அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
கடந்த 19ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகளில் மட்டுமே எண்ண முடியும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 2 அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடம் 63 வேட்பாளர்களுக்கும், அவர்களது முகவர்களுக்கும் போதுமானதாக இருக்காது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படவும், குளறுபடிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது” என்று புகார் தெரிவித்திருந்தார் செந்தில் பாலாஜி.
வாக்கு எண்ணும் அறை சிறியதாக இருப்பதால், மேஜைகள் குறைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் சுற்றுகள் 17லிருந்து 32 சுற்றுகளாக அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.