பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்த டைம் இதழின் பத்திரிகையாளர் ஆதிஷ் தஸீரின் விக்கிபீடியா பக்கத்தை பாஜகவின் ஆதரவாளர்கள் திருத்தியமைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி, டைம் பத்திரிகையின் தலையங்கமாக பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஸீர் எழுதிய ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் பிரிவினையை உருவாக்கும் குழுவிற்குத் தலைவர் (Divider-in-chief) என்று கூறி, அதே தலைப்பில் தகவல்கள், தரவுகளோடு அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. பாஜகவின் கவனம் முழுக்க சமீபத்தில் தீவிரமாக இயங்கும் ‘எழுத்தாளர்கள்’ மீது குவிந்துள்ளது. அந்தவகையில் எழுத்தாளர் ஆதிஷ் தஸீர் மேல் அவர்களின் கவனம் முழுவதுமாக திரும்பியிருக்கிறது.
தொடர்ந்து அந்தக் கட்டுரை அதிகம் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் பல கருத்துகள் கூறப்பட்டுவந்தன. அதன்பின்பு சௌகிதார் ஷஷாங்க் (ஷஷாங்க் சிங்) என்பவரின் ட்விட்டரில் ஆதிஷ் தஸீர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வருவதாகவும், டைம் பத்திரிகை அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவு 500 முறை ரீட்வீட் செய்யப்பட்டது.
அந்தப் பதிவுடன் சேர்த்து ஷஷாங்க், ஆதிஷ் தஸீரின் விக்கிபீடியா பக்கத்தின் ஸ்க்ரீன்ஷாட்களையும் பகிர்ந்திருந்தார். அவற்றில் ஆதிஷ் தஸீரின் பிறப்பு, பெற்றோரின் விவரங்களும் அவரின் வேலையும் குறிப்பிடப்பட்டிருந்தது. கரியர் பகுதியில் ஆதிஷ் தஸீர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வருவதாகவும் அவருடைய புத்தகங்கள் பிராமணர்களை இழிபடுத்தும் விதமாக இருப்பதாக அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆதிஷ் தஸீரின் கட்டுரை வெளிவந்த அடுத்த நாள் முதல் அவரின் விக்கிபீடியா பக்கம் தொடர்ச்சியாக பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது அவரின் விக்கிபீடியா பக்கத்தில் இனி அங்கீகரிக்கப்பட்டவர்களால் மட்டுமே மாற்றங்கள் செய்யும்படி மாற்றப்பட்டுள்ளது.