இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து, இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றார். மோடி அமைச்சரவையில் இடம்பெறும் மத்திய அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, “நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த முடிவுக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், வெளியிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், 543 மக்கவளை இடங்களில் காங்கிரஸுக்கு இருப்பதோ தற்போது 52 இடங்கள்தான். எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறக் காங்கிரஸுக்கு இன்னும் 3 இடங்கள் தேவைப்படுகிறது.

ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அப்படி அவர், பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சோனியா காந்தியை மீண்டும் நாடாளுமன்றத் தலைவராக தொடர வேண்டும் என்ற திட்டமும் காங்கிரஸினர் இடையே உள்ளதாக தாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் இன்று (ஜூன் 1) டெல்லியில் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் யார் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. ராகுல் காந்தி தலைமையில் நடந்த எம்.பி-க்கள் கூட்டத்தில் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிய, சோனியாவை தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர்.