ஏப்ரல் 1, 2018 அன்று காலை 7 மணிக்கு அஜித்சிங் தனது கிராமத்திலிருந்து 8 கி.மீ தள்ளி ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். இதுதான் அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது. விபத்தின்போது அவர் மனைவி சத்வந்தி அருகிலிருந்தார், அவர்தான் ஹிசார் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அஜித்தின் உறவினர் சச்சின் துல் நடந்தவற்றை விவரிக்கிறார். எனது மாமாவும் அக்காவும் மாடுகள் வாங்க பக்கத்திலிருக்கும் தாபரா கிராமத்திற்குச் சென்றிருந்தார்கள். அப்போதுதான் எனக்குத் தகவல் வந்தது. கார் விபத்தில் அவர் உயிரிழந்தார் என்று. காரின் ஓட்டுநர் [ஹூண்டாய்] i-20 கார் (எண்: HR 31M 7380) அதிக வேகத்தில் அஜாக்கிரதையாக ஓட்டிவந்து மாமாவை பின்னாலிருந்து மோதினார். விபத்தில் காயங்கள் காரணமாக அவர் இறந்தார். காரை ஓட்டி வந்த ஓட்டுநரின் பெயரையும் முகவரியையும் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.
ஏப்ரல் 2, 2018 அன்று ஹிஸ்ஸார் கேசரி பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இது பற்றிய செய்தி வந்தது. அதில் அஜித் பேருந்தை விட்டு இறங்கி சில அடிகளே எடுத்து வைத்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவரை மோதியது. அதில் அவர் மயங்கி விழுந்தார். காரின் ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் விபத்தில் காயங்கள் காரணமாக அவர் வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை 10.48 க்கு ஹிசார் சதார் காவல் நிலைய அதிகாரி சத்வந்தியின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 279 (வேகமாக ஒட்டுதல்) மற்றும் 304-A (அலட்சியம் மூலம் இறப்பு) கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்கிறார். இறந்த அஜித்தின் உறவினர்கள் ஐந்து பேர் அவரது உடலைப் பிணவறையில் அடையாளம் காட்டுகின்றனர். அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் விபத்தில் சேதமடைந்ததால் மரணம் நேரிட்டது என்று தெரிவிக்கிறது ஹிசார் சிவில் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கையெழுத்திட்ட பிரேத பரிசோதனை அறிக்கை.
எல்லாம் முடிந்துவிட்டது. அஜித்தின் மனைவி உறவினர்களுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். போலீசும் அடுத்த வழக்குகளுக்கு நகர்ந்துவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 150000 பேர் சாலை விபத்தில் இறந்துபோகிறார்கள். அஜித்தும் அதில் ஒருவர். ஒரு சாதாரண மனிதனின் சாதாரண முடிவு. அஜித்தின் மனைவிக்கு அஜித்தின் அண்ணனை மணமுடித்து வைக்கிறார்கள். ஹரியானாவிலுள்ள கிராமங்களில் இது பொதுவாக நடக்கக்கூடியதுதான். அதன்பின் அவர்கள் வாழ்வில் எதுவும் பெரிதாக நடக்கவில்லை ஆனால் ஒன்றைத் தவிர.
சந்தேகம்
அஜீத் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் நான்கு காப்பீடு நிறுவனங்களிடம் விபத்து காப்பீடு எடுத்திருந்தார். ஒவ்வொன்றும் ரூ.5000 தொகை கட்டி எடுக்கப்பட்டது. அதன்படி விபத்தில் மரணமடைந்தால் அவர் குடும்பத்தாருக்கு ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் தலா 25 இலட்சம் தரவேண்டும். சில மாதங்கள் கழித்து ஜூலை 2018 அவர் மனைவி சத்வந்தி பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். “எனது கணவர் அஜித் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்பதை கடும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் மரணம் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இழப்பீட்டுத் தொகைக்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹரியானாவில் 2017 இல் இருந்து 2018 வரை இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்ததை காப்புறுதி நிறுவனங்கள் சந்தேகிக்க ஆரம்பித்தன.
பார்தி ஏஎக்ஸ்ஏ காப்புறுதி நிறுவனத்திடம் இதே போன்ற விபத்து காப்பீட்டு இழப்பு கேட்டுப் பல விண்ணப்பங்கள் வந்தன. அவை எல்லாவற்றிலும் ஒரு வினோதமான ஒற்றுமை இருந்தது. எல்லோரும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் வங்கிக் கணக்கு ஆரம்பித்துள்ளனர். பான் எண் கூட இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கப்பட்டது.
“இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இறந்த அனைவரும் விவசாயிகள். அவர்கள் தங்கள் வாழ்வில் இதற்கு முன் விபத்து காப்பீடு எடுத்ததே இல்லை.” என்று அந்த நிறுவனத்தின் மோசடி மற்றும் விசாரணை பிரிவின் துணைத் தலைவர் அமான் பேடி கூறினார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காப்பீடு செய்யப்பட்டு இறந்த அனைவரும் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துபோனவர்கள். மேலும் நாங்கள் விசாரித்தபோது இன்னொரு ஒற்றுமையும் கண்டோம். எல்லா வழக்கிலும் மூன்று தொலைப்பேசி எண்கள் திரும்பத் திரும்ப வந்தன. இதே நிலைமை தான் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்திற்கும். அதுவும் குறிப்பாக ரோஹ்தக் மற்றும் சோணிபேட் பகுதியிலிருந்துதான் நடந்துள்ளது. ஒரு பாலிசியை வாங்கியதற்கும் அதற்கு இழப்பீடு கேட்கும் காலமும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் காவல்துறை அறிக்கையில் விபத்து நடந்ததைப் பார்த்த சாட்சி, விபத்து நடந்த இடங்களின் புகைப்படங்கள், சக பிரயாணிகள் நிலைமை போன்ற எந்த தகவலும் இல்லை. சோளா இன்சூரன்ஸ் நிறுவனமும் இதே போன்ற இழப்பீடு கோரிக்கைகளை எதிர் கொண்டன. 2017-2018 இல் அந்த நிறுவனத்திடம் இன்சூர் செய்த இறந்தவர்கள் அனைவரும் சரியாக ரூ 10 இலட்சத்திற்குக் காப்பீடு எடுத்திருந்தனர். அதற்கு அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை. சரியாக 10 இலட்சம். காப்பீடு எடுத்த அனைவரும் விவசாயிகள். அவர்களுடைய காப்பீடு அனைத்தும் இணையத்தில் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கப்பட்டவை.
இதில் ஒரு மர்மம் என்னவென்றால் நான்கு வழக்குகளில் இறந்தவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள். வண்டியை ஓட்டிச் சென்றவர் குறுக்கே ஆடு, மாடு போன்றவை திடீரென குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விபத்து நடந்ததாகச் சொன்னார்கள்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றொரு ஒற்றுமையை கவனித்தனர். எல்லா வழக்குகளும் சோனிபட், ஜஜ்ஜார், ஹிஸார் மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் மட்டுமே பதிவாகி இருந்தன. கிட்டதட்ட 20 வழக்குகள் இது போல.
இதை விசாரிக்க அதிகாரி ஒருவரை நியமித்தது. அவர் ஒவ்வொருவருடைய குடும்பத்தினர், அண்டைவீட்டார்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை இது தொடர்பாக சந்தித்தார். ஆனால் யாரும் பேசத் தயாராக இல்லை, ஆனால் அவர் சில தகவல்களைக் கண்டறிந்தார். இந்த மரணங்களில் சந்தேகம் இருப்பதாகவும் இறந்தவர்கள் விபத்துகளில் இறக்கவில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பினார்.
இறந்த விவசாயிகள் அனைவரும் புற்றுநோயால் இறந்தவர்கள். ஏப்ரல் 5 2019 அன்று பார்தி ஏஎக்ஸ்ஏ இன்சூரன்ஸ் நிறுவனம் பஞ்ச்குலா காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தது. அவர்கள் ஒரு வருடம் விசாரித்ததில் இதை ஒரு கும்பலே திட்டமிட்டுச் செய்வதாகத் துப்பறிந்தனர். ஹரியானா சிறப்புக் காவல் படை இந்த பெரும் சதிக்கு மூளையாகச் செயல்பட்ட கும்பலின் தலைவனையும் அவனது இரண்டு கூட்டாளிகளையும் கைது செய்தது.
