பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
மகாகவி பாரதியார் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது அவரின் முண்டாசு தான். வெள்ளை நிறை தலைப்பாகையும், முறுக்கு மீசையும், கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும் பாரதியாரின் உருவத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் பாடபுத்தகத்தின் அட்டைப் புத்தகத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எல்லா இடங்களிலும் பாரதியாரின் தலைப்பாகை வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலையில், காவியுடன் பாரதியாரின் தலைப்பாகை இருப்பது ஏன் எனப் பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
காவி பயங்கரவாதத்தை தமிழகத்தில் கொண்டுவருவதற்கான வேலையா இது என்று பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது என்றும் அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அட்டைப்பட வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.