தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி கட்டாயம் இல்லை என புதிய கல்விக் கொள்கை வரைவுத்திட்டத்தில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, நாடு முழுவதும் மூன்று மொழி கல்வியை கடைபிடிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று (ஜூன் 3) வெளியிட்டுள்ளது. இதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற பரிந்துரையை நீக்கியுள்ளது மத்திய அரசு.
மேலும் மாணவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக, “அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!” என்று ட்வீட் செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.