தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ் மாநாடு உலகில் உள்ள பல நாடுகளில் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவில் மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் முந்தைய மாநாடுகள் நடைப்பெற்றது. முதல்முறையாக அமெரிக்காவில் உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
உலகம் முழுமையிலும் இருந்து சுமார் 6,000 பேர் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, இங்கிலாந்து, மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா… போன்ற பல நாடுகளிலும் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக, இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டிற்கான மைக்கரு ‘கீழடி நம் தாய் மடி’ என்பதாகும். மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன. கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் சிகாகோவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு, கீழடியை மையமாகக் கொண்டு தொடங்கப்படுகிறது. மேலும் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களைத் தவிர, இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா, சாலமன் பாப்பையா, ஜேம்ஸ் வசந்தன், சீர்காழி சிவசிதம்பரம், சல்மா, ஓவியர் மணியன் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.மகேந்திரன், நாட்டுப்புற கலைஞர்கள் ராஜலட்சுமி, இயக்குநர் கரு.பழனியப்பன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதில் சுமார் 2,000 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. அவற்றில் இருந்து 80 கட்டுரைகள் தேர்வு செய்யப்படுகிறது. முன்னதாக உலகத் தமிழ் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி வழங்க தமிழக அரசு முன்வந்தது. இதற்காக மத்திய அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் இதுவரை நிதியை அளிக்க மத்திய அரசு உரிய அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தையும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஏற்றுள்ளார். ஜூலை 6 மற்றும் 7-ந்தேதிகளில் தமிழர்களின் வணிக பொருளாதாரம் தொடர்பான மாநாடும் நடக்கவுள்ளது. மொத்தத்தில் இந்த மாநாட்டிற்கான செலவு சுமார் ரூ.20 கோடியிலிருந்து ரூ.25 கோடி வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது.