கொழும்பு வீதியொன்றில் ஹபாயா அணிந்து வந்த பெண் நிறுத்தப்படுகிறாள். அவளைச் சூழ்ந்துகொள்ளும் சில ஆண்கள். அவளுடைய ஹபாயாவின் முகத்திரையை விலக்கி முகத்தைக் காட்டுமாறு கூறுகின்றனர். ஹபாயாவை அணியக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். அவள் பதிலிழந்து பதட்டத்தோடு நிற்கிறாள். ஈஸ்டர் ஞாயிறில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஒட்டு மொத்த இலங்கை இஸ்லாமிய சமூகத்தையும் ஹபாயா அணிந்த அந்தப் பெண்ணின் நிலைக்கே இட்டுச் சென்றிருக்கிறது. இப்படி நடு வீதியில் தடுத்து நிறுத்தப்படுவதும் வீடுகளுக்குள் நினைத்த நேரத்தில் எல்லாம் ராணுவம் புகுவதும் சந்தேகத்தோடு நோக்கப்படுவதும் இலங்கையில் ஒன்றும் புதியதல்ல. ஈழத்து தமிழர்களுக்கு பழக்கமானதுதான். இஸ்லாமியருக்கும் ராணுவ சோதனைச் சாவடிகள் அன்னியமானவை அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தகைய நெருக்கடிகள் குறைந்த காலம்தான் அசாதாரண காலமாக இலங்கையில் இருந்திருக்கிறது. முப்பது ஆண்டு காலம் அவசரநிலை அமலில் இருந்த இலங்கையில் நெருக்கடி காலம் சாதாரணமானதுதான்.
ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலையில் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பாவிகளுக்காக மரணித்து மூன்றாவதுநாள் உயிர்த்தெழுந்ததை இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களும் கொண்டாடினர். காலை 8.45க்கு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் குண்டு வெடித்ததாக முதல் தகவல் வந்த போது யாரும் அத்தனை பதட்டம் அடைந்து விடவில்லை. ஏதோ சிறிய அசம்பாவிதம் என்றே கருதினர். ஆனால், அடுத்தடுத்து வந்த தகவல்கள் இலங்கையின் சரித்திரத்தில் புதிய ஒரு அத்தியாயமானது. இதுவரை 359 பேர் இறந்திருக்கிறார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த ஒரு நாளில் மட்டும் மொத்தம் எட்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் கொச்சிக்கடைப் பகுதில் உள்ள அந்தோணியார் கோயிலில் குண்டு வெடித்த அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நகரான நீர்கொழும்பில் உள்ள செபஸ்டியான் தேவாலயத்திலும் இலங்கையின் கிழக்கில் உள்ள தமிழர்களின் நகரான மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன. இவை நடைபெற்ற சில நிமிடங்களிலேயே கொழும்பில் உள்ள இலங்கையின் உயர்தர நட்சத்திர விடுதிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த நட்சத்திர விடுதிகள் மூன்றும் இலங்கை அதிபர் அலுவலகத்திற்கும் பிரதமரின் இல்லத்திற்கும் மிக அண்மையில் இருக்கிறது. இந்த தாக்குதல் முடிந்து இலங்கை முழுவதும் பதட்டம் பரவிய நிலையில் மேலும் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன.
2009இல் போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த நெருகடியான சூழல் அண்மைய ஆண்டுகளில் படிப்படியாக மாறத் தொடங்கியிருந்தது. போரில் மரணித்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ராணுவம் மக்களோடு மக்களாக இருந்தது. அந்த சூழல் தற்ப்போது ஓரளவு மாற்றமுற்ற நிலையில்தான் இந்த குண்டுத்தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இதன் உடனடி விளைவை நாடு எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. குண்டுத்தாக்குதல் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அச்சம் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது.தொடர்ந்தும் நடைபெறும் சோதனைகளில் பள்ளிவாசல்களில் இருந்து கைப்பற்றப்படும் சந்தேகத்துகிடமான பொருட்களும் சீருடை அங்கிகளும் இஸ்லாமியப் பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்படும் வெடிப்பொருட்களும் மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயண்படுத்தி முன்னர் உருவானதைப் போன்று கலவரங்கள் எதுவும் உடனடியாக நடக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து இருந்த அச்சமே.ஏனெனில் சிறிய சிறிய காரணங்களை வைத்து கலவரங்களை உருவாக்கும் இனவாதக் கும்பல்கள் சிங்களவர்கள் மத்தியில் கடந்த காலங்களில் வளர்க்கப்பட்டுள்ளனர்.2014லும் 2018லும் இஸ்லாமியருக்கு எதிரான பௌத்த சிங்கள இனவாதக் குழுக்களின் தாக்குதல்கள் கலவரங்களாக மாறின. சிங்கள பிக்குகளின் தலைமையில் இயங்கும் பொதுபலசேனா இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டது.
