மோடிக்கு அடுத்து இவர்தான் என்று கூறப்படும் ராஜ்நாத் சிங்கிற்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட எட்டு கமிட்டிகளில் வெறும் இரண்டில் மட்டுமே முக்கியதுவம் அளிக்கப்படுள்ளது.
யார் இந்த ராஜ்நாத்சிங்?
உத்திர பிரதேசத்தில் பிறந்த ராஜ்நாத் சிங், 1964 ஆம் ஆண்டு முதல் தனது 13 ஆம் வயதிலிருந்து ‘ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க’த்துடன் தொடர்புகொண்டிருந்தார். இவர் மிர்சாபூரில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தபோதும் அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தார். 1974ஆம் ஆண்டில் ஒரு இந்துதுவ அடிப்படை அரசியல் கட்சியான ‘பாரதீய ஜன சங்’கின் மிர்சாபூர் பிரிவின் செயலராக நியமிக்கப்பட்டார்.
1975ஆம் ஆண்டில், 24 வயதில் ‘ஜன சங்’கின் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜ்நாத் சிங், 1977ஆம் ஆண்டில் மிர்சாபூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இளம் வயதிலான வேகமான வளர்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக ஆவதற்கு வழிவகுத்தது என்றே சொல்லலாம் . 1984 ஆம் ஆண்டில் அவர் இளைஞர் அணியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1986 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் அணியின் செயலராக நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இறுதியாக பாஜக-வின் இளைஞர் தேசியத் தலைவராக உயர்ந்த இவர், உத்தரப் பிரதேச மேலவையின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
1991 ஆம் ஆண்டில், மாநிலத்தின் முதல் பாஜக அரசில் கல்வி மந்திரியாக ஆனார். வரலாற்றுப் புத்தகங்களை மீண்டும் எழுதச் செய்ததும் வேத கணிதத்தை பாடத் திட்டத்தில் சேர்த்ததும் அவர் கல்வி மந்திரியாக இருந்தபொழுதுதான். 1994 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத்சிங், மேலும் தொழிற் துறையின் ஆலோசனைக் குழு, வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு, அலுவல் ஆலோசனைக் குழு, அவைக் குழு, மனித வள மேம்பாட்டுத் துறைக் குழு ஆகியற்றிலும் பணியாற்றினார்.
1997 உத்தரப் பிரதேச பாஜக-வின் தலைவராக தேர்வானார். மேலும் 1999 ஆம் ஆண்டில் மைய தரை வழிப் போக்குவரத்தின் கேபினட் அமைச்சராகவும், வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் வேளாண் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று அத்வானியின் விலகலைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்து அவரை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு நவம்பரில் அவரது வேட்பு மனுவுக்கு போட்டியின்றியும், குழுவின் 15 பரிந்துரைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமாராக மோடி பதவியேற்றுள்ள நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு அமைச்சரவைக் கமிட்டிகளை அமைத்துள்ளது. மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 8 அமைச்சரவைக் கமிட்டியில் இரண்டில் மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பெற்றுள்ளார். நிதித்துறை அமைச்சராக பதவியேற்று இருக்கும் நிர்மலா சீதாராமன் 7 கமிட்டிகளிலும், வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் 5 கமிட்டிகளிலும் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சரவைக் கமிட்டி அமைப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பொருளாதாரா விவகாரக் கமிட்டி, முதலீடு மற்றும் வளர்ச்சிக் கமிட்டி மற்றும் பாதுகாப்புக் கமிட்டிகளில் பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். முதலீடு மற்றும் வளர்ச்சிக் கமிட்டியில் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் உள்ளனர். இந்தக் கமிட்டி நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை கமிட்டியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆனால், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர், ரவி சங்கர் பிரசாத், ஹர்ஷ் வரதன், பியூஸ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி, ராம் விலாஸ் பஸ்வான், ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோர் இடம் பெற்று இருக்கும் அரசியல் விவகாரக் கமிட்டியில் ராஜ்நாத் சிங் இல்லை. கடந்த முறை அரசியல் விவகாரத்துறை கமிட்டியில் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங்கிற்கு இந்தக் கமிட்டியில் இடம் இல்லை.
வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்புக் கமிட்டியில் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர், பியூஸ் கோயல், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் கேங்வார் மற்றும் ஹர்தீப் சிங் புரி இடம் பெற்றுள்ளனர். வேலை வாய்ப்புக்களை உருவாக்க இந்தக் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக இந்தக் கமிட்டியில் அமைச்சர் ஸ்ம்ருதி இராணியும் அழைக்கப்பட்டுள்ளார். அனைத்து 8 கமிட்டிகளிலும் அமித் ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.