரிசெய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
ஆனால், சுமார் 46 மில்லியன் புதிய டாலர் பண நோட்டுகள் நாடு முழுவதும் இப்போது புழக்கத்தில் உள்ளன. பணம் வழங்கும் இயந்திரங்களிலும் பொதுவாக இது வழங்கப்படுகிறது. இதன் இன்னொரு பக்கத்தில் பூர்வ குடி எழுத்தாளரான டேவிட் உனைய்போன் படம் அச்சிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பண நோட்டின் சமீபத்திய பதிப்பு வெளியானபோது, எளிமையான பயன்பாட்டை மேம்படுத்தவும், கள்ளநோட்டுகள் அச்சடிப்பதை தடுக்கவும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. எழுத்துப்பிழை இருந்தாலும், இந்த பணநோட்டு இன்னும் செல்லுபடியாவது குறிப்பிடத்தக்கது.