போர் முடிந்த காலம் என்பது மிக முக்கியமான காலகட்டம். இலங்கையைப் பொறுத்தவரையில் போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்க வேண்டிய நல்லிணக்கமும் பன்மைத்துவமும் சமுகங்களுக்கிடையிலான நம்பிக்கையும் உருவாகியிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ அரசியல் தீர்வோ எதுவுமே சாத்தியப்படுத்தப்படவில்லை. இன்னமும் காணமல் போன தம் பிள்ளைகளைத் தேடி வீதிகளிலே காத்திருக்கும் மக்களையும், தங்களுடைய பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் விட்டு வெளியேறுமாறு ராணு முகாம்களின் முன்னால் ஆண்டுகணக்கில் போராடிக் கொண்டிருக்கும் மக்களையும் நாம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில்,இலங்கையில் மத அடிப்படையிலான தீவிர போக்குக் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் வேலைகள் சகல தரப்புகளிலும் நடைபெற்றன. தமிழர்களுக்கிடையிலான இன அடையாளத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகள் வேகமாக நடந்தன. சைவர்கள் மத்தியில் இந்துத்துவ செயற்பாடுகள் ஊக்கம் பெற்றன. மதம் மாற்றம், பசுவதை உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக சிவசேனை போன்ற அமைப்புகள் தோற்றம் பெற்றன. இதன் பேறாக சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுடான முரண்பாடுகள், உரசல்கள் நிகழ்ந்தது. உலகில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் எல்லாம் போர் நடந்த பகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்காக தேவாலயங்களை ஆரம்பிப்பதும் ஒரு புறம் நிகழ்ந்தது. பௌத்தமத விரிவாக்கமும் முழுவீச்சில் நிகழ்ந்தது. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு காரணமானவராக இருந்தவருமான கோத்தபாய ராஜபக்சே மீதும் குற்றம்சாட்டப்பட்டது. அதே நேரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாவதையும் அவர்கள் தடுக்கவில்லை. இப்போதைய குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் அப்போதே சந்தேகப் பார்வை இஸ்லாமியச் சமூகத்தில் இருந்தே முன் வைக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கிழக்கில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த மட்டக்களப்பு நகரத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இஸ்லாமியர்களின் நகரான காத்தான்குடிதான் இந்த குண்டுத்தாக்குதலுக்கு தலைமையாகச் செயற்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சொந்த ஊர்.ஒரு காலத்தில் மூன்று நான்கு பள்ளிவாசல்கள் இருந்த இந்த ஊரில் இன்று தெருவுக்குத் தெரு பள்ளிவாசல்களும் மதரசாக்களும் நிறைந்துவிட்டன. அரபுக் கல்லூரிகளும் அரபு நாட்டுச் செல்வாக்கும் தொடர்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. காத்தான்குடி சவுதியை இமிட்டட் செய்யத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டது. அரேபிய பேரிச்சை மரங்களை அப்படியே சவுதியில் இருந்து கொண்டு வந்து பெரிய மரங்களாக காத்தான்குடி வீதிகளில் நட்டு வைத்திருக்கிறார்கள். அந்த ஊரின் சீதோஷ்ண நிலைக்கு பொருந்த பேரிச்சை மரங்களையே வலிந்து கொண்டு வந்து நட்டவர்களுக்கு அடிப்படைவாத ஆடைகளயும் கருத்துருவாக்கங்களையும் கொண்டு வருவதில் எந்தச் சிரமமும் இருக்காது.
