நிதித் துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராகவும் சிறைத் துறை டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழக காவல் துறையின் டிஜிபியாக பதவி வகித்து வந்தவர் டி.கே.ராஜேந்திரன். இவரது பணிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடைகிறது. டிஜிபி நியமனப் பணிகளுக்களை தமிழக அரசு மேற்கொண்டுவந்தது. அதன்படி, பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜே.கே.திரிபாதி, காந்திராஜன், ஜாங்கிட், ஜாபர்சேட், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா, அசுதோஷ் சுக்லா, ஜாபர் சேட் உட்பட 14 பேரின் பட்டியலைத் தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.
இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா ஆகியோர் 6 மாதங்களுக்கு உள்ளாகவே ஓய்வு பெறவுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்பதால் இவர்கள் 4 பேரும் டிஜிபியாகும் வாய்ப்பை இழந்தனர். மீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பதவி வகித்து வரும் ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி தலைவராக உள்ள ஜாபர் சேட் ஆகிய இருவரும் டிஜிபி நியமனப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம் நாளையுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது. இந்நிலையில், நிதித்துறைக்குப் பொறுப்பாக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலிருந்த சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.எஸ்.சி., வேளாண்மை படித்துள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1985ஆம் ஆண்டு பயிற்சி உதவி ஆட்சியராகத் தஞ்சையில் பணிபுரிந்த இவர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்திலிருந்தே நிதித் துறை செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார் கே.சண்முகம்.
திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் நிதித் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளாக நிதித் துறை செயலாளராக உள்ள அவர், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் திறம்படச் செயல்பட்டு நிதிச்சுமையைப் பெருமளவு குறைத்தவர் என்று தகவல்கள் கூறப்படுகிறது.