ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெடுங்காலமாக பல சமூக ஆர்வலர்கள் போரடிவரும் நிலையில் மதிமுக கட்சியின் தலைவர் வைகோவும் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஸ்டெர்லைட் வழக்கு நேற்று(12.06.2019) நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்ரயான் ஆகியோரது அமர்வுக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வக்கீல் மாசிலாமணி, “அரசின் ஆதரவாக கருத்துகளை கூறுவது என்றால் அனுமதிக்கலாமே தவிர, தனித்தனியாக எல்லோரையும் இவ்வழக்கில் அனுமதித்தால் நாள் கணக்கில் நீடித்து போகும், எல்லா ஆவணங்களையும் அவர்களுக்கு கொடுக்க முடியாது.” என்றார்.
இந்த வழக்குப்பற்றி ஏற்கனவே பலர் விளக்கம் கேட்டநிலையில், மதிமுக கட்சியின் தலைவர் வைகோ கூறுவதாவது ‘‘இங்கு 13 பேர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இயங்கி வந்தன. அரசும், அரசின் ஏற்பாட்டின் பேரில்தான் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேரும் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது.” என்றார்.
மேலும் “24 ஆண்டுகளாக இடைவிடாது எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நச்சு காற்றை வான்வெளி மண்டலத்தில் தண்ணீர், நிலம், காற்று எல்லாம் நச்சுமயமாக்குவதால் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனத்திற்குதான் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொடூர செயலாகும்.
இந்த செயல்களை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் மதுரை ஐகோர்ட்டு வருகிற 23-ந் தேதி நடத்த அனுமதி அளித்துள்ளது. அதனால் வருகிற 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.” என்றார்