மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) இன்று (மே 13) மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசுகிறார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 6 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 7ஆம் கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலின் தேர்வு முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 23ஆம் தேதியன்று விடை தெரிவிந்துவிடும் என்று அரசியல் கட்சிகளும், மக்களும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினார் சந்திரசேகர் ராவ். மக்களவை தேர்தல் தொடங்கியபின் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசியல் தலைவரை சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசியது இதுவே முதல்முறை.
இந்நிலையில், மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார் சந்திரசேகர் ராவ். தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி அமையப் பல மாநில தலைவர்களை சந்தித்து சந்திரசேகர் ராவ் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.ஸ்டாலின்- கேசிஆர் சந்திப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இன்றைய சூழலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். “5 கேபினட் அமைச்சர்கள் பதவி கேட்டு டெல்லிக்கே திமுக தூது விட்டிருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். “கேசிஆர் மூன்றாம் அணி அமைப்பதே பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடுதான்” என்று தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன்.