அடிதட்டு மக்களின் அன்றாட தேவையை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் ரேஷன் அட்டையை அமல்படுத்தியது. சமானிய மக்களின் உணவுசார்ந்த பொருட்தேவையை ரேஷன் அட்டை ஓரளவிற்கு ஈடுசெய்துவருகிறது. ரேஷன் அட்டை மூலம் நாடுமுழுவதும் பயன்பெறுவோரின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும்.

இந்நிலையில் நாடு முழுவதும் விரைவில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில உணவுத் துறைச் செயலாளர்கள் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், “ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், பொதுமக்கள், தங்களது ரேஷன் அட்டையை பயன்படுத்தி நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருந்தும் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிட்ட நியாய விலைக் கடையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தால் ஊழல் குறையும், மேலும் வேலைக்காக ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர்வோருக்கு இந்தத் திட்டம் மிகப்பெரும் அளவில் பயனளிக்கும்” என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். இதன்மூலம் விரைவிலேயே தற்போது உள்ள ரேஷன் அட்டைகள் மாற்றப்பட்டு ஆதார் அட்டை போல நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.