இந்த சதி மிகவும் வினோதமானது ஹரியானவைச் சேர்ந்த கும்பல் ஒன்று கிராமப்புறங்களில் உள்ள புற்றுநோய் முற்றி இறக்கும் தறுவாயில் இருக்கும் நோயாளிகளைக் குறிப்பாக ஏழ்மை நிலைமையில் இருப்போரை தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் அவர்கள் உடல்நிலையை மறைத்துப் பல நிறுவனங்களில் இன்சூரன்ஸ் காப்பீடு எடுக்கின்றனர். பின்னர் அவர்கள் இறக்கும் வரை காத்திருக்கின்றனர். பிறகு அவர்கள் உடலை விபத்தில் இறந்ததுபோல மாற்றுகின்றனர்.
இந்த கும்பல் தங்கள் பங்காக எட்டு முதல் 20 இலட்சம் வரை எடுத்துக்கொள்ளும். மீதியை அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆவணங்களை வைத்திருப்பவர்கள், மருத்துவர்கள், காப்பீட்டு எஜெண்டுகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள். ஆகியோருக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர். இந்த சதியில் குறைந்தது 100 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு வருடத்தில் 100க்கும் வழக்குகளும் 25 நிறுவனங்களிடம் இருந்து குறைந்தது 100 கோடி ரூபாய் இழப்பு தொகையைப் பெற்றுள்ளதாகவும் சிறப்புக் காவல் படை தெரிவித்தது.
பகவதிபுரம் கிராமத்தில் எல்லோரும் அஜித் சிங்கை தெரியும், ஆனால் ஒரு இளைய சகோதரனைப் போல் அவருடன் பழகும் அவரது நீண்டகால அண்டை வீட்டாரை பல்வான் துல் தவிர யாரும் அவரைப் பற்றிக் கூற விரும்பவில்லை. “அஜித்துக்கு புற்றுநோய் அவர் அதனுடன் இரண்டு வருடங்கள் போராடிக்கொண்டிருந்தார். அவர் PGIMS இல் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இறந்துபோன அன்று அதிகாலை நான் அவரை கடைசியாகப் பார்த்தேன். மூச்சுவிடக் கஷ்டமாக இருப்பதாகவும் கட்டிலை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து போடும்படி என்னிடம் சொன்னார். அதன்பிறகு அவரை காலை ஆறு மணிக்குப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டிருந்தார். அவர் மனைவியும் அவர் அருகிலிருந்தார். அதன் பின்னர் அந்த இன்சூரன்ஸ் நபர்கள் வந்து அஜித்தின் உடலை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் திரும்ப கொண்டுவந்தபோது அஜித்தின் உடலில் காயங்கள் இருந்தன. அவர்கள் அவர் உடலை கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றார்.
இதற்கு மூளையாகச் செயல்பட்டது பவன் குமார் போரியா, 42, இவரைப் பற்றி அவ்வளவு தகவல்கள் இல்லை. அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குண்டலியில் வசித்துவருவதாகவும் கல்லூரி முடித்த பிறகு அவர் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார் எனவும் தெரியவந்தது.
2005-2015 வரை அவர் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களில் விபத்து இழப்பீடு பிரிவில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு இந்த மோசடி பற்றிய எண்ணம் உருவானது. இது ஒரு புதுமையான சதி. இதுவரை யாரும் இயல்பான மரணத்தை விபத்து போல மாற்றியதில்லை என சிறப்புக் காவல் படை தெரிவித்தது.
இந்த மோசடியை அவர் 2015 இல் ஹரியானா மாநிலத்தின் புற்றுநோய் மருத்துவமனையில் (PGIMS) இருக்கும் கம்பியூட்டர் இயக்குபவரைத் தொடர்பு கொண்டு தொண்டை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கடைசி நிலை உள்ள நோயாளிகளின் பட்டியலைப் பெற்றார். அதற்குப் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை லஞ்சமாக கொடுத்தார். என காவல்துறை தலைவர் சதேஷ் பாலன் தெரிவித்தார்.
போரியாவும் அவரது கூட்டாளிகளும் அந்த பட்டியலில் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு லாபகரமான ஒரு திட்டத்தைச் சொல்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுப்பது சாகும் தறுவாயில் உள்ள மத்திய வயதுள்ள ஆண்களை. குடும்பத்தில் சம்பாதிக்கும் தகுதியுள்ளவர் இறந்துபோனால் என்ன ஆகும் என்று குடும்பத்திலுள்ளவர்களை கவலையுறச் செய்து அதற்கு தாங்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். தாங்கள் சொல்வதை மட்டும் அப்படியே செய்தால் போதும் ஒரு சிக்கலும் வராது என்று அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர்.
