நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இன்று (ஜூன் 27) அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை மாநகராட்சியின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய பூண்டி, சோழாவரம், செம்பரபாக்கம், வீரணாம் உள்ளிட்ட ஏரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பருவமழை பொய்த்துவிட்டதால், ஏரிகள் வறண்டு நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்திருந்த நிலையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது ஆலை ரூ.1,250 கோடி செலவில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர் பழனிசாமி.

அதன்படி, இரண்டாவது ஆலைக்கான கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் பழனிசாமி, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “ மழை பெய்யாததே பிரச்சனைக்கு காரணம்; மழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. எந்தெந்த பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என ஆய்வு நடைபெற்று வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2021இல் நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

“ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்திற்குள் செயல்படுத்தப்படும். சென்னைக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு திட்டம் தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது. இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும். காவிரி நீரைப் பெற மேலாண்மை ஆணையத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.” என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி.