பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதியுள்ளார். இதற்கு சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின், மூவர் குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும்.
பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கிப் பேசியது ஆகியவைக் குறித்து பிரதமர் மோடி மீது புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்தத் தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகிய இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 6 வழக்குகளில் 4 வழக்கில் மோடிக்கு எதிராகவும், அதேபோல அமித்ஷாவிற்கு எதிரான அனைத்து வழக்கிலும் அசோக் லவசா எதிராக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளின் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தான் பங்கேற்கப்போவதில்லை எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, அசோக் லவாசா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தேர்தல் விதிமுறைகளை மீறினர். அவர்கள் மீதான 6 புகார்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. அதனால் இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
”தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களின் முடிவு ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை; தேர்தல் ஆணையத்தில் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.