காத்தான்குடிக்குளேயே பல குழுக்களும் உருவாகிவிட்டன. இது காலப்போக்கில் காத்தான்குடியில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துகளை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நிலையும் உருவானது. காத்தான் குடியில் உருவான இஸ்லாமிய குழுக்ககிடையிலான முரண்பாடுகளின் விளைவாகத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. 2017 இல் சஹ்ரான் ஹாசிம் காத்தான்குடிக்குள் நடந்த முரண்பாடு ஒன்றின் பின்னர் காத்தான்குடியில் இருந்து வெளியேறி விட்டார் என அவரால் தோற்றுவிக்கப்பட்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். சஹ்ரான் ஹாசிம் மௌலவியாக இருந்த பள்ளிவாசல் காத்தான்குடியில் இருக்கிறது. தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் இந்த குண்டுத்தாக்குதலுக்கும் தொடர்ப்பிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் அவர்களோ சஹ்ரான் 2 ஆண்டுகளாகவே எங்கள் அமைப்பில் இல்லை. என்கிறார்கள். இந்த நிலையில் சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பும் வீடியோக்களையும் வன்முறையைத் தூண்டுவதையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். இலங்கையில் முஸ்லிம்கள் அல்லாத காபீர்களை அழிக்க வேண்டும் என்றெல்லாம் அவரின் உரைகள் இருந்தன. அவரின் வன்முறையான பேச்சுகளை எதிர்த்து ஒரு தொகை இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அரசிடம் முறைப்பாடும் செய்தனர். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்தது. கிழக்கிலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஒன்று உருவாவது பற்றி அனைவரும் அறிந்தே வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று இலங்கையில் கிழக்கில் உள்ள இஸ்லாமியக் கிராமங்களில் ராணுவ வேட்டை தொடங்கிவிட்டது. இப்போதே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துவிட்டனர்.இலங்கை இப்போது புதிய உலக ஒழுங்குக்குள் வந்துவிட்டது. ராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொன்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தலைமைகளும் தற்போது ராணுவத்தின் தொடர்ந்து வடக்கு கிழக்கில் நிலை கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தபாய ராஜபக்சே இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியிருகிறார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்த தாக்குதல் இலங்கை அரசின் பாதுகாப்பில் விழுந்த பெரும் ஓட்டை என சிங்கள மக்கள் கருதக்கூடிய சூழலில் புலிகளுக்கு எதிரான போரை வென்ற கோத்தபாய ராஜபக்சே மீண்டும் மீட்பராக சிங்களவர்களிடம் உருவெடுத்துள்ளார்.
இனி இப்போது உள்ள புதிய பயங்கரவாதத்திற்கெதிரான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமை பற்றி எதுவும் பேச முடியாத நிலை உருவாகிறது. இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கான நீதி என்பது காற்றில் பறந்துவிடும். இன்னும் எத்தனை புதிய கொலைகள் அடுத்துவரும் காலத்தில் பேசு பொருளாக மாறுமோ என்கிற அச்சம் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் முடிந்து சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து இந்த குண்டுத்தாக்குதல் நடந்திருக்கிறது. இனி இலங்கை சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஒரு நாடாக இருக்கப் போகிறது. அதே நேரம் இளைஞர்களை மூளைச் சலவை செய்வதற்கு ஏதுவாக உருவாகிவிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து வெளிவருவதும் அத்தனை இலகுவானதல்ல. அதே போல இதையே வாய்ப்பாக வைத்து ஏற்கனவே இந்தியாவில் இருந்து கிளைபரப்பத் தொடங்கிவிட்ட இந்துத்துவ சக்தியும் மேலும் வலுபெறும். பௌத்த தீவிரவாதமும் மேலும் கூர்மையடையும். இவ்வாறான சூழலில் கோத்தபாய ராஜபக்சேவும் இலங்கை அதிபரானால். இலங்கை எதிர்காலம் என்னாகும் என்கிற அச்சம் மேலோங்குகிறது. இலங்கையின் இன்றைய அரசு நல்லிணக்கம் , மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் எனப் பேசிப் பேசி தீவிரவாதத்தை வளரவிட்டது என கோத்தபாய குற்றஞ்சாட்டுகிறார்.
இந்த நிலைமையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் மூலம் பலனடையப் போகிறவர்களும் பாதிக்கப்படப் போகிறவர்களும் யார் என்கிற கேள்வி எழுகிறது. தமிழ்பேசும் இஸ்லாமியரும் ஈழத்தமிழரும் இணைந்து பயணிக்க வேண்டிய தருணம் இது. எப்போதுமே சிங்களவர்களுக்குள் நிகழும் அரசியல் போட்டிகளைச் சமாளிக்க சிறுபான்மையினர் மீதான வெறுப்பை பேசுபொருளாக்கும் இலங்கையின் அரசியல் வரலாற்றில், நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த பிரதமர் ரணில் பதவி நீக்கம் செய்யப்பட்டு மஹிந்த ராஜபக்சே பிரதமரானார். பின்னர் அவரால் பெரும்பான்மைய நிரூபிக முடியாமல்போக மீண்டும் ரணில் பிரதமரானார். ஆனாலும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரங்களை அதிபர் ரணிலுக்கு வழங்கவில்லை. அதன் பின்னர் அதிபர் மைத்திரிக்கும் ரணிலும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. இந்தக் குண்டுத்தாக்குதல் தொடர்பிலும் இருவரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றனர். இத்தகைய கடுமையான அரசியல் நெருக்கடி சூழலில் இந்தக் குண்டு வெடித்திருக்கிறது. இது அத்தனை சீக்கிரத்தில் அடங்கிவிடக்கூடிய வெடிப்பல்ல. இந்தியா வரை அதன் அதிர்வு இருக்கும்.