புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல எனப் பதிலளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கார்வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதைதொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும் பாதுகாப்புப் படை வீரர்களை வான்வழியாக வேறு இடத்திற்கு மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக எம்பி சையத் நாசர் உசேன் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அதில், புல்வாமா தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியல்ல என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த மத்திய அரசு, சதிப் பின்னணி, தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.