இதற்கு அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எதுவும் பெரிதாகச் செய்யவேண்டியதில்லை. அவர்கள் சம்மதம் கிடைத்ததும் இந்த கும்பலே மீதி வேலைகளைச் செய்கிறது. நோயாளியின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கப்படும், குறைந்தபட்ச தொகை அதில் வைக்கப்படும், பான் எண் வாங்கப்படும், இன்சூரன்ஸ் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படும். அதற்கான பாலிசி தொகையும் கட்டப்படும். சிறப்புக் காவல் படையின் விசாரணையில் எல்லா இன்சூரன்ஸ் பாலிசிகளும் ஒரே ஐபி முகவரி இருக்கும் கணினியிலிருந்து வாங்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. ஆனால் இறந்த அனைவரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் இவர்கள் சொல்வதற்கெல்லாம் சம்மதமும் தேவைப்படும் இடத்தில் கையெழுத்தும் கைநாட்டும் இட்டால் போதும்.
“ஆனால் பல குடும்பங்கள் எங்கள் யோசனையை நிராகரித்துள்ளன. நாங்கள் 50 பேரைத் தொடர்பு கொண்டால் அதில் 10 பேர் இதற்கு ஒப்புக்கொள்வார்கள்” என போரியா சிறப்புக் காவல் படையிடம் சொன்னார்.
“அவர்கள் நோயாளிகள் இறந்ததும் அவர்கள் உடலை விபத்து நடந்த இடத்திற்குக் கொண்டு சென்று வாகனங்கள் இடித்துவிட்டு நிற்காமல் சென்றதுபோல உருவாக்குகிறார்கள்.” எனச் சிறப்புக் காவல் படை அதிகாரி கே.கே.ராவ் தெரிவித்தார். அதன் பிறகு அவர்களுக்குச் சாதகமான காவல் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதை விபத்து போல எஃப் ஐ.ஆர் பதிவு செய்கின்றனர். பின்னர் பிணத்தைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை தங்களுக்குச் சாதகமான முறையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை தயார் செய்யும்படி சொல்கின்றனர். அதன் பிறகு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதில் விசாரணைக்கு வரும் அதிகாரியையும் தங்கள் கைவசப்படுத்துகின்றனர். இதில் ஏதேனும் வழக்கு விசாரணை என்று வரும்போது அரசு தரப்பு வழக்கறிஞரையும் தங்கள் வலைக்குள் இழுக்கின்றனர்.
இப்படி இதில் பங்கு வகித்த அனைவருக்கும் பணம் பிரித்துக் கொடுக்கிறார்கள். கிட்டதட்ட 100 கும் மேற்பட்டோர் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து இது வரை 100 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளனர்.
தற்போது சிறப்பு காவல் படை பவன் குமார் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த உறவினர்கள், மருமகன்கள், நண்பர்கள் ஆகிய ஏழு பேரை சோனிபாட்டில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 201 (ஆதாரங்களை அழித்தல்), 205 (செயல் நோக்கத்திற்காக அல்லது வழக்கு அல்லது வழக்கு தொடரப்படுதல்), 34 (பொதுவான நோக்கம்) 420 (மோசடி), 464 (போலி ஆவணத்தைத் தயாரித்தல்), 465 (மோசடி), 468 (ஏமாற்றுவதற்கான நோக்கத்திற்காக மோசடி) மற்றும் 471 இல் கைது செய்துள்ளனர். நோயாளிகளின் குடும்பத்தில் புகார் கொடுத்தவர்களையும் கைது செய்துள்ளது.
“இதில் ஈடுபட்ட நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தான் ஒரு குற்றச் செயலைச் செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்கள் எங்களிடம் இதையெல்லாம் எப்படிச் செய்வது என்று கூட தெரியாது என்றார்கள்.” என அதிகாரிகள் கூறினார்கள். அஜித்தின் மனைவி சத்வந்தியும் கடந்த ஏப்ரலில் எய்ட்ஸ் நோயினால் இறந்து போனார். லட்சக்கணக்கில் அவருக்குப் பணம் தருகிறோம் என்று நம்பவைக்கப்பட்ட அவர் வங்கிக் கணக்கிலிருந்த தொகை வெறும் பதினோராயிரம் மட்டும்தான்.