தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற ”நான் குற்றம்சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிராகவும் இருந்ததாகக் கூறி ஆயிரம் விளக்கு காவல் துறையினரால் வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறைக்குச் சென்ற வைகோ மே 25ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 10.30 மணியளவில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது நீதிபதி சாந்தி அமர்வு. அதில், வைகோ மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதாக கூறி, அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். ஏற்கனவே அவர் சிறையிலிருந்த 52 நாட்கள் இந்த ஓராண்டில் கழித்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, அபராத பணத்தைச் செலுத்திய வைகோ, மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் அவசர மனு அளித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்தார். அதோடு வைகோ சார்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையில், ஓராண்டு மட்டுமே தண்டனை என்பதால் அவர் எம்பி ஆவதில் சிக்கல் இல்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் நிற்க தடை என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.