“நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசுதான் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது” என ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அத்தீர்மானம் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது நிலுவையில் இருக்கிறது.

இதனிடையே 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தார்.

தற்போது 7 பேரின் விடுதலை குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன மற்றும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாகச் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி எனப் பேரறிவாளன் தரப்பிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள ஆர்டிஐ, நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது எனத் தெரிவித்துள்ளது.

சிறையிலிருந்த நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என முன்னதாகவே மும்பை எரவாடா சிறை நிர்வாகம் தகவல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.