கட்சிக்கு எதிராக பேசியதாகக் காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தனர். விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சமீபத்தில் பேசியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன்.

கராத்தே தியாகராஜன் பேசியதை தொடர்ந்து, திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு பேசியிருந்தார். திமுகவும்-காங்கிரஸும் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், இருவரின் பேச்சுக்களும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாகப் பேசிவந்த கராத்தே தியாகராஜன், அவரை நேரில் சந்தித்தும் வந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக கராத்தே தியாகராஜன் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.