உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து இன்று (மே 22) உத்தரவிட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 4 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகளை நியமித்து அரசாணையை வெளியிட்டுள்ளார் குடியரசு தலைவர்.
சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, காவி ஆகிய 4 புதிய நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், ஏற்கனவே அனிருத்தா போஸ், போபன்னா ஆகியோரை உச்ச நீதிமன்ற அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், மீண்டும் உச்ச நீதிமன்றம் இவர்களின் பெயரையே பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. தற்போது அதற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
காவி என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நான்காவது முக்கியமான நீதிபதியாக இருந்து வருகிறார். சூரியகாந்த், ஹிமாச்சல பிரதேசத்தின் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அனிருத்தா போஸ் உள்ளார். கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போபன்னா உள்ளார்.