சமூக ஆர்வலர் மற்றும் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படங்களை வெளியிட்ட முகிலன் காணாமல்போய் 100 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், முகிலன் எங்கு இருக்கிறார்? உயிருடன் இருக்கிறாரா? என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்ட இவர், கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் தொடங்கி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிராக முன்னின்று போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்தவர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டார். அதன்பிறகு, அன்றிரவு அவர் வீடு திரும்பவே இல்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் காவல்துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் முகிலன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
இதனையடுத்து, முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி-க்கு சென்றது. ஆனாலும் முகிலன் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் முகிலனால் எதிர்க்கப்பட்டவர்கள் யாரோ அவரை ஏதோ செய்துவிட்டார்கள் என்றும் முகிலன் குடும்பப் பிரச்சனைக் காரணம் தலைமறைவாக உள்ளார் என்றும் வதந்திகள் மட்டுமே வந்ததேயின்றி முகிலன் வரவில்லை. முகிலன் காணாமல்போய் 100 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை அவரின் நிலைப்பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இவர் காணாமல் போனது முதலே #WhereIsMugilan ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ட்ரெண்ட் செய்யப்பட்டது. தமிழகத்தில் அங்கங்கு முகிலனுக்காக போராட்டங்கள் நடைப்பெற்றது.
இந்நிலையில், இன்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முகிலன் எங்கே? அவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல் என அவர்கள் முழக்கமிட்டனர். இப்போராட்டதில் முகிலனின் மனைவி பூங்கொடியும் பங்கேற்றார். மேலும், இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தென்னரசு, ஜி ராமகிருஷ்ணன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.