வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்த்தபின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளது மருத்துவக் கல்வி இயக்ககம்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து 2019-20ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. இன்று (ஜூலை 9) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வை தொடங்கிவைத்தார். மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், போலி இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது. அதைதொடர்ந்து, சான்றிதழ்கள் சரிபார்த்தபின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.