2019 மக்களவை தேர்தலுக்குப்பின், இன்று (ஜூன் 17) முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், பிரதமர் மோடி எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றப்பின், நாடாளுமன்றம் இன்று (ஜூன் 17) முதன்முறையாகத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றம் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இன்று தொடங்கி அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
மக்களவையின் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில், வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, கேராளாவின் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கொடிகுனில் எம்.பி.யாக பொறுப்பேற்றார். பின்னர் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர், இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றனர்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய நம்பிக்கைகள் மற்றும் கனவுகளுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குவதாகத் தெரிவித்தார். நாடு சுதந்திரம் பெற்றது முதல், அதிக பெண்கள் வாக்களித்திருப்பதும், அதிக பெண்கள் எம்.பிக்களாகி இருப்பதும் இந்தத் தேர்தலில்தான் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு அரசு அமைந்துள்ளதாகவும், நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். நாளையும் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெறுகிறது. ஜூலை 5ஆம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதைதொடர்ந்து மக்களவைக்கான புதிய சபாநாயகர் புதன்கிழமை தேர்வு செய்யப்படுகிறார். வியாழனன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நடப்பு கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், முக்கிய பிரச்சனைகளை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன.
மேலும் இன்று கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் பிரதமர்கள் யாரும் இல்லாதது, இந்திய வரலாற்றில் முதலாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.